சென்னை மாநிலம் எதிர் சம்பகம் துரைராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை மாநிலம் எதிர் திருமதி சம்பகம் துரைராஜன் (State of Madras V. Smt. Champakam Dorairajan, வழக்கு எண் AIR 1951 SC 226) இந்திய உச்ச நீதி மன்றத்தால் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு முக்கிய வழக்கு. இவ்வழக்கில் பிரித்தானிய ஆட்சியில் சென்னை மாகாணத்தில் அமல் படுத்தப்பட்ட வகுப்புவாரி இட ஒதுக்கீடு சுதந்தர இந்தியக் குடியரசில் செல்லாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், ஜாதிவாரி இட ஒதுக்கீட்டிற்குச் சட்ட ஏற்பு வழங்க இந்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.

இட ஒதுக்கீடு[தொகு]

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சென்னை மாகாணத்தில், பிராமணரல்லாத பிரிவினர் அரசாங்க வேலைவாய்ப்புகளிலும், கல்வியிலும், வகுப்புவாரி இட ஒதுக்கீடு கோரி வந்தனர். 1921 ஆகஸ்டில், அதற்கான அரசாணையை (Communal G.O. 613) நீதிக்கட்சி அரசு பிறப்பித்தது. ஆனால் அமல்படுத்த வில்லை. 1927 நவம்பர் 4 ஆம் நாள், பி. சுப்பராயனின் சுயேட்சை அரசு, அரசாணை எண் 1071 இன் மூலம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதன்படி அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் பன்னிரண்டில் ஐந்து பங்கு (5/12) பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டது. பிராமணர், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்கள் ஆகியோருக்கு தலா 2/12 பங்கும், தாழ்த்தப் பட்டோருக்கு 1/12 பங்கும் ஒதுக்கப்பட்டது. 1947 இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இது சற்றே மாற்றியமைக்கப்பட்டது. பிரமணரல்லாத இந்துக்களுக்கு பதினான்கில் ஆறு பங்கும் (6/14), பிராமணர், தாழ்த்தப்பட்டோர், ஹரிஜனர் ஆகியோருக்கு தலா 2/14 பங்கும், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்களுக்கு தலா 1/14 பங்கும் வழங்கப் பட்டன. இந்தியா 1947 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. ஜனவரி 26, 1950 இல் குடியரசானது. புதிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கல்விக்காக இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

எதிர்ப்பு[தொகு]

வகுப்புவாரி இட ஒதுக்கீட்டினை பல பிராமணர்கள் எதிர்த்தனர். இந்தியா குடியரசானவுடன், சென்னை மாகாணத்தின் பழைய இட ஒதுக்கீடு அரசாணை (புதிய சென்னை மாநிலத்தால் அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது), இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15 மற்றும் 16 க்கு விரோதமானது என்று சேலம் பிராமண சேவா சங்கம் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியது. 1950-51 கல்வியாண்டிற்கான மருத்துவ, பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற்ற போது இரு பிராமண மாணாக்கர் தங்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் மறுக்கப் பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

வழக்கும் தீர்ப்பும்[தொகு]

சம்பகம் துரைராஜன் என்னும் மாணவி சென்னை மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை எனவும், சி. ஆர். சீனிவாசன் என்ற மாணவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்க வில்லை எனவும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஜூன் 6 1950 இல், தாக்கல் செய்யப்பட்ட அம்மனுவில் சம்பகம், பிராமணர் என்ற காரணத்தால் தனக்கு இடம் தர மறுப்பது அரசியலமைப்பு சட்டத்தின் 226 பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையினை மறுப்பது என்று குறிப்பிட்டிருந்தார். (பின்னர் அவர் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது). சீனிவாசன் கிண்டி கல்லூரிக்கு விண்ணப்பத்திருந்தாலும், பிராமணருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 14.29 % இடங்கள் ஏற்கனவே பூர்த்தியானதால் தனக்கு இடம் தரப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இருமனுக்களிலும் ஜூலை 27 இல் மனுதாரருக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை மாநில அரசு இந்திய உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி ஹீராலால் கானியா தலைமையில் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட பெஞ்சு இவ்வழக்கை விசாரித்தது. சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று அறிவித்த நீதிபதிகள், சென்னை மாநிலத்தின் இட ஒதுக்கீடு அரசாணை அரசியலமைப்பு சட்டத்தின் 29 (2) ஆவது பிரிவுக்குப் புறம்பானது என்று தீர்ப்பளித்தனர்.

விளைவு[தொகு]

இட ஒதுக்கீடு செல்லாதென அறிவித்த உச்ச நீதிமன்றத்தை கண்டித்து, சென்னை மாநிலத்தின் பல பகுதிகளில் திராவிடர் கழகத்தினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் கண்டன கூட்டங்கள், பேரணிகள் நடத்தினர். இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்தியப் பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் ஆகியோர், இட ஒதுக்கீட்டிற்கு சட்ட ஏற்பு அளிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 15 வது பிரிவுக்கு நான்காவதாக ஒரு புதிய உட்பிரிவை ஏற்படுத்த முடிவு செய்தனர். அதன்படி ஜூன் 1951 இல் கொண்டு வரப்பட்ட முதல் சட்ட திருத்தம், மீண்டும் இட ஒதுக்கீட்டிற்கு சட்ட ஏற்பு வழங்கியது. தற்போது, இந்தியாவின் மத்திய (நடுவண்), மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு கொள்கைகளின் ஆதாரம் இச்சட்டதிருத்தமே ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]