சேந்தங் கண்ணனார்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

சேந்தங்கண்ணனார் சங்ககாலப் புலவர். அகநானூறு 350, நற்றிணை 54 ஆகிய இரண்டு பாடல்களைப் பாடியவர் இவர்.

புலவர் பெயர் விளக்கம்[edit]

சேந்தங்கண்ணனார், செங்கண்ணனார், செங்கணான் சேந்தன் என்னும் பெயர்கள் சிவபெருமானைக் குறிப்பவை. இவை இப்படி இருக்க, இவர் "சேந்தனை சென்மோ" என்னும் தொடரைத் தங்கியிருந்துவிட்டுச் செல்க என்னும் பொருளில் கையாண்டுள்ளார். இக்காலத்தில் நண்பனைச் சேத்தாளி என்று குறிப்பிடுகிறோம். இவற்றிலிருந்து சேந்தன் என்னும் சொல்லுக்கு நண்பன் எனப் பொருள் கொள்வதே சிறப்பு எனத் தெரியவருகிறது. மற்றும், சேந்தம் என்பது ஊரின் பெயர் என்பது இத்தொடரில் தெளிவாகத் தெரியவருகிறது. சேந்தமங்கலம் என்னும் ஊரும் உள்ளது. இப்புலவர் அந்தச் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பது பொருத்தமானது.

பாடல் சொல்லும் செய்திகள்[edit]

கருங்கால் வெண்குருகு
வாப்பறை என்னும் வௌவால்

குருகு விடு தூது[edit]

தூய சிறகுகளை உடைய குருகே! நீ என்னுடைய பறவை அல்லவா! சங்குப்பூச்சிகளை மேய்ந்தபின், உன் உறவுப் பறவைகளோடு சிறிது தங்கிவிட்டு, வௌவாலை மேயச் செல்கிறாய் என்பது புரிகிறது. நீ இல்லாவிட்டால் மாலைப்பொழுதே புலம்பும். பரவாயில்லை. உனக்கு நொதுமல் நெஞ்சம் வேண்டாம். அன்பு கொண்டு என் குறையைக் கேள். தழையாடைக்காகக் கொய்த ஞாழல் படர்ந்த கண்டல்மர வேலியைக் கடலலை தடவிக்கொடுத்து வளர்க்கும் துறையை உடையவன் என் கிழவன். வழியில் அவனிடம் சென்று என் குறையை எடுத்துச்சொல். (நற்றிணை 54)

சேந்தனை சென்மோ[edit]

கழியில் பூத்துள்ள நெய்தல், காவி ஆகிய பூக்களைக் கடலலை மோதிவிட்டுச் செல்கிறது. துறையில் நண்டுகளின் நடமாட்டம் இல்லை. இப்படிக் கழியும் துறையும் பொலிவற்றுக் கிடக்கின்றன. காரணம் நீ அத்திரி பூட்டிய தேரில் அங்கு வரவில்லை. இவள் கண் மழை பொழிவதைக் காரணமாக வைத்துக்கொண்டு நீ அவ்விடத்தில் தங்கிவிட்டுச் செல்க. - இப்படித் தோழி தலைவனுக்குச் சொல்கிறாள். (அகம் 350)

மொழியியல்[edit]

பாடு ஆன்றன்று = பெருமை அகன்றுள்ளது.
ஆன்றல் > அகலல்.
ஆன்றன்று = ஆன்று+அன்+து (பகுதி, சாரியை, விகுதி)
(அகம் 350)