சையத் சகோதரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய வரலாற்றில் சையத் சகோதரர்கள் எனப்படுவோர், சையத் அசன் அலி கான் பர்கா, சையத் உசைன் அலி கான் பர்கா என்னும் இரு சகோதரர்கள் ஆவர். இவர்கள் ஈராக்கில் உள்ள வாசிட் என்னும் இடத்தைச் சேர்ந்த அப்துல் ஃபாரா என்பவரின் வழிவந்தோராவர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அப்துல் ஃபாராவும் அவரது 12 ஆண் மக்களும், முகலாயப் பேரரசுக்கு வந்து பட்டியாலாவுக்கு அருகில் உள்ள நான்கு ஊர்களில் குடியேறினர். காலப்போக்கில் இந் நான்கு ஊரிகளிலும் குடியேறிய இவர்களது வழிவந்தோர் அவ்வூர்களின் பெயரைப் பெற்ற நான்கு தனித்தனிக் கிளைகள் ஆயினர். பின்னர் இவர்கள் யமுனை ஆற்றைக் கடந்து, மீரத்துக்கும் சகாரன்பூருக்கும் இடையே குடியிருப்புக்களை ஏற்படுத்தினர். இப்பகுதிகள் வளமற்ற மணற் பகுதிகளாக இருந்தன. அக்காலத்தில் இப்பகுதிகளில் மிகக் குறைவான மக்களே வாழ்ந்திருக்கக் கூடும்.

பேரரசர் அக்பர் காலத்தில் இருந்து வீரமும், துணிவும், கர்வமும், ஆடம்பரத்தன்மையும் கொண்ட இக் குலத்தைச் சேர்ந்தவர்கள் புகழ் பெற்ற படைத் தலைவர்களாக இருந்தனர். இத்துணிவு காரணமாக முகலாயரின் முன்னணிப் படைகளுக்குத் தலைமை தாங்கிச் செல்லும் மரபு வழி உரிமை இவர்களுக்குக் கிடைத்தது.

சையத் சகோதரர்களின் தொடக்கப் பதவிகள்[தொகு]

முகலாயப் பேரரசின் வரலாற்றில் சையத் சகோதரர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குப் பெயர் பெற்ற சையத் அசன் அலி கான் பர்காவும், சையத் உசைன் அலி கான் பர்காவும் மேற்படி குலத்தின் புகழ்பெற்ற பர்கா கிளையின் சையத் கால்வழி வந்தவர்கள் என்ற பெருமையுடன், அவர்களது தனிப்பட்ட வீரச் செயல்களும் அவர்களை முன்னணிக்குக் கொண்டுவர உதவின. இவர்கள் பேரரசர் ஆலம்கீருடைய ஆட்சிக்காலத்தில், தக்காணத்து பீசப்பூர், அச்மேர் ஆகிய பகுதிகளுக்கு ஆளுனராக இருந்த ஒருவருடைய மக்கள். சையத் மியான் எனப்பட்ட சையத் அப்துல்லா கான் என்பவரே அவர். சையத் மியான் படிப்படியாக உயர்ந்து பிற்காலத்தில் பேரரசர் பகதூர் சா ஆன இளவரசர் முகம்மத் முவாசம் சா ஆலமுடைய நேரடிச் சேவையில் அமர்த்தப்பட்டார்.

பிற்காலத்தில் அப்துல்லா கான் எனப்பட்ட சையத் அசன் அலி கான் பர்காவும், அவரது சகோதரர் சையத் உசைன் அலி கான் பர்காவும் சையத் மியானின் பல ஆண்மக்களுள் இருவர். 1712 ஆம் ஆண்டளவில் இவர்கள் முறையே 46, 44 வயதுகளை உடையவர்களாக இருந்தனர். 1697 அல்லது 1698 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூத்த சகோதரர் காந்தேசு மாகாணத்தைச் சேர்ந்த சுல்தான்பூர், பங்லானாவில் உள்ள நாசர்பர் ஆகிய பகுதிகளிலும்; பின்னர் அதே மாகாணத்தின் சியுனி - ஓசன்காபாத் பகுதியிலும் உயர் பதவியில் இருந்தார். அதே மாகாணத்தின் வேறு பகுதிகளிலும் சிலகாலம் பணியாற்றிய பின்னர், ஔரங்கபாத்தின் பொறுப்பு இவரிடம் விடப்பட்டது. இளைய சகோதரர், அவரது அண்ணனிலும் கூடிய வல்லமை கொண்டவராகக் கருதப்பட்டவர். இவர் பேரரசர் ஆலம்கீரின் ஆட்சிக் காலத்தில் அச்மேர் மாகாணத்தின் ரந்தம்பூர், ஆக்ரா மாகாணத்தின் இந்தாவுன் - பயானா ஆகிய பகுதிகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.

பேரரசர் பகதூர் சாவின் மூத்த மகன் இளவரசர் முயிசுத்தீன் சகாந்தர் சா 1694/95 காலப்பகுதியில் முல்த்தான் மாகாணத்துக்குப் பொறுப்பாக அமர்த்தப்பட்டபோது சகோதரர்கள் இருவரும் அவருடன் சென்றனர். பலூச்சி சமீந்தார் மீதான படையெடுப்புக்கான பொறுப்புத் தமக்குத் தரப்படாததை அடுத்து அவர்கள் இளவரசரின் பணியினின்று நீங்கி லாகூருக்குச் சென்றனர். அங்கே அவர்கள் வறுமையில் இருந்ததாகத் தெரிகிறது. பேரரசர் ஆலம்கீர் இறந்ததும், இளவரசர் முகம்மத் முவாசம் சா ஆலம், பேரரசுப் பதவியைக் கைப்பற்றுமுகமாக ஆக்ராவுக்குச் செல்லும் வழியில் லாகூருக்கு வந்தார். அங்கு சென்ற சையத் சகோதரர்கள் அவரது பணியில் இணைந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_சகோதரர்கள்&oldid=2888242" இருந்து மீள்விக்கப்பட்டது