உள்ளடக்கத்துக்குச் செல்

சூளை சோமசுந்தர நாயகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூளை சோமசுந்தர நாயகர் (ஆகத்து 16,1846--பிப்ரவரி 22,1901) சைவ சித்தாந்தம் என்னும் சிவநெறிக் கொள்கையைக் கடைபிடித்தும் சிவனியத்தைப் பரப்பியும் வாழ்ந்தவர். சைவ சமயக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் விளக்கிப் பல நூல்கள் எழுதியுள்ளார். மறைமலையடிகள் இவரிடம் மாணவராக இருந்து சிவநெறிக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பும் கல்வியும்

[தொகு]

சென்னையில் இருக்கும் சூளையில் இராமலிங்க நாயகர், அம்மணி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.இவருடைய இயற்பெயர் அரங்கசாமி ஆகும்.இவர் அச்சுதானந்த அடிகள் என்பவரிடம் 'தீக்கை'ப் பெற்று தம் பெயரைச் சோமசுந்தரம் என்று மாற்றி அமைத்துக் கொண்டார்.பத்தாம் வரை படித்த சோமசுந்தரம் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழ்ந்த புலமையைப் பெற்றார். பள்ளியில் தெலுங்கும் ஆங்கிலமும் படித்தபோதிலும் புலவர் முத்து வீரர் என்னும் ஆசிரியரிடம் தமிழும் சமற்கிருதமும் கற்றார்.

பணியும் சிவநெறிப்பணியும்

[தொகு]

தொடக்கக் காலத்தில் தோல் கிடங்கில் கணக்கு எழுதியும் பிற்காலத்தில் சென்னை நகராண்மைக்கழகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தும் பணியாற்றினார். சிவநெறி இலக்கியங்களில் சிறந்த பயிற்சி பெற்றமையால் அவற்றை விளக்கி சொற்பொழிவாற்றும் தொண்டில் ஈடுபட்டார்.மாயா வாதம்,வேதாந்தம் ஆகியவற்றைக் காட்டிலும் சைவ சித்தாந்தமே சிறந்தது என்பதை தம் சொற்பொழிவினால் பரப்பினார். சோமசுந்தரத்தின் மாணவர் மறைமலையடிகள் பிற்காலத்தில் தனித் தமிழில் ஈடுபாடு கொண்டதால் சோமசுந்தரமும் தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார். சமற்கிருதத்திலும் புலமைப் பெற்றதால் இவரைப் பார்ப்பனர்களும் போற்றி மதித்தார்கள்.தொன்மங்களில் சொல்லப்பட்ட இழிவான கட்டுக் கதைகளை மறுத்துப் பேசினார். அயலாரால் சிவமதத்தில் நுழைக்கப்பட்ட கொள்கைக் குழப்பங்களை அகற்றினார்.

பெற்ற பட்டங்கள்

[தொகு]

இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் பாஸ்கர சேதுபதி சோமசுந்தர நாயகரின் சொற்பொழிவைக் கேட்டு மிக மகிழ்ந்து 'வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம்'என்னும் பட்டத்தைச் சூட்டினார். மேலும் திருவாவடுதுறை மடம் இவருக்கு 'பரசமயக் கோளரி' என்று பட்டம் அளித்தது.

விவேகானந்தரை வெற்றி கொண்ட பெருமகன்

அமெரிக்காவிற்கு சென்று சொற்பொழிவாற்றிய பின்னர் பெரும் புகழோடு நாடு திரும்பினார் விவேகானந்தர்..

அப்போது இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் தனது அரசவையில் விவேகானந்தர், சோமசுந்தரம் நாயகர் அவர்களுடன் வாதிட வைத்தார்! சைவ சித்தாந்தம் என்கிற தலைப்பில் சோமசுந்தர நாயகரும், வேதாந்தம் என்ற தலைப்பில் விவேகானந்தரும் விவாதம் செய்தனர்.

விவாதத்தின் முடிவில் சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் அவர்கள் விவேகாதந்தரை வெற்றி கொள்கிறார்! மேலும் சோமசுந்தர நாயகரின் ஆழ்ந்த புலமையிடமும் அறிவார்ந்த விவாதத்தின் முன்பும் நான் தோல்வி கண்டதை ஒப்புக் கொள்கிறேன்! ஒப்புக் கொள்கிறேன்!! ஒப்புக் கொள்கிறேன்!! என்று மூன்று முறை கூறினார்.

மேலும் தான் அமெரிக்கா செல்லும் முன்பு தங்களை (சோமசுந்தர நாயகர்) சந்தித்து விவாதிக்க நேர்ந்திருந்தால், அமெரிக்காவில் எனது பேச்சுக்கு மேலும் பல வெற்றிகள் கிடைத்திருக்கும் என்று மனம் உருகினார்..

## இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியானது இராமேஸ்வரம் சிவன் கோவில் கல்வெட்டாய் உள்ளது..

ஆசிரியர்,மாணவர்ப் பற்று

[தொகு]

சோமசுந்தர நாயகர் தம் மாணவரான மறைமலையடிகளைத் தம் மகனாகக் கருதி மதித்தார். மறைமலையடிகளும் அவ்வாறே தம் ஆசிரியரைப் பெரிதும் போற்றினார். சோமசுந்தர நாயகர் மறைந்தபோது மறைமலையார் 'சோமசுந்தரக் காஞ்சி' யைப் பாடினார். மேலும் 'சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் நூலையும் 'சோமசுந்தர நாயகர் வரலாறு' என்னும் நூலையும் மறைமலையடிகள் எழுதினார்.

படைப்புகள்

[தொகு]
 • சித்தாந்த ஞானபோதம்
 • சித்தாந்த உந்தியார்
 • சித்தாந்த சேகரம்
 • சிவகிரி பதிற்றுப் பத்தந்தாதி
 • சிவநாமாவளி
 • சைவ சூளாமணி
 • பரம பத பிங்க வினா விடை
 • சிவதத்துவ சிந்தாமணி
 • சமரச ஞானதீபம்
 • சன்மார்க்க போத வெண்பா
 • ஞானபோத விளக்கம்
 • ஞானபோதத் துணிவு
 • சிவவாக்கியத் தெளிவுரை

உசாத்துணை

[தொகு]

செம்மொழிச் செம்மல்கள் -2 ஆசிரியர்: முனைவர் பா. இறையரசன் தமிழ் மண் பதிப்பகம்,சென்னை -17

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூளை_சோமசுந்தர_நாயகர்&oldid=3428882" இலிருந்து மீள்விக்கப்பட்டது