சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி என்பது சென்னைப் பல்கலைக்கழகத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அகராதி. இது 1920 களில் ஏழு தொகுதிகளாக வெளிவந்தது. முதல் பதிப்பில் 117,762 சொற்கள் இருந்தன.[1]

வரலாறு[தொகு]

தமிழ் நாட்டில் கிருத்தவப் பணி செய்து கொண்டிருந்த அமெரிக்க சங்கத்தார் தமிழில் ஒரு விரிவான அகராதி யொன்றை வெளியிடவிரும்பினர். அவர்கள் சார்பாகப் பெர்சிவல் முதலிய அறிஞர் பலர் பலகாலமாகத் திரட்டிய அகராதியைப் பதிப்பிக்கும் பொறுப்பும் உரிமையும் வின்சுலோ என்னும் அறிஞருக்கு வாய்த்தது. அவ்வறிஞர், அறுபத்தேழாயிரம் சொற்கள் அடங்கிய, பேரகராதியை அச்சிட முற்பட்டார். அதன் செலவு, அளவு கடந்து சென்றதால் அமெரிக்க சங்கத்தார் அதன் பொறுப்பை ஏற்று நடத்த இயலாது தளர்வுற்றார். முந்நூற்று அறுபது பக்கம் அச்சிட்டு முடிந்த அளவில், அகராதி வேலை நின்றுவிடுமோ என்ற கவலை பிறந்தது. இதனால் வின்சுலோ சென்னை அரசாங்கத்தாரது உதவியை நாடினார். அன்னார் அகராதி முற்றுப் பெற்றவுடன், நூறு, பிரதிகள் விலை கொடுத்து வாங்குதல் கூடும் என்று வாக்களித்தனரேயன்றி முன்பணம் கொடுத்து உதவ முனவரவில்லை. அகராதி அச்சிட்டு முடிவதற்குப் பின்னும் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று வின்சுலோ ஐயர் கணக்கிட்டார். ஆனால் இவர் கருதியவாறு பங்குகள் விலைப்படவில்லை. இந்நிலையில் வேறு வழியின்றித் தம் சொந்தப் பொறுப்பில் ஐயாயிரம் ரூபாய் கடன்பட்டு, அச்சு வேலையை முடித்து அகராதியை வெளியிட்டார். [2]

இந்நிலையில் வின்சுலோவின் அகராதியைப் மேலும் பெருக்கியும் புதுக்கியும் வெளியிடல் வேண்டும் என்ற கருத்து அறிவாளர் உள்ளத்தில் அரும்பிற்று. பல்லாண்டு தமிழ் நாட்டில் உழைத்துப் பழுத்த முதுமையுற்று, ஆங்கில நாட்டிற் போந்து தமிழ்ப்பணி செய்து கொண்டிருந்த போப்பையர் மனத்திலும் இவ்வார்வம் பிறந்தது. தமிழறிந்தவர் ஒருவரை உதவிக்கு அனுப்பினால் தாமே வின்சுலோவின் அகராதியைப் புதுக்கித் தருவதாக அவர் சென்னை அரசாங்கத்தாருக்கு அறிவித்தார். ஆயினும் அக் கருத்து நிறைவேறு முன்னமே போப்பையர் வாழ்வு முடிந்துவிட்டது. அவர் தொகுத்து வைத்திருத்த சொற்களையும் குறிப்புக்களையும் சென்னைக் கையெழுத்து நூல் நிலையத்திற்கு அவர் மைந்தர் அனுப்பினார்.[2]

அப்பொழுது தமிழ் நாட்டில் வாழ்ந்த சாந்தலர் என்னும் ஆங்கில அறிஞர் இப்பேரகராதியை வெளியிடுவதற்கு ஒரு திட்டம் வகுத்துச் சென்னை அரசாங்கத்தார்க்கு அனுப்பினார். அவர்கள் அதனை ஆதரித்தார்கள். இந்திய நாட்டு அமைச்சர் அப்பணியின் அவசியத்தை உணர்ந்து நூறாயிரம் ரூபாய் செலவிட அனுமதியளித்தார். பேரகராதியின் பதிப்பாசிரியராகச் சாந்தலரே நியமிக்கப்பட்டார். ஒன்பது ஆண்டுகள் அவர் வேலை பார்த்தார் ; எழுபதாம் வயதில் ஓய்வு பெற்றார்.[2]

அரசாங்கத்தார் குறித்தவாறு ஐந்து ஆண்டுகளில் அகராதி முற்றுப் பெறவில்லை; அதன் செலவு நூறாயிரம் ரூபாய் அளவில் நிற்கவும் இல்லை. அந்நிலையில் அரசியலாளர் கருத்துக்கிணங்கி அகராதியின் பொறுப்பையும் உரிமையையும் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்றுக் கொண்டது. ஏறக்குறைய இருபத்தைந்து. ஆண்டுகளில் முற்றுப்பெற்ற பேரகராதி ஏழு பெருந்தொகுதியாகத் 'தமிழ் லெக்சிக்கன்' என்னும் பெயரோடு வெளியிடபட்டது.[2]

விமரிசனம்[தொகு]

27 ஆண்டுக் காலப் பெரும் உழைப்பில் வெளியிடப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் சொற்பிறப்பு காட்டப்படவில்லை என்பது ஒரு குறையாகச் சுட்டிக்காட்டப்பட்டது.[3] பேரகராதியைத் தொகுத்த அறிஞர்கள் 'மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா' என்ற தொல்காப்பிய சூத்திரத்தைத் தமக்கு ஆதாரமாகக் காட்டியும் தமிழ் மொழி நூல் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறதென்பதாகக் காட்டியும் சொற்களுக்குச் சொற்பிறப்புக் காட்டமைக்குக் காரணங் கூறினர்.[3] தமிழர் என்ற சொல்லுக்குப் பின்வருமாறு பொருள் தரப்பட்டது பெரும் விமரிசனத்துக்குள்ளானது: தமிழர் n<E tumbler, drinking Cup, விளிம்பில்லாத பாத்திரம்.[3]

2012 இல் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பின் முதல் தொகுதியில் ஏராளமான எழுத்துப்பிழைகள், நாணுவழுக்கள், இலக்கண மற்றும் அச்சுக்கலை பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து நிபுணர் குழுவில் இருந்து விலகிய வி.முருகன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு பிழைகளைப் பட்டியலிட்ட விரிவான குறிப்பை அனுப்பினார்.[4]

இணைய இருப்பு[தொகு]

இந்த பேரகரமுதலி இணையத்தில் பின்வரும் தொடுப்புகளில் காணலாம்.

  • தெற்கு ஆசிய எண்ணிம நூலக இணையப்பக்கத்தின் தேடுப்பக்கம்
  • தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் இணைய அகரமுதலிகள் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 1.
  2. 2.0 2.1 2.2 2.3 ரா. பி. சேதுப்பிள்ளை (1993). பிள்ளை கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர். எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை பப்ளிஷர்ஸ். பக். 73-82. https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D. பார்த்த நாள்: 11 சூன் 2020. 
  3. 3.0 3.1 3.2 மாஸ்கரேனஸ், எம். ரம்போலா (1952). தமிழ்த் தொண்டர்கள். சென்னை: ஒற்றுமை நிலையம். பக். 15. https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh3luh8&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/. 
  4. Kolappan, B. (22 June 2014). "Delay, howlers in Tamil Lexicon embarrass scholars". The Hindu (Chennai). http://www.thehindu.com/news/national/tamil-nadu/delay-howlers-in-tamil-lexicon-embarrass-scholars/article6138747.ece.