சைலேந்திர குமார் சிங்
எஸ். கே. சிங் S. K. Singh | |
---|---|
![]() சைலேந்திர குமார் சிங் | |
17th இராசத்தானின் ஆளுநர் | |
பதவியில் 6 செப்டம்பர் 2007 – 1 டிசம்பர் 2009 | |
முன்னையவர் | ஏ. ஆர். கிட்வாய் |
பின்னவர் | பிரபா ராவ் |
12வது அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநர் | |
பதவியில் 15 ஏப்ரல் 2007 – 3 செப்டம்பர் 2007 | |
முன்னையவர் | கே. சங்கரநாராயணன் (பொறுப்பு) |
பின்னவர் | கே. சங்கரநாராயணன் (பொறுப்பு) |
பதவியில் 16 டிசம்பர் 2004 – 23 ஜனவரி 2007 | |
முன்னையவர் | வி. ச. பாண்டே |
பின்னவர் | எம். எம். ஜேக்கப் (பொறுப்பு) |
16வது இந்திய வெளியுறவுச் செயலர் | |
பதவியில் 16 பிப்ரவரி 1989 – 19 ஏப்ரல் 1990 | |
பிரதமர் | இராஜீவ் காந்தி வி. பி. சிங் |
அமைச்சர் | பி. வி. நரசிம்ம ராவ் விசுவநாத்பிரதாப் சிங் ஐ. கே. குஜரால் |
முன்னையவர் | இளைய கே. பி. எஸ். மேனன். |
பின்னவர் | முகுந்த் துபே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சைலேந்திர குமார் சிங் 24 சனவரி 1932 |
இறப்பு | 1 திசம்பர் 2009 தில்லி, இந்தியா | (அகவை 77)
துணைவர் | மஞ்சு |
பிள்ளைகள் | சசாங்க், கனிஷ்கா |
வாழிடம் | செய்ப்பூர், இராசத்தான் |
சைலேந்திர குமார் சிங் (Shilendra Kumar Singh) சுருக்கமாக எஸ். கே. சிங் (24 ஜனவரி 1932 - 1 டிசம்பர் 2009) ஓர் இந்திய இராஜதந்திரி ஆவார். இவர் டிசம்பர் 2004 முதல் செப்டம்பர் 2007 வரை அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராகவும், செப்டம்பர் 2007 முதல் இராசத்தானின் ஆளுநராகவும் டிசம்பர் 2009 வரை பணியாற்றினார். இவர், தான் பதவியில் இருக்கும்போதே இறந்தார்.
சிங் 1989 முதல் 1990 வரை இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக சேருவதற்கு முன்பு, இவர் தில்லியில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்திய மேம்பட்ட ஆய்வு நிறுவனமான சிந்தனைக் குழுவின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் 19 ஆகஸ்ட் 2007 அன்று இராசத்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1] 4 செப்டம்பர் 2007 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக தனது பதவியை விட்டு விலகி,[2] செப்டம்பர் 6 அன்று ராஜஸ்தானின் ஆளுநராகப் பதவியேற்றார்.[3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]சிங் முந்தைய ஐக்கிய மாகாணங்களின் ஜமீந்தாரின் மகனும், ஆல்வாரின் முன்னாள் திவானும் ஆவார். பள்ளி மற்றும் கல்லூரி முழுவதும் முதலிடம் பெற்ற இவர், ஆக்ரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஆக்ராவின் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவராக இருந்தார். அங்கு இவர் வரலாறு, சமசுகிருதம் மற்றும் இந்தி ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பயின்று வரலாற்றில் முதுகலைப் பட்டமும், சட்டப்பட்டமும் பெற்றார். அதன்பிறகு கேம்பிரிச்சு திரித்துவக் கல்லூரியில் பாரசீக மற்றும் சர்வதேச சட்டத்தைப் படித்தார்.[4]
சொந்த வாழ்க்கை
[தொகு]சிங், மஞ்சு என்பவரை மணந்தார். இவரது இளைய மகன் கனிஷ்கா சிங் இராகுல் காந்தியின் அரசியல் உதவியாளராக உள்ளார். இவரது மூத்த மகன் சசாங்க் சிங் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். தற்போது மும்பையில் முதலீட்டு வங்கியாளராக பணிபுரிகிறார்.[5]
தொழில் வாழ்க்கை
[தொகு]ஆளுநரின் பதவிக்காலம்
[தொகு]அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்தபோது, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் இறையாண்மை உட்பட்ட பகுதி என்று சிங் உரத்த குரல் கொடுப்பவராக இருந்தார். அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்யத் தேவையான உள்நாட்டு நுழைவு அனுமதிச் சீட்டு மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் போராடினார். மேலும், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்க மாநிலத்தில் ஒரு விமான நிலையத்தை கட்டுவதன் மூலமும், தொடருந்து பாதையை அமைப்பதன் மூலமும், சாலை அமைப்பை மேம்படுத்துவதன் மூலமும் இவர் கடுமையாக உழைத்தார்.
தூதராக தொழில் வாழ்க்கை
[தொகு]1989 பிப்ரவரியில் சிங் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் தனிப்பட்ட தர-I தூதர் பதவியை வகித்தார், இது இந்திய வெளியுறவு சேவையில் மிக உயர்ந்த பதவியாகும். வெளியுறவுச் செயலாளராக சேருவதற்கு முன்பு, இவர் 1985 முதல் 1989 வரை பாக்கிஸ்தானுக்கான இந்தியாவின் தூதராக மிக நீண்ட காலம் பணியாற்றினார். 1982 முதல் 1985 வரை ஆஸ்திரியாவின் தூதராகவும், 1979 முதல் 1982 வரை கூடுதல் வெளியுறவு செயலாளராகவும், 1977 முதல் 1979 வரை ஆப்கானித்தானுக்கான தூதராகவும், 1974 முதல் 1977 வரை ஜோர்தான், லெபனான் மற்றும் சைப்பிரசுக்கு ஒரே நேரத்தில் தூதராகவும் பணியாற்றினார். 1969 முதல் 1974 வரை இந்திய அரசின் மிக நீண்ட காலம் பணியாற்றிய அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இருந்தார். 1968-69 இல் வர்த்தக அமைச்சகத்தில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநராகப் பணியாற்றினார்.
சிங் 1954 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு சேவையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1956 முதல் 1959 வரை ஈரானில் மூன்றாவது செயலாளராக இருந்த இவர், அதே நேரத்தில் பாரசீக மொழியைப் படிக்க தெகுரான் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1959 முதல் 1962 வரை தில்லியில் உள்ள வெளியுறவு அலுவலகத்தின் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டார். 1962 முதல் 1968 வரை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் உறுப்பினராக இருந்தார்.
77 பேர் கொண்ட குழுவின் தலைவராகவும், வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆளுநர்கள் குழுவில் இந்தியாவின் ஆளுநராகவும் பணியாற்றினார். ஐ. நா பொதுச் சபை மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்திற்கான 19 இந்திய பிரதிநிதிகள் குழுக்களில் சிங் உறுப்பினராக இருந்துள்ளார். காமன்வெல்த் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, தென்னாப்பிரிக்கா, கென்யா, அல்ஜீரியா, லெசோதோ, மலாவி மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளில் பொதுத் தேர்தல்கள் மற்றும் இலங்கை அதிபர் தேர்தல்களை சிங் கண்காணித்துள்ளார்.[6] சிங் தனது தலைமுறை இந்திய இராஜதந்திரிகளில் மிகவும் புகழ்பெற்றவர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.
சிங் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் வரலாறு கற்பித்துள்ளார். தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியராகவும், கல்விக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
சிங் சர்வதேச உறவுகள், புவிசார் அரசியல் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அடிக்கடி எழுதி வ்ந்தார்.
இறப்பு
[தொகு]சிறுது காலம் நோய்வாய்பட்டிருந்த சிங், தனது 77வது வயதில் 2009 டிசம்பர் 1 அன்று தில்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இறந்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tiwari appointed new Andhra governor", IST, TNN (The Times of India), 20 August 2007.
- ↑ "Sankaranarayan takes additional charge as Arunachal Governor", PTI (The Hindu), 4 September 2007.
- ↑ "S.K. Singh takes oath as Governor of Rajasthan", PTI (The Hindu), 6 September 2007.
- ↑ "SK Singh's education". www.timesofindia.indiatimes.com/india. Retrieved 2019-12-03.
- ↑ "Archive News". தி இந்து. 2009-02-20. Archived from the original on 2012-11-07. Retrieved 2016-12-01.
- ↑ "Commonwealth to Observe Presidential and Parliamentary Elections in Sierra Leone" பரணிடப்பட்டது 5 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம், Commonwealth Secretariat, 16 February 1996.
- ↑ The Hindu (2 December 2009). "S.K. Singh, Rajasthan Governor, dead" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 15 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240115160617/https://www.thehindu.com/news/national/other-states/S.K.-Singh-Rajasthan-Governor-dead/article16851174.ece. பார்த்த நாள்: 15 January 2024.