செலினா பானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செலினா பானு (Selina Banu), (அக்டோபர் 12, 1926 - ஜனவரி 26, 1983) ஒரு வங்காளதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி, சமூக ஆர்வலர் மற்றும் பெண்ணியவாதி ஆவார். [1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

செலினா பானு, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசில் கிழக்கு வங்காளத்திலுள்ள, பப்னாவில் மாவட்டத்தில், பிறந்தார். இவரது தந்தை வாசிம் உடின் அகமது வங்காள சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் கம்யூனிஸ்ட் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். இவர் 1943 இல் பப்னா பெண்கள் பள்ளியிலும், 1945 இல் பப்னா எட்வர்ட் கல்லூரியிலும் பட்டம் பெற்றார். இவர் 1949 இல் பப்னா எட்வர்ட் கல்லூரியில் முதுகலை முடித்தார். இவர் 1961 இல் டாக்கா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் 1943 வங்காள பஞ்சத்தின் போது பெண்கள் தற்காப்பு சங்கத்தால் நிர்வகிக்கப்படும் உணவு மற்றும் தங்குமிடம் அளிக்கும் அகதி முகாம்களில் பணியாற்றினார். [3]

தொழில்[தொகு]

பானு, பப்னா அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இவர் 1953 இல் அவாமி லீக்கில் சேர்ந்தார். மேலும், மாகாணக் குழுவின் மகளிர் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 1954இல், ஐக்கிய முன்னணியில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவாமி லீக்கால் பரிந்துரைக்கப்பட்டார். இலா மித்ராவின் காவல்துறை சிகிச்சையை இவர் விமர்சித்தார். மேலும் அவரைக் காவலில் வைக்கவும் கேட்டுக் கொண்டார். இவர் தேசிய அவாமி கட்சியின் மத்திய குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் ரங்க்பூர் அரசு பெண்கள் பள்ளியிலும், 1959 முதல் 1964 வரை நாரி சிக்க்சா மொண்டிரிலும் ஆசிரியராக பணியாற்றினார். இவர் பப்னா மத்திய பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். [3]

பானு 1964 இல் ஃபரிதா பித்யாதன் பள்ளியில் தலைமை ஆசிரியராக சேர்ந்தார். அவர் 1967 இல் தேசிய அவாமி கட்சியின் மாஸ்கோ சீரமைக்கப்பட்ட பகுதியுடன் சேர்ந்தார். ராஜ்சாகி பல்கலைக்கழகத்தில் டாக்டர் முகமது சம்சுசோகா கொல்லப்பட்ட பின்னர், இவர் 1969 இல் கொமிலாவில் நடந்த ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். வங்காளதேச விடுதலைப் போரின்போது பிதான் நகரம் மற்றும் அகர்தலாவில் உள்ள அகதி முகாம்களில் பணியாற்றினார். [3] இவரது மகள் ஷிரின் பானு, வங்காளதேச விடுதலைப் போரில் ஒரு ஆண் மனிதனாக உடையணிந்து போராடினார்.

பிற பணிகள்[தொகு]

செலினா பானு கொமிலா மதுமிதா கச்சி-காஞ்ச மேளாவின் இயக்குநராக பணியாற்றினார். இவர், தன்னார்வமிக்க தொண்டர்கள் அடங்கிய ஒரு குழுவை பப்னாவுக்கு அழைத்துச் சென்று, காலரா தொற்றுநோய் பரவிய நேரத்தில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு நல்கினார். 1969 ஆம் ஆண்டில் மகிலா பரிஷத் நிறுவப்பட்ட பின்னர் இவர் தன்னை அந்த அமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டார். 1970 இல் சூறாவளியால் பாதிக்கப்பட்ட படுகாலி மாவட்டத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகித்தார்.

இறப்பு[தொகு]

செலினா பானு வரலாறு, பாரம்பரியம், சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்து பல கட்டுரைகளை எழுதினார். அவர் ஜனவரி 26, 1983 அன்று தனது 56வது வயதில் இறந்தார். [3]

நூல் வெளியீடு[தொகு]

வங்காளதேசத்தின் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நபாப் நவாப் அலி சவுத்ரி செனட் பாபனில் ஜாதியா சாகித்யா பிரகாசோனி வெளியிட்ட செலினா பானு: சங்கிராமி நாரி (செலினா பானு: போராடும் பெண்) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. [4]

விழாவில் உரையாற்றிய டாக்கா பல்கலைக்கழக துணைவேந்தரான பேராசிரியர் ஏஏஎம்எஸ் அரேஃபின் சித்திக் இந்த புத்தகத்தை ஒரு அருமையான படைப்பு என்றும், இது இளம் தலைமுறையினருக்கு செலினாவைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவரது சித்தாந்தத்தைப் பின்பற்றி அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பவும் உதவும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான செலினா பானு தனது வாழ்நாள் முழுவதும் அடக்குமுறை மற்றும் பாகுபாடு இல்லாத ஒரு சமூகத்தை நிறுவுவதற்கும், பொது மக்கள் தங்களின் உரிமைகளை உணர்ந்து கொள்வதற்கும் போராடியதாக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பேச்சாளர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், பிரித்தானிய எதிர்ப்பு 'சுதேசி' இயக்கத்திலும் பின்னர் 1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரிலும் பங்கேற்ற செலினா, தான் வாழ்ந்த காலத்தில் ஒரு சமூக சேவகர், பிரபல அரசியல்வாதி மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களின் நண்பராக இருந்தார் என்றும் அவர்கள் கூறினர்.

குறிப்புகள்[தொகு]

  1. ""When the war was over, our struggle ended but the struggle of the Biranganas had just begun."" (in en). The Daily Star. 26 March 2015. http://www.thedailystar.net/supplements/independence-day-special-2015/when-the-war-was-over-our-struggle-ended-the-struggle-the. பார்த்த நாள்: 1 November 2017. 
  2. "War hero Selina fought for repression-free society" (in en). The Daily Star. 6 May 2009. http://www.thedailystar.net/news-detail-87048. பார்த்த நாள்: 1 November 2017. 
  3. 3.0 3.1 3.2 3.3 Siddiqui, Mamun. "Banu, Selina". en.banglapedia.org (in ஆங்கிலம்). Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  4. https://www.thedailystar.net/news-detail-87048
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலினா_பானு&oldid=2933376" இலிருந்து மீள்விக்கப்பட்டது