சூழலியல் அடித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூழலியல் அடித்தடம் (ecological footprint) என்பது புவியின் சூழ்நிலைமண்டலத்தின் மீதான மனிதர்களின் தேவையின் ஒரு அளவீடு ஆகும். இது மனிதரின் தேவையை, சூழ்நிலைமண்டலத்தின் மீள்வித்துக்கொள்ளும் ஆற்றலுடன் ஒப்பிடுகிறது. இது ஒரு குறிப்பிட்ட மனிதக் குழுவொன்று பயன்படுத்திய வளங்களை மீள்விப்பதற்கும், மனித நுகர்வின் போது உருவான கழிவுப் பொருட்களை உறிஞ்சிக் கேடு விளைக்காத பொருட்களாக மாற்றுவதற்கும் தேவையான நிலப்பரப்பின் அளவினால் குறிக்கப்படுகின்றது. இம் மதிப்பீட்டின் மூலம், மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் கைக்கொண்டு வாழ்வதைத் தாங்கிக் கொள்வதற்கு எவ்வளவு அல்லது எத்தனை புவிகள் வேண்டும் எனக் கணிப்பிட முடியும். 2005 ஆம் ஆண்டுக்குரிய மனிதகுலத்தின் சூழலியல் அடித்தடம் 1.3 புவிகளுக்குச் சமம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.[1] இன்னொரு வகையில் சொல்வதாயின், புவி தனது பயன்படுத்தப்பட்ட வளங்களை மீள்வித்துக்கொள்வதிலும் 1.3 மடங்கு வேகத்தில் மனிதர் அவ்வளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனலாம். ஒவ்வொரு ஆண்டும் இது புதிதாகக் கணிக்கப்படுகின்றது. இக் கணிப்புக்கு அடிப்படையாக உள்ள புள்ளிவிபரங்களைச் சேகரித்து வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகளுக்கு நேரம் தேவைப்படுவதால், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே இவ்விபரங்கள் வெளியிடப்படுகின்றன.

"சூழலியல் அடித்தடம்" என்னும் பெயர் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தாலும்[2] அதன் கணிப்பீட்டு முறை பல்வேறாகக் காணப்படுகின்றது. எனினும், ஒப்பீட்டு நோக்கங்களுக்காகவும், ஒருசீர்த்தன்மையைப் பேணுவதற்காகவும் தரப்படுத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.[3]

சூழலியல் அடித்தடப் பகுப்பாய்வு[தொகு]

மனித வளர்ச்சிச் சுட்டெணுடன் ஒப்பிட்டுப் பல்வேறு நாடுகளின் சூழலியல் அடித்தடம். மனித வளர்ச்சிச் சுட்டெண் அதிகரிக்கும்போது சூழலியல் அடித்தடமும் அதிகரிப்பதாக அண்மைய சான்றுகள் காட்டுகின்றன.

"சூழலியல் அடித்தடம்" என்பதற்குக் கருத்துரு அடிப்படையில் ஒத்த தனியாள் சூழல் தாக்கக் கணக்குவைப்பு (Personal environmental impact accounting) என்பதை 1990களின் தொடக்கத்தில் உருவாக்கிய டான் லாட்டர் என்பவர் அதனை "என்வைரோஅக்கவுண்ட்" மென்பொருள் என்னும் பெயரில் 1992 ஆம் ஆண்டில் வெளியிட்டார். "சூழலியல் அடித்தடம்" தொடர்பான முதலாவது கல்விசார் வெளியீடு வில்லியம் ரீசு (William Rees) என்பவரால் 1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[4] 190க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், கனடாவின் வான்கூவரில் உள்ள பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்டத்துக்காக மாத்திசு வக்கர்னாகல் (Mathis Wackernagel) என்பவர் வில்லியம் ரீசின் கீழ் செய்த ஆய்வுகளின்போது, "சூழலியல் அடித்தடம்" என்பதன் கருத்துரு, அதன் கணிப்புமுறை என்பன உருவாக்கப்பட்டன.[5] தொடக்கத்தில் வக்கர்னாகலும், ரீசும் இக் கருத்துருவுக்கு "எடுத்துக்கொள்ளப்பட்ட தாங்கு திறன்" (Appropriated Carrying Capacity) எனப் பெயரிட்டு அழைத்தனர்".[6] பின்னர் ரீசு இதற்கு "சூழலியல் அடித்தடம்" என்னும் பெயரை இட்டார். இவரது கணினியின் அடித்தடம் சிறியதாக இருந்ததையும், அது அவரது மேசையில் குறைந்த அளவு இடத்தையே எடுத்ததையும் கணினித் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் பாராட்டியபோது ரீசுக்கு இப்பெயர் தோன்றியது."[7] 1996 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வக்கர்னாகலும், ரீசும் நமது சூழலியல் அடித்தடம்: புவியில் மனித தாக்கத்தைக் குறைத்தல் என்னும் நூலை வெளியிட்டனர்.

சூழலியல் அடித்தடப் பகுப்பாய்வு, மனிதருடைய தேவைகளை, இயற்கை தனது வளங்களை மீள்விக்கும் திறனுடனும் சேவைகளை வழங்கும் திறனுடனும் ஒப்பிடுகிறது. ஒரு மக்கள் கூட்டம் நுகர்வதற்கானவற்றை தற்போதைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கும், அது தொடர்பில் ஏற்படும் கழிவுகளை உறிஞ்சிக் கொள்வதற்கும் தேவையான, உயிரியல் அடிப்படையிலான உற்பத்தித் திறன் கொண்ட நிலப் பகுதியின் அளவையும், கடல் பகுதியின் அளவையும் மதிப்பிடுவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இந்த அளவீடுகளின் முடிவில், அடித்தட மதிப்பீடுகள், கரிமம், உணவு, வீடமைப்பு, பொருட்களும் சேவைகளும் ஆகிய அடிப்படைகளில் வகைபிரிக்கப்படுவதுடன், உலகின் மக்களை தற்போதைய நுகர்வு மட்டத்தின் அடிப்படையில் தாங்கிக் கொள்வதற்குத் தேவையான மொத்தப் புவிகளின் எண்ணிக்கையும் மதிப்பீடு செய்யப்படுகின்றது. இந்த அணுகுமுறையை, ஒரு பொருளை உற்பத்தி செய்வதல், ஒரு தானுந்தைச் செலுத்துதல் ஆகிய நடவடிக்கைகளின் தொடர்பிலோ கூடப் பயன்படுத்த முடியும். இந்த வளக் கணக்கீடு வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு போன்றது. இதில் நுகரப்படும் ஆற்றல், உயிரித்திணிவு (உணவு, நார்ப்பொருள்), கட்டிடப்பொருள், நீர் என்பன போன்ற வளங்கள், உலக எக்டேர் (global hectares) என்னும் நில அளவு அலகுக்கு மாற்றப்படுகிறது.

ஒருவருக்கான சூழலியல் அடித்தடம் என்பது நுகர்வையும், வாழ்க்கை முறையையும் ஒப்பீடு செய்வதற்கான ஒரு வழிமுறையும், இந் நுகர்வுக்கானவற்றை வழங்குவதற்குப் புவிக்குள்ள திறனை அறிவதற்குமான முறையும் ஆகும். இதன் மூலம் ஒரு நாட்டின் நுகர்வின் அளவு அதன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிக்குள் உள்ள வளங்களிலும் அதிகமானதா அல்லது குறைவானதா என்று நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் அறிந்துகொள்ள முடியும். அத்துடன் அந் நாட்டின் வாழ்க்கை முறை எந்த அளவுக்கு உலக நாடுகளால் பின்பற்றப்பட முடியும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். சூழலியல் அடித்தடத்தைப் பயன்படுத்தி இயற்கையின் தாங்குதிறன் (carrying capacity), அளவுமீறிய நுகர்வு (over-consumption) போன்ற கருத்துருக்களை மக்களுக்கு விளங்கவைக்க முடிவதுடன், அதன் மூலம் அவர்களுடைய சூழலுக்குக் கேடு விளைக்கும் தனிப்பட்ட நடத்தைகளையும் மாற்றிக்கொள்வதற்குத் தூண்டமுடியும். இதனைப் பயன்படுத்தித் தற்போதைய வாழ்க்கை முறைகள் பல பேண்தகுநிலை கொண்டவை அல்ல என்பதையும் நிறுவ முடியும். இவ்வகையான உலகம் தழுவிய ஒப்பீடு, வளங்களின் பயன்பாடு தொடர்பில் இந்த 21 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிடையே சமமின்மை நிலவுவதையும் தெளிவாகக் காட்டுகின்றது.

2005 ஆம் ஆண்டில், உயிரியல் அடிப்படையிலான உற்பத்தித்திறன் கொண்ட நிலப்பரப்பு சராசரியாக ஒருவருக்கு 2.1 உலக எக்டேர் (உ.எக்.) ஆகக் காணப்படுகிறது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவின் ஒருவருக்கான சூழலியல் அடித்தடம் ஒருவருக்கு 9.4 உ.எக் ஆக உள்ளது. இதுபோல சுவிட்சர்லாந்தினது ஒருவருக்கு 5.0 உ.எக் ஆகவும், சீனாவினது ஒருவருக்கு 2.1 உ.எக் ஆகவும் காணப்படுகின்றது. இயற்கைக்கான உலகம் தழுவிய நிதியத்தின் (World Wide Fund for Nature) கூற்றுப்படி, மனிதரின் சூழலியல் அடித்தடம் புவியின் உயிரித்தாங்குதிறனிலும் (biocapacity) 20% ஆல் அதிகரித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

"சூழலியல் அடித்தடம்" சூழல்சார் பேண்தகுநிலையின் குறியீடாக உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை பொருளாதாரத்தின் எல்லாப் பகுதிகளிலுமான வளங்களின் பயன்பாட்டை மேலாண்மை செய்வதற்குப் பயன்படுத்த முடியும். இது வாழ்க்கைமுறை, பொருட்களும் சேவைகளும், அமைப்புக்கள், தொழில் துறைகள், நகரங்கள், நிலப்பகுதிகள், நாடுகள் போன்றவற்றின் பேண்தகுநிலை பற்றித் தனித்தனியாக ஆய்வு செய்யவும் உதவுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "தரவு மூலங்கள்". உலக அடித்தட வலையமைப்பு. 2008-10-29. Archived from the original on 2009-10-01. பார்க்கப்பட்ட நாள் 2008-10-31.
  2. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் UNEP அறிக்கைகள். [1] பரணிடப்பட்டது 2009-07-07 at the Portuguese Web Archive
  3. http://www.footprintstandards.org
  4. William Rees (academic) (அக்டோபர் 1992). "Ecological footprints and appropriated carrying capacity: what urban economics leaves out". Environment and Urbanisation 4 (2): 121–130. doi:10.1177/095624789200400212. 
  5. Wackernagel, M. (1994), Ecological Footprint and Appropriated Carrying Capacity: A Tool for Planning Toward Sustainability. Ph.D. ஆய்வுக்கட்டுரை, சமூக மற்றும் பிரதேசத் திட்டக் கல்லூரி. பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகம், வான்கூவர், கனடா.
  6. Wackernagel, Mathis, 1991. "Land Use: Measuring a Community's Appropriated Carrying Capacity as an Indicator for Sustainability;" and "Using Appropriated Carrying Capacity as an Indicator, Measuring the Sustainability of a Community." Report I & II to the UBC Task Force on Healthy and Sustainable Communities, Vancouver.
  7. William Safire, On Language: Footprint, New York Times Magazine, February 17, 2008, http://www.nytimes.com/2008/02/17/magazine/17wwln-safire-t.html?_r=1&adxnnl=1&partner=rssnyt&emc=rss&adxnnlx=1229007727-rHeHNAWQ6qCKYwJ6WbOsVg

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழலியல்_அடித்தடம்&oldid=3766031" இலிருந்து மீள்விக்கப்பட்டது