உள்ளடக்கத்துக்குச் செல்

சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்துவன் என சுருக்கமாக குறிக்கப்படும் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை கரூவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சேர அரசன். இவரே பதிற்றுப்பத்து 7-ஆம் பத்தின் பாட்டுடைத் தலைவனான செல்வக்கடுங்கோ வாழியாதனின்[1] தந்தை அந்துவன் பொறையன். இவர் மனைவி 'பொறையன் பெருந்தேவி'. இவள் 'ஒருதந்தை' என்பவனின் மகள்.[2]

பதிற்றுப்பத்து பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் குறிப்புகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது அந்துவன் என்பவனும், அந்துவன் சேரல் இரும்பொறை என்பவனும் ஒருவனே என்று [3]

இவனது செவிலித்தாய் அந்துவன் செள்ளை. மையூர் கிழானின் மகளாகிய இவள்[4] குட்டுவன் இரும்பொறையை மணந்து பெற்ற மகனே பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை[5].

"மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி அந்துவன்" எனப் பதிகத்தில் வரும் குறிப்பால் இவன் அரசன் என்பதும், நன்கு கற்றவன் என்பதும் தெளிவாகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே[6]. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.

அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான்[7]. அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.

இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து[8]. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.[9].


இலக்கியத்தில்

[தொகு]

பதிற்றுப்பத்து ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதனின் தந்தை இவன். [10] இவனது மனைவி பெயர் தெரியவில்லை. எனவே இவளை இந்தப் பொறையனின் பெருந்தேவி என்றே குறிப்பிட்டுள்ளனர். [11]

இவன் காலத்தில் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி என்பவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டுவந்தான். சோழன் சேரனைக் காணக் கருவூர் வந்தான். சேரனின் வேல் வீரர்கள் நட்புக்காக வந்துள்ளமை அறியாது தாக்கினர். சோழன் மார்பில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அம்புகள் சிதைத்தன. சோழனின் பட்டத்து யானை படைக்கடலின் நடுவே நாவாய்க்கப்பல் போலவும், வான மீன்கூட்டத்துக்கு இடையே நிலா போலவும், வந்துகொண்டிருந்தது. நாவாயைத் தாக்கும் சுறாமீன் கூட்டம் போல வாள்வீரர்கள் யானையைச் சூழ்ந்து மொய்த்தனர். அதனால் சோழனின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. யானைமீதிருந்த சோழனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்தக் கோலத்தைக் கருவூர் வேள்மாடத்து இருந்த சேரனும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் கண்டனர். சோழன் துன்பம் இல்லாமல் திரும்ப வேண்டும் எனப் புலவர் வாழ்த்தினார்.[12] (இந்த வாழ்த்துதலின் உட்பொருளைச் சேரன் உணர்துகொண்டான். தானே மதயானை முன் சென்று அதனை அடக்கிச் சோழனைக் காப்பாற்றினான்.)

ஒப்பிட்டுக்கொள்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 'நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால் செல்வக் கோவே சேரலர் மருக' - பதிற்றுப்பத்து - ஏழாம் பத்து பாடல் எண் 63, வரி 15-16
  2. 'மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடுநுண் கேள்வி அந்துவற்(கு) ஒருதந்தை ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்' - பதிற்றுப்பத்து ஏழாம் பத்து - பதிகம் (கபிலர்)
  3. https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/78
  4. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 பக்கம் 102. http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=294&pno=102
  5. 'குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன் வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்றமகன்' பதிற்றுப்பத்து - ஒப்பதாம் பத்து, பதிகம் - பெருங்குன்றூர்கிழார்
  6. டான் பொஸ்கோ
  7. டான் பொஸ்கோ
  8. செல்வம், வே. தி, 2002. பக். 91
  9. டான் பொஸ்கோ
  10. பதிற்றுப்பத்து, பதிகம் 7
  11. சிலப்பதிகாரத்தில் பாண்டியனின் மனைவி கோப்பெருந்தேவி எனப்படுதல் காண்க.
  12. பாடல் புறநானூறு 13

உசாத்துணைகள்

[தொகு]

வெளிப்பார்வை

[தொகு]

அந்துவஞ்சேரல் கிள்ளியைக் காப்பாற்றியது