உள்ளடக்கத்துக்குச் செல்

செல்ட்டியக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 50 - கிபி 50 காலத்தைச் சேர்ந்த பிரித்தானிய வெங்கல ஆடியின் பின்பக்கம். பிற்காலத் தீவுக்குரிய லா டெனே பாணியின் சுருள், ஊதுகொம்பு வடிவ அலங்காரங்களைக் காணலாம்.
முய்ரெடாச்சின் உயர் சிலுவை, அயர்லாந்து, 10 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்

செல்ட்டியக் கலை (Celtic art) என்பது, வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து தற்காலம் வரை ஐரோப்பாவில் வாழ்பவர்களும், செல்ட்டிய மொழியைப் பேசுபவர்களுமாகிய செல்ட்டு என அழைக்கப்படும் மக்களோடு தொடர்புடைய கலை ஆகும். அதே வேளை, என்ன மொழி பேசியவர்கள் என்று தெரியாவிட்டாலும், செல்ட்டிய மொழி பேசுபவர்களுடன் பண்பாட்டு, பாணி சார்ந்த ஒற்றுமைகளைக் கொண்ட பழங்கால மக்களின் கலைகளும் செல்ட்டியக் கலைக்குள் அடக்கப்படுகின்றன.

செல்ட்டியக் கலை என்னும் தொடரினுள் மிக நீண்ட காலமும், பெரிய புவியியற் பரப்பும், பல பண்பாடுகளும் அடங்குவதால் வரைவிலக்கணம் கூறுவதற்குக் கடினமானது. ஐரோப்பாவில் கலைத் தொடர்ச்சியை வெங்கலக் காலத்திலிருந்து அல்லது அதற்கு முந்திய புதிய கற்காலத்தில் இருந்து தொடங்குவதற்கு முன்மொழியப்பட்டது. ஆனால், தொல்லியலாளர்கள் "செல்டிய" என்னும் சொல்லைப் பொதுவாக ஏறத்தாழக் கிமு 1000 தொடக்கம் குறிப்பிட்ட பகுதிகளை உரோமப் பேரரசு கைப்பற்றும் வரையில் நிலவிய ஐரோப்பிய இரும்புக்காலப் பண்பாட்டைக் குறிக்கின்றனர். கலை வரலாற்றாளர்கள் "சில்ட்டியக் கலை" பற்றிய உரையாடலை "லா டேனே" (கிமு 5 - முதலாம் நூற்றாண்டு) காலத்துக்குப் பின்னரே தொடங்குகின்றனர்.[1] "தொடக்க செல்ட்டியக் கலை" என்பது இக்காலத்தைக் குறிக்கப் பனன்படுத்தும் இன்னொரு சொற்றொடர். பிரித்தானியாவில் இது கிபி 150 வரை நீட்டப்படுகின்றது.[2] கெல்சு நூலையும் அது போன்ற பிற தலைசிறந்த படைப்புக்களையும் உருவாக்கியதும், பெரும்பாலான ஆங்கிலம் பேசும் நாடுகளின் "செல்ட்டியக் கலை" என்பதால் புரிந்துகொள்ளப்படுவதுமான, பிரித்தானியாவினதும், அயர்லாந்தினதும் தொடக்க மத்தியகாலக் கலை, கலை வரலாற்றில் தீவுக்குரிய கலை என அழைக்கப்பட்டது. இதுவே மிகவும் அறியப்பட்ட பகுதியேயன்றி தொடக்க மத்திய காலத்தைச் சேர்ந்த செல்ட்டியக் கலையின் முழுமை அல்ல. இசுக்காட்லாந்தின் பிக்டியக் கலையும் இதற்குள் அடங்குகின்றது.[3]

இரண்டு பாணிகளும், செல்ட்டியம் அல்லாத மூலங்களின் செல்வாக்குகளின் ஊடாகப் பல அம்சங்களைப் பெற்றுள்ளன. ஆனால், இப்பாணிகளில், உருவங்களை விட வடிவவியல் வடிவங்களே பெரிதும் விரும்பப்பட்டன. அவ்வாறு உருவங்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவை உண்மைத் தன்மை கொண்டவையாக இருக்கவில்லை. வெளிச் செல்வாக்குக்கு உட்பட்டே கதைக் காட்சிகள் காணப்படுகின்றன.[4] வட்ட வடிவங்கள், முச்சுருள்கள், சுருள்கள் என்பன வழமையாகக் காணப்படும் வடிவங்கள். இன்று கிடைக்கக்கூடிய பெரும்பாலான இப்பாணி சார்ந்த பொருட்கள் அரிய உலோகங்களால் ஆனவை. இது அக்காலக் கலை உற்பத்திகளை முழுமையாக வெளிக்காட்டவில்லை என்பது வெளிப்படை. பிக்டியக் கற்களையும், தீவுக்குரிய உயர் சிலுவைகளையும் தவிரப் பெரிய சிற்பங்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன.

18 ஆம் நூற்றாண்டு தொடக்கம் தற்காலம் வரையிலான செல்ட்டிய மறுமலர்ச்சி சார்ந்த காண்பியக் கலைகளும் "செல்ட்டியக் கலை" என்பதற்குள் அடங்குகின்றன. தமது அடையாளத்தையும், தேசியத்தையும் வெளிக்காட்டுவதற்காக, பெரும்பாலும் பிரித்தாலியத் தீவுகளில் வாழும் தற்காலச் செல்ட்டுகளின் முயற்சியால் இது தொடங்கியது. இப்பாணி செல்ட்டிய நாடுகளுக்கு அப்பாலும் பிரபலமானது. செல்ட்டியச் சிலுவை இறந்தோர் நினைவுச் சின்னம் முதல் பச்சை குத்துவதற்கான வடிவங்கள் வரையானவை உள்ளிட்ட பல வடிவங்களில் இப்பாணி இப்போதும் பயின்று வருகின்றது.

நேர் கோடுகள் இல்லாமலும், சமச்சீர்த் தன்மையை மிகக் குறைவாகவே பயன்படுத்தியும், செந்நெறி மரபின் நடு நாயகமாக விளங்கிய இயற்கையைப் போலியாக உருவாக்கும் தன்மையிலிருந்து விலகியும் அலங்காரமானதாகச் செல்ட்டியக் கலை விளங்கியது. இப்பாணியில் சிக்கலான குறியீடுகளும் பயன்படுத்தப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Megaws, for example; see their introductory section, where they explain the situation & that their article will only cover the La Tène period.
  2. Technologies of Enchantment: Early Celtic Art in Britain பரணிடப்பட்டது 2012-08-04 at the வந்தவழி இயந்திரம், British Museum> It is also used by Jacobsthal; however the equivalent "Late Celtic art" for Early Medieval work is much rarer, and "Late Celtic art" can also mean the later part of the prehistoric period.
  3. Laings, 6-12
  4. Megaws
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்ட்டியக்_கலை&oldid=2525359" இலிருந்து மீள்விக்கப்பட்டது