செ. வீ. இரங்காச்சார்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டிபுண்யம் வீரவள்ளி இரங்காச்சார்லு
பிறப்பு1831 ஆகத்து
காஞ்சிபுரம் மாவட்டம்,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1883 சனவரி 20
சென்னை,
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
சமயம்இந்து

செட்டிபுண்யம் வீரவள்ளி இரங்காச்சார்லு (Chettipunyam Veeravalli Rungacharlu) (1831 ஆகத்து - 1833 சனவரி 20) இந்திய அரசு ஊழியராகவும் நிர்வாகியாகவும் பணியாற்றிய இவர் 1881 முதல் 1883 வரை மைசூர் அரசின் திவான் ஆகப் பணியாற்றியவர் ஆவார். பத்தாம் சாமராச உடையார் முடியாட்சியை மீட்டமைத்ததைத் தொடர்ந்து நவீன நிர்வாக முறையைப் பின்பற்ற இவரை பயன்படுத்தினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இரங்காச்சார்லு சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு வடகலை ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தார். [1] இவரது தந்தை சி. இராகவாச்சாரியார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் ஒருஎழுத்தராக இருந்தார். இரங்காச்சார்லுவின் பெற்றோர் ஏழைகளாக இருந்தனர். சென்னையின் முதல் இந்திய நீதிபதியான வி. இராகாவாச்சாரியார் என்பவர் இவருக்கு நிதி உதவி செய்வதாக உறுதியளித்த பின்னரே, இரங்காச்சார்லு சென்னைக்குச் சென்று தனது பள்ளிப் படிப்பைத் தொடர முடிந்தது. ஒரு குழந்தையாக, இரங்காச்சார்லு சதுரங்கம் குறித்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

இரங்காச்சார்லு தனது பள்ளிப்படிப்பை பச்சையப்பாப் பள்ளியிலும், சென்னை உயர்நிலைப் பள்ளியிலும் 1849இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு, திரு. எல்லிஸ் என்பவர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரங்காச்சார்லுவை ஒரு எழுத்தராக நியமித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இரங்காச்சார்லு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு தற்காலிக எழுத்தராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், பணி உறுதிப்படுத்தப்பட்டதும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்திற்கு மாற்றப்பட்டார். விரைவில் தலைமை எழுத்தாளராக பதவி உயர்வு பெற்று சேலத்தில் பணியமர்த்தப்பட்டார். இரங்காச்சார்லு ஒரு தலைமை எழுத்தாளராக சிறப்பாக செயல்பட்டு இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார் - "வருவாய் துறையில் லஞ்சம் மற்றும் ஊழல்" மற்றும் "செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மிராசுதார் உரிமைகள்" என்பன. பின்னர், இவர் சைதாபேட்டையின் வட்டாட்சியராகவும், பின்னர் நெல்லூரின் தலைமை சிரஸ்தாராகவும் நியமிக்கப்பட்டார். 1859 ஆம் ஆண்டில், இமாம் குழுவின் தலைவரான ஜி. என். டெய்லரின் சிறப்பு உதவியாளராக நியமிக்கப்பட்டார். இமாம் குழு முடிவுக்கு வந்ததும், இந்திய இரயில்வேயின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டார். குழுவில் இவரது பணி இவருக்குப் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. இரங்காச்சார்லு சென்னைக்குத் திரும்பியபோது, சென்னை இரயில்வே நிறுவனத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 1868இல் கோழிக்கோட்டில் கருவூல துணை ஆட்சியராகப் பணியாற்றி வந்தபோது மைசூர் அரசுப் பணியில் சேர அழைக்கப்பட்டார்.

மைசூர் அரசு சேவை[தொகு]

மைசூர் அரண்மனையின் நிதிக் கட்டுப்பாட்டாளராக பொறுப்பேற்க 1868 ஆம் ஆண்டில் இரங்காச்சார்லு மைசூர் சென்றார். கட்டுப்பாட்டாளராக, 1874 இல் இலண்டனில் வெளியிடப்பட்ட "மைசூரின் பிரிட்டிசு நிர்வாகம்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை எழுதினார். பின்னர், மைசூர் ஆணையாளர் திரு. கார்டன், இரங்காசார்லுவை தனது வருவாய் செயலாளராக நியமித்தார். வருவாய் செயலாளராக, இரங்காச்சார்லு ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்களின் முழு குழுவையும் புதுப்பித்தார், திறமையான இந்தியர்களை அதிக சம்பளத்திலும் திறமையற்ற ஐரோப்பியர்களுக்கு மிதமான ஊதியத்திலும் பணியமர்த்தினார். இதன் விளைவாக, 1879-80 இல் அரசின் முதல் ஆண்டு செலவு ரூபாய் ஒன்றரை லட்சமாகக் குறைந்தது. இவரது சேவைகளைப் பாராட்டும் விதமாக, இரங்காச்சார்லு 1880 ஆம் ஆண்டில் இந்தியப் பேரரசின் ஒழுங்கின் தோழராக நியமிக்கப்பட்டார்.

இந்த காலத்தில், இரங்காச்சார்லு அரண்மனை நிதிக் கட்டுப்பாட்டாளராக இருந்தபோது அரசக் குடும்பத்திடமிருந்து சில நகைகள் காணாமல் போனது குறித்து இவர் மீது விசாரணை தொடங்கப்பட்டது. ஒரு விரிவான விசாரணைக்குப் பிறகு, நகைகள் காணாமல் போனது ஒரு எழுத்தரின் பிழையேக் காரணம் என்றும், இரங்காச்சார்லு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுபட்டார். இரங்காச்சார்லு இறுதியில் 1881 மார்ச் 25 இல் மைசூர் திவானாக நியமிக்கப்பட்டார்.

மைசூர் திவான்[தொகு]

1881 மார்ச்சில் இரங்காச்சார்லு திவானாக பொறுப்பேற்றபோது, மைசூர் மோசமான நிதி, விவசாய மற்றும் தொழில்துறை நிலையை எதிர்கொண்டிருந்தது. 1877 ஆம் ஆண்டின் பஞ்சத்தால் அரசு பேரழிவிற்கு உட்பட்டு எட்டு லட்சம் ரூபாய் கடனைக் கொண்டிருந்தது.

இரங்காச்சார்லு திவானாக பொறுப்பேற்ற உடனேயே, அவர் ஹாசன் மாவட்டம் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களை கலைத்து, ஒன்பது வட்டங்களை துணை வட்டங்களாக தரமிறக்கினார். வட்ட நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள் மற்றும் மாவட்டச் சிறைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அரசின் செலவுகளால் வெகுவாகக் குறைக்கப்பட்டன. சந்தன மரம் மற்றும் சந்தன பொருட்கள் விற்பனைக்கான தடையை இரங்காச்சார்லு நீக்கினார். சந்தன மர விற்பனையால் கிடைத்த வருவாயைக் கொண்டு, இரங்காச்சார்லு சுதேச அரசுக்கு விரிவான இரயில்வே அமைப்பை உருவாக்கினார். பெங்களூரிலிருந்து திப்தூர் வரை இரயில் பாதை அமைத்தார். மேலும், மாநிலத்துக்காக ஒரு சட்டமன்றத்தையும் அமைத்தார்.

இறப்பு[தொகு]

1882 ஆம் ஆண்டின் இறுதியில் இரங்காச்சார்லு கடுமையாக நோய்வாய்ப்பட்டார். நோய் தீவிரமடைந்தபோது, இரங்காச்சார்லு திவான் பதவியை விட்டுவிட்டு சென்னைக்குத் திரும்பினார். அங்கு இவர் 1883 சனவரி 20 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

பிற சுயசரிதைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._வீ._இரங்காச்சார்லு&oldid=2998241" இலிருந்து மீள்விக்கப்பட்டது