செங்காயபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செங்காயபன் என்பவர் சங்ககாலச் சமணத் துறவி. புகழூர்க் கல்வெட்டு இவரைத் தா அமணன் யாற்றூர் செங்காயபன் எனக் குறிப்பிடுகிறது. கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கருவூர் மாவட்டம் சர்க்கரை ஆலை உள்ள புகழூரை அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அதன் உச்சியில் முருகன் கோயில் ஒன்று உள்ளது, மாறையாலான அந்தக் குன்றின் இடைப் பகுதியில் வடபுறமும், தென்புறமும் அகன்ற குகைகள் உள்ளன. அந்தக் குகைகளில் சமண முனிவர்கள் பலர் தங்கித் தவம் செய்துவந்தனர். அவர்களின் தலைவர் இந்த யாற்றூர் செங்காயபன். இந்தக் குன்றை அடுத்து வடபுறம் சுமார் 500 மீட்டர் தொலைவில் காவிரி ஆறு ஓடுகிறது. அங்கு அதன் வடகரையில் நன்செய்ப்புகழூர், புன்செய்ப்பகழூர் என்னும் ஊர்கள் உள்ளன. இது பண்டைக் காலத்தில் அடிக்கடி ஆற்று வெள்ளம் புகுந்த ஊர் என்பதால் புகலூர் என வழங்கப்பட்டுப் பின்னர் புகழூர் என எழுதப்பட்டுவருகிறது. இந்த ஊர்களுக்குப் புகழூர் என்னும் பெயர் தோன்றுவதற்கு முன்னர் ஆற்றூர் என்னும் பெயர் இருந்திருக்க வேண்டும் என்பதை யாற்றூர் (ஆற்றூர்) செங்காயபன் என்னும் கல்வெட்டுக் குறிப்பால் அறியமுடிகிறது.

சமணத் துறவியர் இரு வகையினர். ஒரு சாரார் ஆடை உடுத்தாமல் வானத்தையே ஆடையாகக் கொள்வர். இந்தச் செங்காயபன் இப்படுப்பட்ட துறவி. இவனது பெயரில் உள்ள ‘அமணன்’ (அம்மணன்) என்னும் சொல்லால் இதனை அறியலாம். ‘தா’ என்னும் சொல் குற்றம் என்னும் பொருளைத் தரும். இவன் குற்றத்தை அம்மணமாக்கியவன் எனக் கொள்ளுதலும் ஒன்று. ‘செங்காயம்’ என்னும் சொல்லும் தூய-உடம்பு என்னும் பொருளைத் தருவதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்காயபன்&oldid=2081508" இருந்து மீள்விக்கப்பட்டது