சொற்கோவை
சொற்கோவை (vocabulary) என்பது, ஒரு நபருடைய மொழியில் உள்ள பழக்கமான சொற்களின் தொகுதியைக் குறிக்கும். வயது அதிகரிக்க மேம்பாடடையும் சொற்கோவை, தொடர்பாடலுக்கும், அறிவு வளர்ச்சிக்குமான அடிப்படை விடயமாக உள்ளது. விரிவான சொற்கோவையொன்றைப் பெற்றுக்கொள்வது இரண்டாம் மொழிகளைக் கற்றுக்கொள்வதில் உள்ள பெரிய சவாலாகும்.
வரைவிலக்கணமும் பயன்பாடும்
[தொகு]சொற்கோவை என்பதற்குப் பொதுவாக "குறித்த ஒரு நபருக்குத் தெரிந்தனவும், பயன்படுத்தப்படுவனவுமான எல்லாச் சொற்களினதும் தொகுதி" என வரைவிலக்கணம் கூறப்படுகிறது.[1] சொல்லொன்றை அறிந்துகொள்வது என்பது வெறுமனே அதை அடையாளம் காண்பதும் பயன்படுத்துவதும் மட்டுமல்ல. சொல்லறிவை அளப்பதற்குச் சொல்லறிவின் பல்வேறு அம்சங்கள் பயன்படுகின்றன.
ஆக்க அறிவும் பெறு அறிவும்
[தொகு]சொல்லறிவை மதிப்பிடும்போது முக்கியமாக அறிந்துகொள்ளவேண்டியது அந்த அறிவு ஆக்க அறிவா (productive) அல்லது பெறு அறிவா (receptive) என்பதாகும். இந்த எதிர் வகைகளிடையே கூட பெரும்பாலும் தெளிவான வேறுபாடுகள் இருப்பதில்லை. கேட்கும்போதோ, வாசிக்கும்போதோ அல்லது காணும்போதோ பொதுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய சொற்கள் ஒருவரின் பெறு சொற்கோவையினுள் அடங்கும். இவை நன்றாகத் தெரிந்தவை முதல் மட்டுமட்டாகத் தெரிந்தவை வரை இருக்கலாம். ஒருவரின் பெறு சொற்கோவையே முன்குறித்த இரு வகைச் சொற்கோவைகளில் பெரியது. எடுத்துக்காட்டாக ஒரு குழந்தைக்குப் பேசவோ எழுதவோ சைகை காட்டவோ தெரியாமல் இருக்கலாம், ஆனால், அது எளிமையான கட்டளைகளை அறிவதுடன், அதன் சூழலில் புழங்கும் பல சொற்களையும் புரிந்துகொள்கிறது. இந்த வகையில் அக்குழந்தையின் பெறு சொற்கோவை பத்துக்கணக்கில் இருக்கக்கூடும். ஆனால் ஆக்கச் சொற்கோவை குழந்தையிடம் இல்லை. ஆனால், அக்குழந்தை பேசவோ சைகை காட்டவோ கற்றுக்கொள்ளும்போது அதன் சொற்கோவை கூடத் தொடங்குகிறது. ஆக்கச் சொற்கோவை பெறு சொற்கோவையிலும் கூடுதலாக இருப்பதும் சாத்தியமே. எடுத்துக்காட்டாக, ஒரு மொழியை இரண்டாவது மொழியாகக் கற்பவர் நேரடியாக மொழிக்குப் பழக்கப்படுவதன் ஊடாக அன்றிப் படிப்பதன் மூலம் சொற்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்தவும் கூடும். ஆனால், பேசும்போது அச்சொற்களை புரிந்துகொள்வது அவருக்குக் கடினமாக இருக்கும்.
ஆகவே, ஆக்கச் சொற்கோவை என்பது பொருத்தமான சூழலில் எடுத்தாளப்பட்டு பேசுபவர் தெரிவிக்க விரும்பும் பொருளைக் கொடுப்பதாக இருக்கும். பெறு சொற்கோவைகளில் பல அளவுநிலைகள் காணப்படுகின்றன. இவற்றுட் சில அளவுநிலைகளில் உள்ளவை ஆக்கச் சொற்கோவைகளின் பகுதியாகக் கருதப்படக்கூடியவை. ஒரு சொல்லை உச்சரிக்கவும், எழுதவும் தெரிவதால் மட்டும் அச்சொல் சரியாகவோ, துல்லியமாகவோ, விரும்பிய செய்தியைக் கொடுப்பதாகவோ இருக்கும் என்பதில்லை. ஆனால் அது குறைந்த அளவான ஆக்க அறிவை வெளிப்படுத்துகிறது.
அறிவின் அளவுநிலை
[தொகு]மேற் குறிப்பிட்ட ஆக்க - பெறு அறிவு வேறுபாடுகளுக்கு இடையில் பல்வேறு நிலைகளிலான இயலுமைகள் காணப்படுகின்றன. இவை பொதுவாக அறிவின் அளவுநிலைகள் எனப்படுகின்றன. சொல்லறிவில் பல அம்சங்களைக் கற்றுக்கொள்வதனால், குறித்த காலப்பகுதியினூடாக ஒரு சொல் ஒருவரின் சொற்கோவையினுள் வருகிறது என்பதை இது காட்டுகிறது. தோராயமாக இப்படிநிலைகள் வருமாறு:
- சொல்லைக் கண்டதோ கேட்டதோ இல்லை.
- சொல்லைக் கேட்டதுண்டு ஆனால், பொருள் தெரியாது.
- தொனியையோ குரலையோ வைத்து இனங்காண முடியும்.
- சொல்லைப் பயன்படுத்தவும், அதன் பொதுவான அல்லது உணர்த்த விரும்பும் பொருளைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் தெளிவாக விளக்க முடியாது.
- சொல்லின் பயன்பாடு, பொருள் ஆகியவை சரளமாகத் தெரியும்.
அறிவின் ஆழம்
[தொகு]சொல்லறிவின் வேறுபட்ட அளவுநிலைகள் குறிந்த அறிவு கூடுதலான ஆழத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. ஆனால், அதன் வழிமுறைகள் அதிலும் கூடுதலான சிக்கல்தன்மை கொண்டவை. ஒரு சொல்லை அறிவதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றுட் சில மற்றவற்றுடன் படிமுறைத் தொடர்பைக் கொண்டிராதவை. அதனால், குறித்த அம்சம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்வது, "அறிவின் அளவுநிலை" குறிப்பிடுவதுபோல் நேர்கோட்டு வழிமுறையாக அமையாது. இக்கருத்துருவை விளக்குவதற்குப் பல சொல்லறிவுக் கட்டமைப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. அவ்வாறானதொரு கட்டமைப்பு ஒன்பது அம்சங்களைக் கொண்டது.
- எழுத்தியல் - எழுத்து வடிவம்
- ஒலியியல் - பேச்சு வடிவம்
- பொருட் குறிப்பு
- சொற்பொருளியல் - கருத்துருவும், பொருளும்
- register - பயன்பாட்டின் உகப்பு
- ஒருங்குவைப்பு - அண்மைச் சொற்கள்
- தொடர்புள்ள சொற்கள்
- தொடரியல் - இலக்கணச் செயற்பாடு
- உருபனியல் - சொற்பகுதிகள்
சொல்லின் வரைவிலக்கணம்
[தொகு]"சொல்" என்பதற்குப் பல்வேறு வகைகளில் வரைவிலக்கணம் கூறப்படுகிறது. பயன்படுத்தப்படும் வரைவிலக்கணத்தைப் பொறுத்து சொற்கோவையின் அளவு மாறுபடும். மிகப் பொதுவான வரைவிலக்கணத்தின்படி திரிபடையா அல்லது அகரமுதலி வடிவம் மட்டுமே சொல்லாகக் கொள்ளப்படுகிறது. இதன்படி நட என்னும் வடிவம் உள்ளடக்கப்படும். ஆனால், நடந்தது, நடக்கிறான், நடப்பேன் போன்ற சொற்கள் உள்ளடக்கப்படா. பெரும்பாலான வேளைகளில் மக்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், நிறுவனங்களின் பெயர்கள் போன்றவை சொல்லுக்கான வரைவிலக்கணத்துக்குள் அடக்கப்படுவதில்லை. சொற்கோவை அளவு குறித்த ஆய்வுகளில் அடிக்கடி பயன்படும் இன்னொரு வரைவிலக்கணம் சொற்குடும்பம் சார்ந்தது. இது ஒரு அடிச்சொல்லிலிருந்து உருவாகும் எல்லாச் சொற்களையும் உள்ளடக்கியது. பயன்படுத்தப்படும் வரைவிலக்கணத்தைப் பொறுத்து சொற்கோவை அளவு 200,000 தொடக்கம் 10,000 வரை மாறுபடக்கூடும்.[2]
சொற்கோவை வகைகள்
[தொகு]கூடிய சொற்களைக் கொண்ட கோவையிலிருந்து குறைவான சொற்களைக் கொண்ட கோவை என்னும் ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளது.[3][4]
வாசிப்புச் சொற்கோவை
[தொகு]எழுத்தறிவு கொண்ட ஒருவரின் சொற்கோவை வாசிக்கும்போது அவர் இனங்காணக்கூடிய எல்லாச் சொற்களினதும் தொகுதி. கேட்பதிலும் பார்க்க வாசிப்பதன் மூலமே ஒருவர் கூடுதலான சொற்களை அறியமுடிவதால் இதுவே பொதுவாக மிகப் பெரிய சொற்கோவை வகையாக உள்ளது.
கேள்விச் சொற்கோவை
[தொகு]ஒருவரின் கேள்விச் சொற்கோவை இன்னொருவர் பேசுவதைக் கேட்கும்போது இனங்காணக்கூடிய எல்லாச் சொற்களினதும் தொகுதி. ஏற்கெனவே அறிந்திராத சொற்களைக்கூட அவற்றின் தொனி, பேசுபவரின் உடலசைவு, உரையாடலின் தலைப்பு, உரையாடலின் சமூகச் சூழல் ஆகியவற்றைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ள முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cambridge Advanced Learners Dictionary". Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2017-12-29.
- ↑ Brysbaert M, Stevens M, Mandera P and Keuleers E (2016) How Many Words Do We Know? Practical Estimates of Vocabulary Size Dependent on Word Definition, the Degree of Language Input and the Participant’s Age. Front. Psychol. 7:1116. doi: 10.3389/fpsyg.2016.01116 [1]
- ↑ Barnhart, Clarence L. (1968).
- ↑ The World Book Dictionary. Clarence L. Barnhart. 1968 Edition. Published by Thorndike-Barnhart, Chicago, Illinois.