உள்ளடக்கத்துக்குச் செல்

சோர்சிய எழுத்துக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோர்சிய எழுத்துக்கள் ( Georgian scripts) என்பது சோர்சிய மொழியை எழுதுவதற்குப் பயன்படும் மூன்று எழுத்து முறைகளைக் குறிக்கும். இவை அசோம்தாவ்ரூலி (Asomtavruli), நூசுக்கூரி (Nuskhuri), இம்கெட்ரூலி என்பன. இவை தோற்றத்தில் வேறுபாடாகக் காணப்பட்டாலும், அவற்றின் எழுத்துக்கள் ஒரே பெயர் கொண்டவையாகவும், ஒரே ஒழுங்குமுறை வரிசையில் உள்ளனவாகவும், இடமிருந்து வலமாக எழுதப்படுவனவாகவும் உள்ளன. இம்கெட்ரூலி சோர்சிய இராச்சியத்தின் அரச எழுத்துமுறையாக இருந்ததுடன் பெரும்பாலும் அரச ஆணைகளை எழுதுவதற்கு இது பயன்பட்டது. இது இப்போது தற்கால சோர்சிய மொழிக்கான எழுத்து முறையாக உள்ளதுடன், அம்மொழியுடன் தொடர்புடைய கார்ட்வெலியன் மொழிகளை எழுதுவதற்கும் பயன்படுகின்றது. அசோம்தாவ்ரூலியையும் நூசுக்கூரியையும் சோர்சியப் பழமைவாதத் திருச்சபை மட்டுமே, அதன் சடங்கு சார்ந்த எழுத்துத் தேவைகளுக்கும், படிமவியல் தேவைகளுக்கும் பயன்படுத்தியது.[1]

தோற்ற அடிப்படையில் சோர்சிய எழுத்துக்கள் தனித்துவமானவை. அவற்றின் சரியான தோற்றம் பற்றித் தெரியவில்லை. அமைப்பு அடிப்படையில் எழுத்துக்களின் ஒழுங்குமுறை பெருமளவுக்குக் கிரேக்க எழுத்து முறையை ஒத்துள்ளது. சோர்சிய மொழிக்குத் தனித்துவமான ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களை வரிசையின் கடைசியில் சேர்த்துள்ளனர்.[2][3] தொடக்கத்தில் இந்த எழுத்து முறையில் 38 எழுத்துக்கள் இருந்தன.[4] தற்போதைய சோர்சிய மொழியில் 33 எழுத்துக்களே பயன்படுகின்றன. 5 எழுத்துக்கள் அம்மொழிக்கு இப்போது தேவையற்றவை ஆகிவிட்டன. இவ்வெழுத்து முறையில் பிற கார்ட்வெலிய மொழிகள் பயன்படுத்தும் எழுத்துக்களின் எண்ணிக்கைகள் வேறுபடுகின்றன. மிங்கிரேலிய மொழி 36 எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றது. சோர்சிய மொழியில் தற்போது பயன்பாட்டில் உள்ள 33 எழுத்துக்களுக்கு மேலாக வழக்கொழிந்த ஒரு எழுத்தும், மிங்கிரேலிய மொழிக்குத் தனித்துவமான ஒலிகளுக்காக மேலும் இரு எழுத்துக்களும் இவற்றுள் அடங்குகின்றன. லாசு மொழி, சோர்சிய மொழியில் வழக்கிலுள்ள 33 எழுத்துக்களுடன் ஒரு வழக்கொழிந்த எழுத்தையும், கிரேக்க மொழியிடம் கடன்பெற்ற இன்னொரு எழுத்தையும் சேர்த்து 35 எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றது. நான்காவது கார்ட்வெலிய மொழியான இசுவான் (Svan), பொதுவாக இதை எழுதுவது வழக்கமில்லை. ஆனால், தேவைப்படும்போது மிங்கிரேலிய மொழி பயன்படுத்தும் எழுத்துக்களுடன் ஒரு வழக்கொழிந்த சோர்சிய எழுத்தையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர். சிலவேளைகளில் அம்மொழியின் பல உயிரொலிகளைக் குறிக்கத் துணைக் குறிகளும் (diacritics) பயன்படுகின்றன.[1][5]

2015 இல் இவ்வெழுத்து முறைகளுக்கு சோர்சியாவில் தொடுபுலனாகப் பண்பாட்டு மரபுரிமைக்கான தேசியத் தகுதி வழங்கப்பட்டது.[6] 2016 ஆம் ஆண்டில் இவ்வெழுத்து முறைகள், யுனெசுக்கோவின் மனிதகுலத்தின் தொடுபுலனாகாப் பண்பாட்டு மரபுரிமைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டன.[7]

எழுத்துக்களின் வடிவம்

[தொகு]
மூன்று சோர்சிய எழுத்து முறைகள்: அசோம்தாவ்ரூலி, நூசுக்கூரி, இம்கெட்ரூலி என்பன.

தோற்றம்

[தொகு]

சோர்சிய எழுத்து முறையின் தோற்றம் குறித்து மிகக் குறைந்த அறிவே உள்ளது. சோர்சிய மற்றும் பிறநாட்டு அறிஞரிடையே இதன் தோற்றக் காலம், தோற்றுவித்தவர்கள், தோற்றச் செயற்பாட்டில் இருந்திருக்கக்கூடிய முதன்மைச் செல்வாக்குகள் என்பன குறித்து ஒத்த கருத்து இல்லை.

முதலில் தோன்றிய சோர்சிய எழுத்துமுறை அசோம்தாவ்ரூலி என்கின்றனர். இதன் காலம் குறைந்தது 5 ஆம் நூற்றாண்டு ஆகும். ஏனைய இரண்டு முறைகளும் பிந்திய நூற்றாண்டுகளில் உருவானவை. பெரும்பாலான அறிஞர்கள் சோர்சிய எழுத்து முறையின் தோற்றம் ஐபீரியாவின் கிறித்தவமயமாக்கத்துடன் தொடர்புள்ளது எனக் கருதுகின்றனர்.[8] எனவே, இந்த எழுத்துமுறை பெரும்பாலும் அரசன் மூன்றாம் மிரியனின் கீழ் ஐபீரியா மதமாற்றம் செய்யப்பட்டதற்கும் (326 அல்லது 337), 430 ஆம் ஆண்டின் பிர் எல் கட் கல்வெட்டு[8] எழுதப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கக்கூடும். இது முதலில் சோர்சிய மொழியில் விவிலியத்தையும், பிற கிறித்தவ நூல்களையும் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் பயன்பட்டது. சோர்சியாவையும் பாலத்தீனத்தையும் சேர்ந்த கிறித்தவ மதகுருக்கள் இதைப் பயன்படுத்தினர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Unicode Standard, V. 6.3. U10A0, p. 3
  2. Shanidze 2000, ப. 444.
  3. 3.0 3.1 Seibt, Werner. The Creation of the Caucasian Alphabets as Phenomenon of Cultural History. https://www.academia.edu/1355678. 
  4. Machavariani 2011, ப. 329.
  5. Hüning, Vogl & Moliner 2012, ப. 299.
  6. "Georgian alphabet granted cultural heritage status". Agenda.ge. 10 March 2015. http://agenda.ge/news/31109/eng. பார்த்த நாள்: 30 November 2016. 
  7. "Living culture of three writing systems of the Georgian alphabet". Representative List of the Intangible Cultural Heritage of Humanity. UNESCO. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
  8. 8.0 8.1 Hewitt 1995, ப. 4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோர்சிய_எழுத்துக்கள்&oldid=2866442" இலிருந்து மீள்விக்கப்பட்டது