சூல்சு செலசுடின் சாமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூல்சு சாமின்.

சூல்சு செலசுடின் சாமின் (Jules Célestin Jamin) (31 மே 1818 ல் பிறந்து 12 பிப்ரவரி 1866 வரை வாழ்ந்தவர்.) ஒரு பிரெஞ்சு இயற்பியலாளர். 1852 முதல் 1881 வரை ஈகோல் தொழிற்நுட்பக் கல்லூரியில் (École Polytechnique) இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1858 ல் ஒளியியலில், தான் செய்த வேலைக்காக ரம்போர்டு பதக்கம் (Rumford Medal) பெற்றார். டேவிட் புரூசுடரின் சாய்ந்த குறுக்கீட்டு விளைவு தகடுகளில் மாறுபாடுகளைச் செய்து சாமின் குறுக்கீட்டுமானியை வடிவமைத்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

சூல்சு சாமினின் தந்தையின் பெயர் ஆன்டனி பியர்ரே சாமின், குதிரைப்படையில் உயரதிகாரியாக இருந்தவர். அவர் தனது படிப்பில் சிறந்து விளங்கியமையால், கல்விக்கான உதவித்தொகையைப் பெற்றார். ரெய்ம்சு கல்லூரியில் (college of Reims) தனது கல்லூரிப் படிப்பை தொடங்கி முதலாம் ஆண்டிலேயே ஒன்பது விருதுகளைப் பெற்றார்.[1] 1838 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் போட்டியில் கலந்து கொண்டு கானர்சு (honors) பட்டத்துடன், பல விருதுகளையும் பெற்றார். அதே ஆண்டு அக்டேபர் மாதத்தில் École normale supérieure என்ற கல்வி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு கணிதம், இயற்பியல் அறிவியல் மற்றும் இயற்கை அறிவியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார்.

1841 ல் இயற்பியல் அறிவியல் துறையில் நடந்த போட்டியில் முதன்முதலாகப் பட்டம் வென்றார். கேயன் (Caen) கல்லூரியில் படிக்கும் போது முதலிடத்தைப் பிடித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து பார்பன் (Bourbon) கல்லூரியில் பதிலி (substitute) ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் 1844 ல் லூயிசு லி கிராண்ட் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். கேயன் கல்லூரியில் படிக்கும் போதே தான் தொடங்கிய உலோகங்களின் பரப்பின் மீது ஒளி எதிரொளிப்பு பற்றிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார்.

1852 ல் ஈகோல் தொழிற்நுட்பக் கல்லூரியில் பேராசியராகப் பணியில் சேர்ந்தார். 1881 வரை அப்பணியில் தொடர்ந்தார். ஒளியியல் துறையில் அவர் ஆற்றிய பணிக்காக 1858 ஆம் ஆண்டு ரம்போர்டு பதக்கம் வழங்கப்பட்டது. 1863 ஆம் ஆண்டு பாரிசு பல்கலைக் கழக ஆசிரியர் குழு பேராசியராக ஏற்றுக் கெள்ளப்பட்டார்.[2]

1868 ல் பிரெஞ்சு அறிவியல் ஆசிரியர் குழுவில் இணைந்தார், அதே ஆண்டு இயற்பியல் ஆராய்ச்சி சோதனைச்சாலையை அமைத்து, அதற்கு தானே தலைமையேற்றார்.[3]

சாமின் குறுக்கீட்டுமானி

இவர் காந்தவியல், மின்னியல், ஈரப்பதம் மற்றும் நுண்புழை நுழைவு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார். பளபளப்பான தரையில் ஒளியின் நீள் வட்ட முனைவாக்கம் (elliptical polarization of light) உருவாவதைக் கண்டறிந்தார்.[4]

1851 ல் தெரசா என்பவரை மணந்தார். இவருடைய மகள் லூசி புகழ் பெற்ற இயற்பியலாளர் என்றி பெக்கெரல்லை மணந்தார். இவருடைய மகன் பால் சாமின் ஒரு ஓவியராவார்.

வேலைகள்[தொகு]

  • La rosée, son histoire, son rôle (சாமினின் வாழ்க்கை ), 2004 இல் வில்லாரோசு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது, ISBN 2-9510883-3-7) — இது அவருடைய ஆராய்ச்சிகளைப் பற்றிய புத்தகமாகும்.

பாராட்டுகள்[தொகு]

ஈபெல் கோபுரத்தில் பொறிக்கப்பட்டுள்ள 72 பெயர்களில் இவரின் பெயரும் ஒன்று.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lockyer, Norman (1885). Nature.. v.33=no.836-861 (1885-1886). London, etc.: Macmillan Journals Ltd., etc.. பக். 493. https://www.biodiversitylibrary.org/item/90501. 
  2. "Rumford Medal | Royal Society". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  3. Gillispie, Charles (1970). Dictionary of Scientific Biography Volume 8. New York: Scribner. பக். 387. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-684-10114-9. 
  4. Gillispie, Charles (1970). Dictionary of Scientific Biography Volume 5. New York: Scribner. பக். 496. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-684-10114-9. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்சு_செலசுடின்_சாமின்&oldid=3456248" இலிருந்து மீள்விக்கப்பட்டது