உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மீன் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செம்மீன் (நாவல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செம்மீன்
செம்மீன் (மலையாளம்) நூலட்டை (டிசி புக்சு)
நூலாசிரியர்தகழி சிவசங்கரப் பிள்ளை
உண்மையான தலைப்புചെമ്മീൻ
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வகைகாதல் புதினம்
வெளியீட்டாளர்டிசி புக்சு
வெளியிடப்பட்ட நாள்
1956


செம்மீன்(மலையாளம்: ചെമ്മീൻ) என்பது தகழி சிவசங்கரப் பிள்ளை 1956-ல் எழுதிய ஒரு மலையாள புதினம் ஆகும். இது இந்து மத மீனவனின் மகள் கருத்தம்மைக்கும் ஒரு முஸ்லிம் மொத்த மீன் வியாபாரியின் மகன் பரீக்குட்டிக்கும் இடையேயான காதலைப் பற்றிய கதையாகும்.[1]. இதன் மையக்கருவானது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் கடலோரத்தில் வசிக்கக்கூடிய மீனவ சமுதாய மக்களின் இடையே உள்ள நம்பிக்கை பற்றியது. அந்த நம்பிக்கையானது கற்பு பற்றியது அதாவது மனைவி ஒருவர் இறைமறுப்பு கொண்டவராக இருந்தால் அவருடைய கணவன் கடலுக்குச் சென்றால் கடல் தெய்வம் (கடல் அன்னை மற்றும் கடலம்மா எனவும் கூறுவர்) அவரை விழுங்கிவிடும் என்பதாகும். இந்த நம்பிக்கையை தொடர்ந்து நிலைநிறுத்தச் செய்யும் வகையிலேயே தகழி சிவசங்கரப் பிள்ளை இந்தப் புதினத்தை எழுதியிருப்பார். இந்தப் பெயரிலேயே இது திரைப்படமாகவும் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்தப் புதினத்தில் மீனவ மக்களின் வாழ்வியலை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கியுள்ளார். இவர்களின் வாழ்வியலானது நீதிக்கதைகளின் தரத்தில் அமைந்துள்ளது. மீனவ சமுதாய மக்களின் பழக்க வழக்கங்கள் , விலக்குகள் (செய்யக் கூடாதவைகளாக அவர்கள் கருதுவது), நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் அவர்களின் அன்றாட தொழில் நிகழ்வுகள், அவர்களின் வலிகள் ஆகிய அனைத்தும் இயல்பு மாறாமல் தகழி அவர்களின் அற்புதமான எழுத்துக்களால் அறிய முடிகிறது.

இந்திய இலக்கியத்தின் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் சாகித்திய அகாதமி விருது விருதினை செம்மீன் புதினம் 1957 இல் பெற்றது.

கதைச் சுருக்கம்

[தொகு]

செம்பன்குஞ்சு என்பவர் ஒரு மீனவர். அவருக்கு சொந்தமாக ஒரு படகையும் ,மீன்பிடி வலை வாங்க வேண்டும் என்பதையே வாழ்க்கையின் ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளார். இதனை ஒரு முஸ்லீம் மீன் மொத்தவியாபாரியின் மகனான பரீக்குட்டியின் உதவியுடன் நிறைவேற்றுகிறார். ஆனால் பரீக்குட்டி ஒரு நிபந்தனை விதிக்கிறார். அது செம்மன் குஞ்சுவிற்குக் கிடைக்கும் மீன்கள் அனைத்தையும் தன்னிடமே விற்க வேண்டும் என்பதாகும். செம்பன்குஞ்சுவிற்கு அழகான ஒரு மகள் இருக்கிறார். அவருடைய பெயர் கருத்தம்மா. கருத்தம்மாவிற்கும் பரீக்குட்டிக்கும் இடையே காதல் மலருகிறது. இதனைத் தெரிந்துகொண்ட கருத்தம்மாவின் தாய் சக்கி, அவருடைய சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என எச்சரிக்கை செய்கிறார். கருத்தம்மா , பரீக்குட்டிக்காக தனது காதலை தியாகம் செய்கிறார். பின் பழனி என்ற ஆதரவற்றோரை திருமணம் செய்கிறார். பின் கனவருடன் அவருடைய ஊருக்குச் செல்கிறார். சென்பன்குஞ்சு மற்றுமொரு படகு, வலையை வாங்குகிறான். அதன்பின் பேராசைக்காரனாகவும், இதயமற்றவனாகவும் ஆகின்றான். பரீக்குட்டியிடம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த மறுக்கிறான். சக்கி இறந்த பிறகு பாப்பிகுஞ்சு என்ற பெண்ணை மறுமணம் செய்கிறார் செம்பன்குஞ்சு. தனது தந்தை மறுமணம் செய்ததை அறிந்து தனது சகோதரி பஞ்சமியின் வீட்டிற்குச் செல்கிறார் கருத்தம்மா. அதேசமயம் கருத்தம்மா ஒரு நல்ல மனைவியாகவும், தாயாகவும் நடந்துகொள்கிறார். ஆனால் பரீக்குட்டியுடன் இருந்த காதலை அந்த ஊர் மக்கள் பழனியிடம் தவறாக எடுத்துக் கூறுகின்றனர். பழனியின் நன்பர்கள் இதனைக் காரனம் காட்டி அவரைத் தங்களுடன் மீன்பிடிக்க அழைத்துச்செல்வதில் இருந்து விலக்கி வைக்கின்றனர். பின் ஒருநாள் இரவில் பரீக்குட்டியும் கருத்தம்மாவும் சந்திக்கின்றனர். அந்தச் சந்திப்பின் போது அவர்களின் பழைய காதல்மீன்டும் துளிர்க்கிறது. பழனியின் வலையில் ஒரு பெரிய சுறா சிக்குகிறது அப்போது ஒரு பெரிய நீர்ச்சுழி அவனை விழுங்குகிறது. அடுத்த நாள் காலையில் கடற்கரை ஓரத்தில் கருத்தம்மாவும் பழனியும் கைகோர்த்தபடி இறந்து கிடக்கின்றனர்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
செம்மீன் தமிழில்

செம்மீன் புதினம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஆங்கிலம், உருசிய மொழி, இத்தாலிய மொழி, பிரெஞ்சு மொழி, அரபு மொழி போன்ற பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. [2]. தமிழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி இந்நூலை மொழிபெயர்த்துள்ளார்.[3]

ஆங்கில மொழியில் செம்மீன் புதினம் பலமுறை மொழிமாற்றம் செய்யப்பட்டது. கடலன்னையின் கோபம் என்ற நாராயண மேனனின் மொழிபெயர்ப்பு இன்றளவிலும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. மேலும் டி. எஸ். பிள்ளை மற்றும் அனிதா நாயர் போன்றவர்கள் செம்மீன் என்ற பெயரிலேயே ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தனர். [4]

திரைப்படம்

[தொகு]

1965-ல் ராமு கார்யாட்டு என்பவர் இந்நாவலைத் திரைப்படமாக்கினார். இப்படத்திற்கு 1965-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான, இந்தியக் குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் கிடைத்தது. ஷீலா, மது, கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், சத்யன் ஆகியோர் நடித்திருந்தனர்.

சான்றுகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மீன்_(புதினம்)&oldid=3791532" இலிருந்து மீள்விக்கப்பட்டது