சைலபுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைலபுத்ரி (Shailaputri), என்பதற்கு மலைகளின் மகள் என்பது பொருளாகும். இவர், இந்து தெய்வமான துர்காவின் வெளிப்பாடாக அறியப்படுகிறார். [1] இந்த வடிவம், நவராத்திரியின் முதல் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் வடிவங்களில் ஒன்றாக உள்ளது. [2]

இவர், சதி, [3] பவானி, பார்வதி அல்லது ஹேமாவதி என்றும் அழைக்கப்படுகிறார். தாய் சைலபுத்ரி என்பது அன்னை இயற்கையின் முழுமையான வடிவம் ஆகும்.

உருவ அமைப்பு[தொகு]

சைலபுத்ரி தேவியின் நெற்றியில் பிறை நிலவு உள்ளது. இவரது வலது கையில் திரிசூலத்தையும் இடது கையில் தாமரை மலரையும் வைத்திருக்கிறார். இவர், நந்தி (காளை) மீது அமர்ந்து கொண்டு மலையில் சவாரி செய்பவராக காட்சியளிக்கிறார். [1]

வரலாறு[தொகு]

சைலபுத்ரி துர்கா தேவியின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் மலைகளின் மன்னர் “பர்வத ராஜனின் மகளாவார். மலைகளின் அரசன் என்று அறியப்படுகின்ற இமயத்தின் அரசனான ஹிமவானின் மகள் என்பதால் ஹேமாவதி என்கிற பெயர் இவருக்கு ஏற்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. [4]

பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் சக்தியின் உருவகமாக இருக்கும் இவர், ஒரு காளையின் மீது அமர்ந்து சவாரி செய்பவராகவும், ஒரு திரிசூலத்தையும் தாமரையையும் தன் இரு கைகளில் வைத்துக் கொண்டிருப்பவராகவும் காணப்படுகிறார். முந்தைய பிறப்பில், இவர் தக்கனின் மகள் ஆவார். [3] ஒருமுறை தக்‌கன் ஒரு பெரிய யாகத்தை ஏற்பாடு செய்தான். அதற்கு சிவனை அழைக்கவில்லை. ஆனால் சதி பிடிவாதமாக இருந்ததால், அங்கு சென்றார். அதன்பிறகு தக்கன் சிவனை அவமதித்தார். கணவனை அவமதித்ததை சதியால் சகித்துக்கொள்ள முடியாமல் யாகத்தின் நெருப்பில் தன்னைத்தானே எரித்துக் கொண்டாள். பிற பிறவிகளில், பார்வதி - ஹேமாவதி என்ற பெயரில் இமயமலையின் மகளாகி சிவனை மணந்தார். உபநிடத்தின் கூற்றுப்படி, அவர் இந்திராதி தேவர்களுக்கெல்லாம் மேலானவராக விளங்கினார். இந்திரன் மற்றும் தேவர்கள் அனைவரும் தங்களின் அகங்காரம் நீங்கப்பெற்று, வெட்கப்பட்டு அவர்கள் தலை குனிந்து,சதியிடம், "உண்மையில், நீங்கள் சக்தி, நாங்கள் அனைவரும் - பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் உங்களிடமிருந்து சக்தியைப் பெறுவதன் மூலம் வல்லவர்களாக உள்ளனர் " என்று பிரார்த்தனை செய்தனர்.

சிவ புராணம் / தேவி பாகவத புராணம்[தொகு]

சிவ புராணம் மற்றும் தேவி-பாகவத புராணம் போன்றவற்றில் காணப்படும் சில வசனங்களில் அன்னை தேவியின் கதை பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: மாதா பகவதி தனது முந்தைய பிறப்பில் தக்கன் பிரஜாபதியின் மகளாகப் பிறந்தார். பின்னர் சதி, என்கிற பெயருடன் இவர், சிவனை மணந்தார். ஆனால் இவரது தந்தை பிரஜாபதி தக்கன் ஏற்பாடு செய்த ஒரு யாக விழாவில், இவரது தந்தை பிரஜாபதி தக்கனால் இவரது கணவர் சிவனை அவமதித்ததை தாங்க முடியாததால், இவரது உடல் யோக நெருப்பில் எரிந்தது என்ற தகவல் உள்ளது.

நவ துர்கா[தொகு]

இவரது அடுத்த பிறப்பில், பர்வத ராஜனான இமயமலையின் மகள் பார்வதி தேவி என்றும், நவ துர்காக்களில் இவர் சைலபுத்ரி என்றும் குறிப்பிடப்படுகிறார். இவர் மீண்டும் ஹேமாவதி என்று அழைக்கப்பட்டார். இவரது ஹேமாவதி அம்சத்தில், இவர் அனைத்து முக்கிய கடவுள்களையும் தோற்கடித்தார். இவரது முந்தைய பிறப்பைப் போலவே, இந்த வாழ்க்கையிலும் மாதா சைலபுத்ரி (பார்வதி) சிவனை மணந்தார் என்று கூறப்படுகிறது. [5]

உடற்சக்கரத்தின் சக்தி[தொகு]

இவர், உடற்சக்கரத்தின் வேராக உள்ளார். தேவி, விழித்தவுடன், மேல்நோக்கி தனது பயணத்தைத் தொடங்குகிறார். நந்தி மீது அமர்ந்து முலதாரச் சக்கரத்திலிருந்து தனது முதல் பயணத்தை மேற்கொள்கிறார். இவருடைய விழித்திருக்கும் சக்தியானது, ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் சிவனைத் (சுயம்) தேடத் தொடங்குவது அல்லது சிவனை நோக்கி நகர்வது எனப் பொருள்படும். எனவே, நவராத்திரி பூசையில் முதல் நாள் யோகிகள் தங்கள் மனதை முலாதாரத்தில் கவனம் செலுத்துகிறார்கள். இது அவர்களின் ஆன்மீக ஒழுக்கத்தின் தொடக்க புள்ளியாகும். அவர்கள் இங்கிருந்து தங்கள் யோக சாதகத்தைத் தொடங்கினர். சைலபுத்ரி என்பது யோக தியானத்தில், சுயத்திற்குள் உணரப்பட வேண்டிய முலாதரா சக்தியாக உள்ளது. இது ஆன்மீக நிலைப்பாட்டின் முழுமையாக கருதப்படுகிறது. மேலும், பூர்ண பிரகிருதியான துர்காவின் சைலபுத்ரி அம்சத்திலிருந்து முழு உலகமும் பலம் பெறுகிறது எனச் சொல்லப்படுகிறது.

கோயில்கள்[தொகு]

  • இந்தியாவின் உத்தரபிரதேசம், வாரணாசி, மர்ஹியா காட், ஏ -40 / 11 இல் சைலபுத்ரி கோயில் அமைந்துள்ளது. [5]
  • இந்தியாவின் மகாராஷ்டிராவின் மும்பை அஹமதாபாத் நெடுஞ்சாலை, வசாய் விரார் பிராந்தியத்தில் உள்ள ஹெடாவ்டே கிராமத்தில் ஹெடாவ்டே மகாலட்சுமி கோயில் அமைந்துள்ளது. [6]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலபுத்ரி&oldid=2926290" இருந்து மீள்விக்கப்பட்டது