செயலை மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலத்தில் குறிஞ்சிநிலத்தில் வளர்ந்த மரங்களில் ஒன்று செயலை மரம். இது செந்நிறத் தளிர்களைக் கொண்டது. ஆண்கள் இதன் தளிர்களைத் தலையிலும், காதுகளிலும் அணிந்துகொண்டனர். மார்பில் மாலையாகக் கட்டிப் போட்டுக்கொண்டனர். மகளிர் தழையாடை பின்னி இடையில் அணிந்துகொண்டனர். செயலை மரங்களில் ஊசல் கட்டி ஆடினர். பூவாகப் பறித்துக் குவித்து விளையாடினர். காமன் கணையாகப் பயன்படுத்தும் ஐந்து மலர்களில் ஒன்று இந்தச் செயலை. இந்தச் செய்திகளைச் சங்கப்பாடல்கள் நெரிவிக்கின்றன.

செயலைத் தளிரின் நிறம் சிவப்பு[தொகு]
செயலைத் தழை நெருப்பு நிறம் கொண்டது. [1] காட்டுச் செயலையின் தளிர் பவள நிறம் கொண்டதாக இருக்கும். [2] சிவந்த நிறம் கொண்டிருப்பதால் இந்த மரத் தளிர்களுக்குச் 'செயலை' என்று பெயர். [3] இது மகளிர் கால் கைகளில் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டியது போல் செந்நிறம் கொண்டிருக்கும். [4] செயலைத் தளிர் போன்று இருந்த தலைவியின் மேனிநிறம் பசலை பாய்ந்து இருந்தது. [5] செயலைத் தளிர் போன்று இருந்த தலையின் மேனிநிறம் பசலை பாய்ந்து மாறிவிட்டதாம். [6] [7]
செயலை விளையாடு பொருள்[தொகு]
செயலை மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவர். [8] கார்காலத்தில் மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று செயலை [9]
ஆண்கள் சூடல்[தொகு]
ஆண்மகன் செயலை மாலையை மார்பில் அணிந்திருந்தான். [10] ஆண்கள் தலையில் அணியும் பூக்களில் ஒன்று செயலை. [11] முருகப்பெருமான் காதுகளில் செயலைத் தளிரை வைத்திருந்தான். [12]
மகளிர்க்குத் தழையாடை[தொகு]
மகளிர் இடையில் தழையாடை உடுத்திக்கொண்டனர். [13] இக்காலத்தில் காதலுக்குப் பூச்செண்டு வழங்குவது போல அக்காலத்தில் 'செயலை'தழையால் செய்யப்பட்ட தழையாடையை வழங்கினர். [14] தழையாடை செய்யப் பறித்துப் பறித்துச் செயலை மரத்தில் இலை இல்லாமல் போகவே அருகில் இருந்த தரலை மரத்து இலைகளைத் தழையாடைக்குப் பறித்துக்கொண்டார்களாம். [15]
திருமாலிருஞ்சோலை மலையின் மரக் கிளைகளில் செயலை மலர்ந்திருந்தனவாம். [16]. காமன் கணையின் ஐந்து மலர்களில் [17] ஒன்று செயலை [18]
வேறுபாடு[தொகு]
இந்த மரத்தின் இனங்கள்
அடிக்குறிப்பு[தொகு]
 1. அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும் (அகநானூறு 188)
 2. அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர் புந்தலை மந்தி வன்பறழ் ஆரும் (ஐங்குறுதூறு 273)
 3. சேந்த செயலைச் செப்பம் போகி, அலங்கு கழை நரலும் (மலைபடுகடாம் 160)
 4. நம் படப்பை ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை (அகநானூறு 68)
 5. மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த செயலை அம் தளிர் அன்ன, என் மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே (நற்றிணை 244)
 6. செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம் பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்; (கலித்தொகை 15)
 7. செயலை இளந் தளிர் அன்ன நின் மேனிப் பயலை பழங்கண் கொள (கார்நாற்பது 16)
 8. அம் தளிர்ச் செயலைத் தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று ஊசல் (அகநானூறு 38)
 9. குறிஞ்சிப்பாட்டு 105
 10. சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் நல் தார் மார்பன், (நற்றிணை 376 7)
 11. சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி - இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை உதணால் கடிந்தான் உளன். (திணைமாலை 2)
 12. செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன் (திருமுருகாற்றுப்படை 207)
 13. ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல் (அகநானூறு 7)
 14. நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழி வாடும் அன்னாய். (ஐங்குறுதூறு 211)
 15. திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச் செயலை முழுமுதல் ஒழிய அயல தரலை மாலை சூட்டி (குறுந்தொகை 214)
 16. சினையெலாம் செயலை மலர (பரிபாடல் 15 31)
 17. மயிலை, செயலை, மா, குவளை, தாமரை
 18. வெற்றிச்சிலைக் காமன் மயிலையும் செயலையும் மாவும் குவளையும் பயில்இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த மலர்வாய் அம்பின் (மணிமேகலை 24-38)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயலை_மரம்&oldid=1682788" இருந்து மீள்விக்கப்பட்டது