வலய மறைப்பு
சூரியனின் மையப்பகுதி மட்டும் நிலவினால் மறைக்கப்பட்டு, விளிம்புப்பகுதி மறைக்கப்படாமல் இருக்கும் போது, ஒரு ஒளி-வளையம் போன்ற தோற்றத்துடன் சூரியன் காட்சியளிக்கும்; இதுவே சூரியனின் கங்கணகிரகணம் (annular eclipse) அல்லது வலயக்கிரகணம் அல்லது வளைய மறைப்பு என்று அழைக்கப்படுகிறது[1]. இது சூரிய கிரகணத்தின் (Solar Eclipse) (அனலி[2] மறைப்பு) ஒரு வகையாகும்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில்(conjunction) இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். முதலாவது முழு சூரிய கிரகணம் என்றும் பின்னர் கூறப்பட்டது பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது. புவியைப் பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும்; இதில் இரண்டு கிரகணங்கள் வரை முழு சூரிய கிரகணங்களாக அமையலாம் -- சில ஆண்டுகள் முழு கிரகணம் ஒன்று கூட ஏற்படாமலும் போகலாம்.[3]
பொருளடக்கம்
- 1 சூரிய கிரகணங்களின் வகைகள்
- 2 கங்கண கிரகணம் (வலயக்கிரகணம்) எவ்வாறு தோன்றுகிறது?
- 3 கங்கண கிரகணம் தோற்றக்காரணம்
- 4 பெயர்க்காரணம்
- 5 பொங்கல் கிரகணம்
- 6 கிரகணங்கள் பற்றிய மூடநம்பிக்கைகள்
- 7 கங்கண கிரகணத்தை (அல்லது எந்த ஒரு சூரிய மறைப்பையும்) வெற்றுக்கண்ணால் பார்க்கலாமா?
- 8 நிலவின் கலைகள்
- 9 குறிப்புகள்
- 10 வெளி இணைப்புகள்
சூரிய கிரகணங்களின் வகைகள்[தொகு]
சூரிய கிரகணம் நான்கு வகைப்பட்டவை. அவை:
-
- முழு கிரகணம் (அ) முழு மறைப்பு
- பகுதி கிரகணம் (அ) பகுதி மறைப்பு
- கங்கண கிரகணம் (அ) வலய மறைப்பு
- கலப்பு கிரகணம்[4] (அ) கலப்பு மறைப்பு
கங்கண கிரகணம் (வலயக்கிரகணம்) எவ்வாறு தோன்றுகிறது?[தொகு]
அனைத்து சூரிய மறைப்புகளும் முழு மறைப்புகளாக இருப்பதில்லை; சில தருணங்களில், சூரியனை முழுவதுமாக மறைக்கும் அளவிற்கு நிலவு பெரியதாகத் தோன்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம்<[5].
கங்கண கிரகணம் தோற்றக்காரணம்[தொகு]
புவியைப் பொறுத்து நிலவின் பாதை வட்டமானதன்று; அது ஒரு நீள்வட்டப்பாதை ஆகும். எனவே பூமியிலிருந்து நிலவின் தொலைவு ஒரே அளவாக இருப்பதில்லை; சிறுமத்தொலைவாக 356,000 கி.மீ (221,000 மைல்)-இலிருந்து பெருமத்தொலைவாக 407,000 கி.மீ(252,000 மைல்) -வரை உள்ளது. இந்த வேறுபாடு, புவியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு நிலவின் அளவில் 13 விழுக்காடு அளவிற்கு மாற்றத்தைத் தோற்றுவிக்கும்; இதன் காரணமாக நிலவின் எதிர்நிழல் (antumbra) பகுதியில் புவியில் சில பகுதிகள் இருக்கும். எதிர்நிழலின் பாதையே வலயமறைப்பு ஏற்படும் பகுதிகள் ஆகும்.[6]
முழு மறைப்பு[தொகு]
புவியிலிருந்து நிலவு சிறுமத்தொலைவில் உள்ள போது, அது சூரியனை விட அளவில் பெரியதாகவோ அல்லது சம அளவாகவோ தோன்றும் -- அத்தருணம் அனலி மறைப்பு [சூரிய கிரகணம்] ஏற்பட்டால் அது ஒரு முழு மறைப்பாக இருக்கும்.
வலய மறைப்பு[தொகு]
புவியிலிருந்து நிலவு பெருமத்தொலைவில் உள்ள போது, அது சூரியனை விட அளவில் சிறியதாகத் தோன்றும் -- அத்தருணம் சூரிய மறைப்பு ஏற்பட்டால் அது ஒரு வலய கிரகணமாக இருக்கும்[7].
பெயர்க்காரணம்[தொகு]
கங்கணம் என்பது ஒருவகைக் கைவளையைக் குறிக்கும்; வளையலைப் போல் தோற்றம் அளிப்பதால் இது கங்கணகிரகணம் என்ற பெயர் பெற்றது;[8]. வலயம் என்றால் வட்டம் என்ற பொருள் வருவதால் இது வலயக்கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது[9].
பொங்கல் கிரகணம்[தொகு]
ஜனவரி 15, 2010 அன்று சாரோசு சுழற்சி 141 -ன் இருபத்திமூன்றாவது மறைப்பு ஏற்படுகின்றது; இது பொங்கல் கிரகணம் எனப்படுகிறது. இது ஒரு கங்கணகிரகணம் என்பதே இதன் சிறப்பு. இக்கிரகணம் ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, நடு ஆசியா, தென் ஆசியா, சீனா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் தென்படுகின்றது. இதன் வலய கட்டம் (annular phase) மத்திய ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, மியன்மார், கிழக்கு சீனாவில் சில இடங்கள் ஆகிய பகுதிகளில் ஏற்படுகின்றது.
பொங்கல் கங்கண கிரகணம் ஏன் ஏற்படுகிறது?[தொகு]
2010-ஆம் ஆண்டு சனவரி 03ஆம் தேதியன்று பூமி ஞாயிற்றண்மை நிலையை (perihelion)வந்தடையும். (அதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு சிறுமமாக இருக்கும்: 147மில்லியன் கிலோ மீட்டர்) அதன் காரணமாக, மறைப்பிற்கு 12 நாட்கள் முன்னதாகவே (சனவரி 3 அன்று), சூரியனின் வட்ட உருவம் வழக்கத்தைவிட பெரிய அளவில் தென்படும். அதேபோல், சனவரி 17ஆம் தேதியன்று (01:41 UTC) நிலவு புவிச்சேய்மை நிலையை (apogeee)வந்தடையும். (நிலவு பூமியிலிருந்து பெரும தொலைவில் இருக்கும்: 406,433கி.மீ.) எனவே, கிரகணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே சந்திரனின் வட்ட உருவம் வழமையை விட சிறிய அளவில் இருக்கும்.
இவ்விரண்டு நிகழ்வுகளும் (புவியின் ஞாயிற்றண்மை நிலை, நிலவின் புவிச்சேய்மை நிலை) ஒன்றுபடுவதால், சனவரி 15-ஆம் தேதி நிகழும் கங்கண மறைப்பு வழக்கத்தை விட அகலமாகத் தோன்றும்.
மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள்[தொகு]
சனவரி 15 - அன்று தெரியவிருக்கும் வலய மறைப்பின் போது பலவிதமான அயனிமண்டல ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது விக்ரம் சாராபாய் விண்வெளி மையம். இதன் பொருட்டு நான்கு ஆராய்ச்சி எறிகணைகளை (sounding rockets) சனவரி 14 -அன்றும் மேலும் ஐந்து ஆராய்ச்சி எறிகணைகளை சனவரி 15 - அன்றும் செலுத்தி ஆய்வுகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
- மிக வேகமாக மாற்றமடையும் சூரியப் பாயம் (solar flux) வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளின் ஒளிவேதியியலையும் மின்னியக்கவிசையியலையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்திடும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது -- குறிப்பாக நிலநடுக்கோட்டு மத்திய வளிமண்டல எல்லை (equatorial mesopause) , வெப்ப வளிமண்டல-அயனிமண்டல (thermosphere-ionosphere) அடுக்குகளில் ஞாயிறுமறைவுக்குப் (sunset) பிறகு அயனிமண்டலத்தின் அயனியாக்கத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு மின்சுழல்கள் உருவாவது சில நாட்கள் திடீரென நடக்கின்றது; இதனால் ஜி.பீ.எஸ் எனப்படும் நில வழிநடத்து (செயற்கைக்கோள்) அமைப்பில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த ஆராய்ச்சி இதைப்பற்றி புரிந்துகொள்ள உதவும் என்று விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கூறுகிறது. [10]
எங்கு தெரியும் இந்த பொங்கல் கிரகணம்?[தொகு]
-
- கங்கண கிரகணமாகத் தெரியும் இடங்கள் : மத்திய ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 300 கி.மீ.-அகலம் கொண்ட 12,900 கி.மீ நீளமுடைய நெடும்பாதை; புவியின் 0.87 விழுக்காடு நிலவின் எதிர்நிழலினுள் வரும்.
-
- அதாவது, உகாண்டா, கென்யா, தெற்கு சோமாலியாவில் தொடங்கி இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவுகள் சென்று, பின்னர் தென்னிந்தியா, வட இலங்கை வழியே மியான்மாரை அடைந்து இமய மலையின் வழியே சீனாவைச் சென்றடையும்; சீனாவில் யூனான், சிசுவான் மாநிலங்களை அடைந்தபின் நிலவின் இந்த எதிர்நிழல் (antumbra) ஷாங்க்சி, ஊபே மாநிலங்களைத் தாண்டிய பின்னர் புவியை விட்டே வெளியேறி விடும்.
-
- பகுதி கிரகணமாகத் தெரியும் இடங்கள்: ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தோனேசியா பகுதிகள் உள்ளடங்கிய பாதை நிலவின் புறநிழலில் (penumbra) வரும்.[11]
தமிழ்நாட்டில் பொங்கல் கிரகணம் தெரியும் இடங்கள்[தொகு]
-
- 77 பாகை கிழக்கு ( 77 0 E ) முதல் தோராயமாக 80 பாகை கிழக்கு வரை ( 80 0 E ); மேலும் 8 பாகை வடக்கு ( 8 0 N ) முதல் தோராயமாக 11.5 பாகை வடக்கு வரை ( 11.5 0 N ) ; இவற்றில் உள்ளடங்கிய பகுதிகள் பொங்கலன்று தெரியும் வலயக்கிரகணத்தின் பாதையில் உள்ளன. ( பார்க்க. நிலப்படம் சனவரி 15, 2010 பொங்கல் வலயக்கிரகணம் தெரியும் இடங்கள்)
- தெற்கே கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி- லிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, இராமேசுவரம், அம்பாசமுத்திரம், தென்காசி, இராசபாளையம், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம் வடக்கே சீர்காழி வரை உள்ள பகுதிகள் கங்கண கிரகணத்தின் பாதையில் உள்ளன; தமிழகத்தின் பிற இடங்களில் பகுதி கிரகணம் தென்படும்.
தமிழ்நாட்டில் கங்கணகிரகணம் தோன்றுவது இதுதான் முதல் முறையா?[தொகு]
சனவரி 15, 2010 அன்று தோன்றும் வலய மறைப்பிற்கு முன்னர் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் 1901 -ஆம் ஆண்டு நவம்பர் 11 -அன்று ஒரு வலய மறைப்பு ஏற்பட்டது! இதுவும் சாரோசு சுழற்சி 141 -இன் ஒரு அங்கமே.
பொங்கல் கிரகணத்திற்குப் பின் 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -அன்று மீண்டும் ஒரு கங்கணகிரகணம் தோன்றும்[12].
(பெருமமாக) மறைக்கும் நேரம் (இந்திய நேரப்படி)[தொகு]
- நாகை - 13:14, கன்னியாகுமரி - 13:15, திருநெல்வேலி - 13:16, மதுரை - 13:20, ராமேசுவரம் - 13:21, சிவகங்கை - 13:22, தஞ்சாவூர் - 13:23, திருவாரூர் - 13:24, காரைக்கால் - 13:24. [13]
கிரகணங்கள் பற்றிய மூடநம்பிக்கைகள்[தொகு]
கிரகணங்கள் பற்றிய மூடநம்பிக்கைகள் சிலவற்றைப் பற்றி பொங்கல்.காம் என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள்:
- "கிரகணத்தின்போது வெளியே செல்லக்கூடாது".
-
- சரியல்ல. மறைப்பின்(கிரகணத்தின்) போது வெளியே செல்ல ஒருவர் அஞ்சுமளவிற்கு சூரியன் புதிதாகவோ அல்லது மோசமாகவோ எதையும் உமிழப்போவதில்லை. அனலி மறைப்பு(சூரிய கிரகணம்) என்பது இயற்கையின் ஆச்சரியமூட்டகூடிய ஒரு நிகழ்வு; இந்நிகழ்வை தருணமாகப் பயன்படுத்தி வெளிச்சென்று அனுபவியுங்கள். அதேநேரத்தில், பாதுகாப்பான முறையில் கிரகணக் காட்சியைக் காண்பதற்கான ஏதேனும் ஒரு முறையைக் கடைப்பிடிக்க மறந்துவிடாதீர்கள்.[14]
- "கிரகண நேரத்தில் குழந்தை பிறப்பது பாதுகாப்பற்றது"
- "கிரகணத்தின்போது உணவு சமைப்பதோ, உட்கொள்வதோ பாதுகாப்பற்றது"
-
- இதுவும் தவறான கருத்தே.
கங்கண கிரகணத்தை (அல்லது எந்த ஒரு சூரிய மறைப்பையும்) வெற்றுக்கண்ணால் பார்க்கலாமா?[தொகு]
கூடவே கூடாது. அனலியை (சூரியனை) வெற்றுக்கண்ணாலோ இருகண் நோக்கி அல்லது தொலைநோக்கி வழியாகவோ பார்க்கவே கூடாது. இதுவே சூரிய கிரகணத்தைக் காண விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான அறிவுரை.[16] எனவே, இந்த வானியல் அதிசயத்தைக் காண விரும்புவோர், போதிய பாதுகாப்பு முறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
சூரிய கிரகணங்களைப் பாதுகாப்பான முறையில் காண்பது எவ்வாறு?[தொகு]
- எறிவி (Projector) முறைகள்:
- 14-ஆம் எண் கொண்ட பற்றவைப்போர் கண்ணாடியின் மூலம்.
- சிறப்பு வடிகட்டி கண்ணாடி -- அலுமினியப்பூச்சினாலான பாலியெஸ்டர்.
நிலவின் கலைகள்[தொகு]
பூமியை ஒருமுறை சுற்றி வர நிலவுக்கு 29 1/2 நாள்கள் ஆகின்றது. இவ்வாறு சுற்றி வருகையில் பல்வேறு கட்டங்களை புவியிலுள்ளோருக்கு அளிக்கிறது:
- புது நிலவு (அமாவாசை)
- புது பிறை (நான்காம் நாள்)
- முதல் கால்பிறை (ஏழாம் நாள்)
- வளர் முகிழ்மதி (பத்தாம் நாள்)
- முழு நிலவு (பதிநான்காம் நாள்)
- தேய் முகிழ்மதி (பதினெட்டாம் நாள்)
- இறுதி கால்பிறை (இருபத்தியிரண்டாம் நாள்)
- பழைய பிறை(இருபத்தியாறாம் நாள்)
- மீண்டும் புது நிலவு (இருபத்தி ஒன்பதாம் நாள்)[21]...
புது நிலவின் போது நிலவைக் காண இயலாது. ஏனெனில் பூமியை நோக்கியுள்ள நிலவுப்பகுதியின் மீது சூரியவொளி சிறிதும் படுவதில்லை.
குறிப்புகள்[தொகு]
- ↑ Hermit.org [1]
- ↑ Ta Wiktionary [2]
- ↑ லிட்மேன், மார்க்; பிரட் எசுபேனக், கென் வில்காக்சு (2008). Totality: Eclipses of the Sun. ஆக்சுபோர்டு யூனிவர்சிடி பிரசு. பக். 18-19. ISBN 0199532095.
- ↑ Hermit.org /why_solar.html#Annular
- ↑ mreclipse.com [3]
- ↑ பில்கேசல்மேன்.காம் [4]
- ↑ mreclipse.com [5]
- ↑ Tamil Lexicon [6]
- ↑ Tamil Lexicon [7]
- ↑ The Hindu-VSSC expects insights from eclipse [8]
- ↑ நாசா [9]
- ↑ pongaleclipse.com [10]
- ↑ தினத்தந்தி [11]
- ↑ பொங்கல் கிரகணம்.காம் [12]
- ↑ பொங்கல் கிரகணம்.காம் [13]
- ↑ exploratorium.edu [14]
- ↑ Pongal.com [15]
- ↑ Exploratarium.com [16]
- ↑ Space.com [17]
- ↑ pongaleclipse.com [18]
- ↑ http://www.enchantedlearning.com/subjects/astronomy/moon/Phases.shtml
வெளி இணைப்புகள்[தொகு]
- hermit.org
- mreclipse.com
- pongaleclipse.com
- பொங்கல் மறைப்பின் போது பெய்லீயின் மணிகள் படத்திற்கு [19]