சோதனை அடையாள அணிவகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோதனை அடையாள அணிவகுப்பு (Test Identification Parade) குற்றவியல் வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும். சிறைச்சாலையில் நடைபெறும் சோதனை அடையாள அணிவகுப்பில் அரசுத் தரப்பு சாட்சியின் பங்கு மிகவும் முக்கியமானது. சோதனை அடையாள அணிவகுப்பு மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பது சாட்சியின் பொறுப்பு.

பல்வேறு நபர்களில் குற்றம் சாட்டப்பட்டவரை அல்லது குற்றம் சாட்டப்படவர்களை அரசுத் தரப்புச் சாட்சியால் அடையாளம் காண முடியுமா என்பதைச் சரிபார்ப்பதே இந்த செயல்முறையின் நோக்கமாகும். இது குற்றச்சூழலுடன் தொடர்புடைய நபரை அடையாளம் காண்பதில் சாட்சியின் நம்பகத்தன்மையை நிறுவும்.[1] [2]

சோதனை அடையாள அணிவகுப்பை நிர்வகிக்கும் சட்டங்கள்[தொகு]

இந்திய சாட்சியச் சட்டம், 1872 இன் பிரிவு 9 மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 இன் பிரிவு 54A ஆகியவை சோதனை அடையாள அணிவகுப்பின் செயல்முறை மற்றும் சட்டப்பூர்வத்தைக் கையாள்கிறது.

சோதனை அடையாள அணிவகுப்பின் நடைமுறைகள்[தொகு]

சிறைச்சாலையில் நடைபெறும் சோதனை அடையாள அணிவகுப்பு மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண, அரசுத் தரப்புச் சாட்சி முக்கியப் பங்கு வகிக்கிறார். எனவே சாட்சி குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது குற்றத்துடன் தொடர்புடைய பிற நபர்களை அடையாளம் காண முடியும் என்று பொறுப்பான அதிகாரிக்கு தெரிவிக்கும் போது, பொறுப்பான அதிகாரி (சிறை அதிகாரி) சோதனை அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்வார்.

சாட்சி குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்த அதே சூழலை உருவாக்க, பொறுப்பாளர் பின்வரும் கேள்விகளை சாட்சியிடம் கேட்க வேண்டும் மற்றும் வழக்கு நாட்குறிப்பில் குறிப்பிட வேண்டும். கேள்விகள்:

  1. சாட்டப்பட்ட குற்றத்தின் விவரம்.
  2. குற்றத்தின் போது நிலவிய ஒளியின் அளவு (பகல், நிலவொளி, தீப்பந்தங்கள், எரியும் மண்ணெண்ணெய், மின்சார அல்லது எரிவாயு விளக்குகள் போன்றவை).
  3. குற்றத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்க்கும் வாய்ப்புகளின் விவரங்கள்; குற்றம் சாட்டப்பட்டவரின் அம்சங்கள் அல்லது நடத்தையில் ஏதேனும் சிறப்பானவை அவரைக் கவர்ந்தவை (அடையாளங்காட்டி).
  4. அவர் குற்றம் சாட்டப்பட்டவரை பார்த்த தொலைவு.
  5. குற்றம் சாட்டப்பட்டவரை அவர் பார்த்த நேரத்தின் அளவு.
  • சோதனை அடையாள அணிவகுப்பு சிறைச்சாலையில் நீதித்துறை நடுவர் முன்னிலையில் நடைபெறும்.
  • சோதனை அடையாள அணிவகுப்பின் போது பொறுப்பான அதிகாரி (சிறை அதிகாரி) அல்லது வேறு எந்த காவல்துறை அதிகாரியும் இருத்தல் கூடாது.
  • நீதித்துறை நடுவர் இல்லாத நிகழ்வில் சமூகத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மரியாதைக்குரிய உறுப்பினர்கள் முன்னிலையில் சோதனை அடையாள அணிவகுப்பு நடத்தலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களுடனோ சாட்சிகளுடனோ இவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த பொறுப்பாளர் உறுதி செய்ய வேண்டும்.
  • குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவுடன், தாமதமின்றி உடனடியாக அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும். ஒரு வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டு, ஒருவர் அல்லது சில குற்றம்சாட்டப்பட்டோர் மட்டுமே கைது செய்யப்பட்டால், கைது செய்யப்பட்டவர்களை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அவர்/அவள் அடையாள அணிவகுப்புக்கு அனுப்பப்படுவார் என்று தெரிவிக்க வேண்டும். சாட்சி அல்லது சாட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பார்வையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் சாட்சி மற்றும் அணிவகுப்புக்காக நிற்கும் நபர்களுக்கு எந்தவிதமான தகவல் தொடர்பும் அல்லது சிக்னல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
  • குற்றம் சாட்டப்பட்டவர் 1:5 அல்லது 1:10 என்ற விகிதத்தில் வித்தியாசமான தோற்றத்துடன் கலக்கப்பட வேண்டும் மற்றும் அவர்கள் அனைவரும் ஒரு வரிசையில் நிற்க வேண்டும்.
  • பல சாட்சிகள் கொண்ட வழக்கில், அடையாள அணிவகுப்பின் போது அவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட வேண்டும் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டும்.
  • குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண்பதில் சாட்சி அல்லது சாட்சிகள் செய்த தவறைக் கூட விசாரணையின் முழுமையான பதிவு இருக்க வேண்டும்.
  • குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் சாட்சிகளை ஒருவரோடொருவர் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • சாட்சிகள் ஒருவருக்கொருவர் பேசியதாக அதிகாரிகள் சந்தேகித்தால், அவர்கள் முழு அணிவகுப்பையும் மாற்றியமைக்க வேண்டும்.
  • அணிவகுப்பின் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதை பதிவு செய்ய வேண்டும்.
  • சோதனை அடையாள அணிவகுப்பு முடிந்ததும், அணிவகுப்பை நடத்திய நீதித்துறை நடுவர் முறையான கையொப்ப சான்றிதழை வழங்க வேண்டும்.
  • அடையாளம் காணும் அணிவகுப்புக்கு முன், குற்றம் சாட்டப்பட்டவரின் தோற்றத்தையோ அல்லது அவரது ஆடைகளையோ மாற்றக் கூடாது என்று சிறை அதிகாரிக்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதனை_அடையாள_அணிவகுப்பு&oldid=3606268" இலிருந்து மீள்விக்கப்பட்டது