செங்கிஸ் கான் அன்ட் தி மேக்கிங் ஆஃப் மாடர்ன் வேர்ல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கிஸ் கான் அன்ட் த மேக்கிங் ஆஃப் மாடர்ன் வேர்ல்ட்
நூலாசிரியர்ஜாக் வெதர்ஃபோர்ட்
பட வரைஞர்எஸ். பட்ரல்
அட்டைப்பட ஓவியர்ஸ்டேப்பில்டன் கலக்சன்/கோர்பிஸ்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வகைவரலாறு/சுயசரிதை
வெளியீட்டாளர்கிராவுன் அன்ட் திரீ ரிவர்ஸ் பிரஸ்
வெளியிடப்பட்ட நாள்
2004
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்312
ISBN0-609-80964-4
முன்னைய நூல்த ஹிஸ்டரி ஆஃப் மனி
அடுத்த நூல்த சீக்ரட் ஹிஸ்டரி ஆஃப் த மங்கோல் குயின்ஸ்: ஹவ் த டாட்டர்ஸ் ஆஃப் செங்கிஸ் கான் ரெஸ்கியூட் ஹிஸ் எம்பயர்

செங்கிஸ் கான் அன்ட் த மேக்கிங் ஆஃப் மாடர்ன் வேர்ல்ட் (2004) என்பது ஜாக் வெதர்ஃபோர்ட் என்பவரால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நூல் ஆகும்.[1] இவர் மெக்கலாஸ்டர் கல்லூரியின் டெவிட் வாலஸ் மானுடவியல் பேராசிரியர் ஆவார். இது செங்கிஸ் கான் மற்றும் அவரது பின்வந்தவர்களின் வளர்ச்சி மற்றும் செல்வாக்கு, மற்றும் ஐரோப்பிய நாகரீகத்தின் மீதான அவர்களின் தாக்கம் ஆகியவற்றை கதையாக கூறுகிறது. பெரும்பாலான மேற்கத்திய நூல்களில் உள்ளதை போல் அல்லாமல் வெதர்ஃபோர்ட் செங்கிஸ்கானை பற்றி வித்தியாசமான கோணத்தில் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். செங்கிஸ்கானின் ஆட்சியின் நேர்மறையான கலாச்சார விளைவுகளைப் பற்றி கூறியுள்ளார்.

இந்த நூலின் கடைசிப் பிரிவில் இவர் மேற்கத்திய நாடுகளில் செங்கிஸ் கானின் வரலாற்றைப் பற்றி விமர்சனம் செய்கிறார். ஆரம்ப காலங்களில் வெளிவந்த நூல்களில் "சிறந்த, உன்னத அரசர்" என்று வெளிவந்த இத்தலைவரைப் பற்றிய சித்தரிப்பு, அறிவொளி இயக்க காலத்தில் மிருகத்தனமான சிறு மதத்தை சேர்ந்தவன் என்று மாறியதாக ஜாக் வெதர்ஃபோர்டு வாதிடுகிறார். வெதர்ஃபோர்டு மேற்குலக சம்பந்தமற்ற 3 முதன்மை ஆதாரங்களை இப்புத்தகத்திற்காக பயன்படுத்தியுள்ளார்: மங்கோலியர்களின் இரகசிய வரலாறு, அடா அல்-முல்க் ஜுவய்னியின் தரிக்-இ-ஜஹான்குஷா மற்றும் ரஷித்-அல்-ஹமாதனியின் சமி அல்-தவரிக்.

பின்புலம்[தொகு]

1979 இல் பால் ராட்ச்னெவ்சுகி கூட்டணிகளை உருவாக்குவதில் கானின் சாமர்த்தியம், போரில் கிடைத்த பொருட்களை சரிசமமாக பகிரும் தன்மை மற்றும் அறிவியலுக்கு அவரது ஆதரவு ஆகியவற்றை பற்றி எழுதினார்.[2] அதைப்போலவே சான்டர்ஸ் மற்றும் எச். எச். ஹோவொர்த் ஆகியோரும் சீனா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான அறிவார்ந்த தொடர்புகளை திறந்ததில் மங்கோலியப் பேரரசு பங்களித்ததாக வாதிடுகின்றனர்.[3]

இப்புத்தகம் மேற்கத்திய நாடுகளில் நாகரிகங்களை அழித்த காட்டுமிராண்டிகளாக மங்கோலியர்கள் சித்தரிக்கப்படுவதன் காரணமானது, தங்களுடன் போட்டியிட்ட ஆளும் வர்க்கத்தினரை கையாள அவர்கள் பயன்படுத்திய அணுகுமுறையே என கூறுகிறது. பொதுமக்களை அடி பணிய வைப்பதற்காக ஆளும் வர்க்கத்தவரை கொல்லும் முறையை மங்கோலியர்கள் பயன்படுத்தினர். இந்த நடைமுறையை பிற கலாச்சாரங்களும் பின்பற்றியுள்ளன. தப்பிப் பிழைத்த உயர் சாதி வகுப்பினர் வரலாறுகளை எழுதினர். தங்கள் மீதான மங்கோலிய மிருகத்தனத்திற்கு பழிதீர்க்க, ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ள வரலாற்று நூல்களை பயன்படுத்திக் கொண்டனர். வெதர்ஃபோர்டு மங்கோலிய ஆட்சியின்கீழ் பொதுமக்களை (விவசாயிகள், வர்த்தகர்கள், வணிகர்கள்) மங்கோலியர்கள் நடத்திய விதத்தைப் பற்றிக் கூறுகிறார். ஐரோப்பிய பிரபுக்களை விட மங்கோலிய ஆட்சியானது பொதுமக்களுக்கு குறைவான கஷ்டங்களையே கொடுத்தது. அதற்கான காரணங்கள் குறைவான வரிகள், உள்ளூர் கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் மீதான சகிப்புத்தன்மை, அதிக பகுத்தறிவுடைய நிர்வாகம் மற்றும் சிறுவர்களுக்கு உலகளாவிய கல்வி ஆகியவையாகும்.

இந்த சலுகைகளை மங்கோலிய படையெடுப்பாளர்களிடம் உடனே சரண் அடைந்த மக்கள் மட்டுமே பெற முடிந்தது. எதிர்ப்பைக் காட்டிய மக்கள் மற்ற பட்டணங்கள்/நகரங்களுக்கு கொடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாக கொல்லப்படலாம். இன்னும் வெல்லப்படாத மக்களை எச்சரிக்கை செய்யும் ஒரு உளவியல் போர் முறையாக இந்த படுகொலைகள் செய்யப்பட்டன. இந்த பயங்கரவாதத்தின் விளைவு, வரலாற்று ரீதியான மங்கோலியர்களை பற்றிய சித்தரிப்புக்கு வண்ணம் தீட்ட பயன்படுத்தப்பட்டது.

மங்கோலியர்கள் புல்வெளிகளின் நாடோடி குதிரை வீரர்களாக இருந்த காரணத்தினால் செல்வம் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு, அடிபணிய வைக்கப்பட்ட மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தை சார்ந்திருந்தனர். வெதர்ஃபோர்டின் இப்புத்தகத்தின் கூற்றுப்படி, செல்வத்தை அதிகரிக்க மங்கோலியர்கள் தங்களது குடிமக்கள் மீது வரிச்சுமையை அதிகப்படுத்தாமல் அவர்களை உற்பத்தித் திறனும் ஆர்வத்துடனும் இருக்குமாறு கோரினர். அதைச் செய்ய லாபகரமான சர்வதேச வணிகத்தை மங்கோலியர்கள் ஊக்குவித்தனர். அவர்கள் அறிவியல் முன்னேற்றங்களை ஊக்குவித்ததாகவும், மற்றும் விவசாய மற்றும் உற்பத்தி முறைகளை மேம்படுத்தியதாகவும் இவர் கூறுகிறார். தங்களுடைய பெரிய பேரரசுக்குள் இருந்த பல்வேறு கலாச்சாரங்களின் தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து பல கண்டுபிடிப்புகளை அவர்கள் செய்ததாக கூறுகிறார்.

மரபு[தொகு]

செங்கிஸ்கானின் மரபு மற்றும் தாக்கத்தை வெதர்ஃபோர்டு இப்புத்தகத்தில் ஆராய்கிறார்; காகிதம் மற்றும் அச்சின் பரவல், திசை காட்டி, வெடிமருந்து, மற்றும் வயலின் போன்ற இசைக் கருவிகள் ஆகிய ஐரோப்பிய மறுமலர்ச்சியின் பல அம்சங்களுக்கு செங்கிஸ்கான் மற்றும் மங்கோலிய பேரரசு உருவாக்கிக் கொடுத்த வணிகத்தின் தாக்கமே காரணம் என்று இவர் கூறுகிறார். ஐரோப்பிய மறுமலர்ச்சியானது கிரீஸ் அல்லது ரோமின் மறுபிறப்பு அல்ல, மாறாக மங்கோலியப் பேரரசின் கொள்கைகளின் மறுபிறப்பு என வெதர்ஃபோர்டு கூறுகிறார். அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

  • வானியல்: "மார்க்கோ போலோவின் பயண எழுத்துக்களில் இருந்து பெறப்பட்ட உலுக் பெக்கின் விவரிக்கப்பட்ட நட்சத்திர வரைபடங்களிலிருந்து பெறப்பட்ட அறிவானது பெரும்பாலான மேற்கத்திய உலகில் அறியப்பட்ட பாரம்பரிய வானியல் அறிவு தவறானது என்று நிரூபித்தது." பக். 236

வரவேற்பு[தொகு]

2004 இல் இப்புத்தகம் நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் இரண்டு வாரங்களுக்கு இருந்தது.[4] 2011இல் ஆடிபுல்.காம் (Audible.com) ஆல் நடத்தப்பட்ட ஆடியோ புக்ஸ் போட்டியில் இப்புத்தகம் வெற்றியாளராக கார்ல் மர்லன்டேசின் மேட்டர்ஹார்ன் புத்தகத்துடன் கவுரவிக்கப்பட்டது.[5] 2011இல் சி.என்.என். ஆல் இப்புத்தகம் இந்த வாரத்திற்கான சிறந்த புத்தகம் என்று கவுரவிக்கப்பட்டது.[6] 12 அக்டோபர் 2014 இல் இப்புத்தகம் நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனையாகும் ஈ-புக் பட்டியலில் 6வது இடம் பெற்றது.[7]

உசாத்துணை[தொகு]