சேர்வராயனின் ஆறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர்வராயன் மலைத்தொடர்

சேர்வராயனின் ஆறுகள் (The rivers of Shevaroy Hills) என்பது சேர்வராயான் மலைகளில் தோன்றும் ஆறுகளைக்க குறிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும், இம்மலைத்தொடர் உள்ளது. இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். இது அம்மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகி, தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இவை கடல் மட்டத்திலிருந்து, 4000 - 5000 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. மலைப் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர் என்பதால் இயற்கை வளங்கள் பேணப்படுகின்றன.[1].

ஆறுகளின் தோற்றம்[தொகு]

சேர்வராயன் மலைகளின் தென் சரிவு, மிகவும் செங்குத்தாக உயர்ந்திருப்பதால் இங்கு ஆறுகள் ஏற்படுவற்கு வாய்ப்பு மகிவும் குறைவாக இருக்கின்றன. ஆகையால், மலைகளின் வடசரிவிலேயே, பல சிற்றாறுகள் தோன்றி ஓடுகின்றன. இந்த சிற்றாறுகளில் எப்பொழுதும் நீர்வரத்து இருப்பதில்லை. மழைக்காலங்களில் மட்டுமே, நீர்ப் பெருக்கைக் காண முடியும் .

  1. தொப்பூர் ஆறு
  2. சரபங்க நதி
  3. வாணியாறு என அவை இங்குள்ள மக்களால் அழைக்கப் படுகின்றன.

தொப்பூர் ஆறு[தொகு]

தொப்பூர் ஆற்றிற்கு, வேப்பாடி ஆறு என்ற மற்றொரு பெயரும் உண்டு. காரணம் யாதெனில், இதன் பாதையில் வரும் பள்ளத்தாக்கில், வேப்பாடி என்ற சிற்றுார் உள்ளது.இது சேர்வராயன் மலைகளில் உள்ள ,முலுவி என்ற இடத்தில், இந்த சிற்றாறு தோன்றுகிறது. பின் இவ்வாறு, வடகிழக்கு நோக்கி, மல்லாபுரம் மலைப்பாதை செல்லும் வழியாக ஓடுகின்றது. மல்லாபுரத்திற்கு அருகில் இவ்வாறு மேற்கு நோக்கித் திரும்பி ஓடி, சோழப் பாடி என்ற இடத்தில் காவிரியோடு கலக்கிறது.

சரபங்க நதி[தொகு]

சரபங்கர் என்ற ஒரு முனிவர் தாம் செய்த தீவினைக்குப் பரிகாரம் தேடுவதற்காக, இதன் கரையிலிருந்து தவமியற்றிய காரணத்தால் இந்த ஆறு இப்பெயர் பெற்றது என்பர். ஓமலூரில் இரண்டு ஓடைகள் ஒன்று சேர்ந்து இந்த ஆறு உருவாகிறது. அவ்வோடைகள் இரண்டும் கீழ் ஆறு, மேல் ஆறு என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. கீழ் ஆற்றைப் பெரியாறு என்றும் அழைப்பர். இது சேர்வராயன் மலையிலுள்ள ஏற்காட்டில் தோன்றுகிறது. இவ்வாறு ஏற்காட்டில் அமைந்துள்ள ஏரியில் தோன்றி, கிளியூர் நீர்வீழ்ச்சியில் தாவிக்குதித்து, மேற்கே திரும்பி ஓமலூரை நோக்கி ஓடுகிறது.

மேல் ஆறானது, சேர்வராயன் மலையின் தென்சரிவில் தோன்றிக் காடையாம்பட்டி மலைப் படுகையின் வழியாக ஓடிவருகிறது. பட்டிப் பாடி ஆறு, பறியன் குழி ஆறு, கூட்டாறு, காட்டாறு எனப் பல பெயர்கள் இதற்கு வழங்குகின்றன. இருப்புப் பாதையைக் கடந்தவுடன், இவ்வாறு தெற்கு நோக்கித் திரும்பியோடி, பெரியாற்றில் கலக்கிறது. இவ்விதமாக இவ்விரண்டு ஆறுகளால் உண்டாக்கப்பட்ட சரபங்க நதி, இடைப்பாடி, திருச்செங்கோடு ஆகிய ஊர்களுக்கு அண்மையிலுள்ள, பல ஏரிகளை நிரப்பிக் கொண்டு, காவேரிப்பட்டிக்கு அருகில் காவிரியுடன் கலக்கிறது.

வாணியாறு[தொகு]

இது சேர்வராயன் மலையில் உள்ள கோடை வாழிடமான, ஏற்காட்டுக்கு அருகில் தோன்றி அழகாக ஓடுகிறது. வெங்கட்ட சமுத்திரச் சமவெளியை அடைந்து, பாதையைக் கடக்கிறது. அருரைக் கடந்ததும், பாம்பாற்றாேடு கலந்து சிறிது தூரத்தில் பெண்ணையாற்றாேடு இணைகிறது.

வனங்களின் வளம்[தொகு]

காடுகள் எங்குபார்த்தாலும் மலைத்தொடர்கள் மண்டிக் கிடப்பதால், சேலம் மாவட்டத்தில் காடுகளுக்குப் பற்றாகுறை இல்லை. சேர்வராயன் மலைகள் மீதும் அடர்ந்த காடுகள் உள்ளன. இருப்பினும், முன்பை விட, காடுகளின் அடர்த்தி குறைந்து வருகின்றன. நாட்டில் காடுகள் நிறைய இருந்தால்தான் மழைவற்றாது பெய்யும் என்று அறிவியற்கலைஞர்கள் கூறினாலும், சேலம் மாவட்டத்தில் போடப்பட்ட இருப்புப்பாதைப் போக்குவரத்தால், காடுகளில் உள்ள பழமையான மரங்கள் அழிக்கப் பட்டன. 1859-60ஆம் ஆண்டில் மட்டும் இருப்புப்பாதைகள் திட்டம்[2] அமைப்பதற்காக வாங்கப்பட்ட கிடை மரங்களின் எண்ணிக்கை 2,45,743. அவைகளைக் காடுகளில் வெட்டி, அவற்றின் அடிமரங்கள் மட்டும் பயன்படுத்தப் பட்டன. தற்போது அதற்கு மாற்றாக சிமெண்டு கட்டைகள் பயன்படுத்துகிறது. அதனால் காடுவளம் ஓரளவு காக்கப் பட்டன.மேலும், கனிம வளமான பாக்சைட்டு பெருமளவு இருப்பதால், மழைநீர் உறிஞ்சி கொள்ளப் பட்டு காக்கப் பட்டது. இதற்கு சேலம் நண்பர்கள் குழுமம் போராடி வெற்றி பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson Hunter, Sir William; Sutherland Cotton, James; Sir Richard Burn, Sir William Stevenson Meyer. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
  2. சில ஆயிரம் கிலோ மீட்டர்கள் உள்ள சேலம் இருப்புப்பாதை கோட்டம்

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Servarayan Hills
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


இப்பக்கங்களையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்வராயனின்_ஆறுகள்&oldid=2854789" இலிருந்து மீள்விக்கப்பட்டது