உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியச் சின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரியச் சின்னம் என்பது சூரியனைக் குறிப்பதற்காகப் பயன்படும் ஒரு குறியீடு ஆகும். உளப்பகுப்பாய்வு, குறியியல், சோதிடம், சமயம், தொன்மவியல், குறிசொல்லல், மரபுச் சின்னவியல் போன்ற துறைகளில் சூரியச் சின்னங்கள் பயன்படுகின்றன. சூரியச் சின்னங்கள் பல்வேறு வடிவங்களைக் கொண்டவையாக உள்ளன.

வட்டச் சமச்சீர் வடிவங்கள்

[தொகு]

வட்டம்

[தொகு]

எளிமையான ஒரு வட்டம் சூரியனைக் குறிக்கும் சின்னமாகப் பயன்படுவது உண்டு.

மையத்தில் புள்ளியைக் கொண்ட வட்டம்

[தொகு]
புள்ளியுடன் கூடிய வட்டம்
புள்ளியுடன் கூடிய வட்டம்

வட்டமொன்றின் மையத்தில் புள்ளியைக் கொண்ட குறியீடு சூரியனைக் குறிக்கப் பயன்படுவது உண்டு. இது வானியல், சோதிடம் ஆகிய துறைகளில் சூரியனைக் குறிக்கப் பயன்படுகின்றது. பண்டை எகிப்து மொழியில் சூரியனைக் குறிக்கும் "ரா" என்பதன் குறியீடும் இதுவே. பழங்காலச் சீன மொழியில் சூரியன், பகல் என்பவற்றைக் குறிக்கும் குறியீடும் இது போன்றதே. எனினும் தற்காலத்தில் இது சதுரவடிவம் கொண்டதாக மாறிவிட்டது.

நாற்படிச் சமச்சீர் வடிவம்

[தொகு]

சூரியச் சிலுவை

[தொகு]
சூரியச் சிலுவை
சூரியச் சிலுவை

"சூரியச் சிலுவை" அல்லது "சூரியச் சில்லு" எனப்படும் சூரியச் சின்னம் ஒரு வட்டத்தை நான்காகப் பிரிக்குமாறு அதற்குள் ஒன்ன்றுக்கொன்று செங்குத்தாக வரையப்பட்ட இரண்டு கோடுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்த நான்கு பிரிவுகள் நான்கு பருவகாலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

சுவசுத்திக்கா

[தொகு]
உடைந்த சூரியச் சிலுவை, வட்டச் சுவசுத்திக்கா
உடைந்த சூரியச் சிலுவை, வட்டச் சுவசுத்திக்கா

சுவசுத்திக்காவை "சூரியச் சிலுவை" சின்னத்திலிருந்து இருந்து உருவாக்க முடியும். சில வேளைகளில் இது சூரியச் சின்னமாகப் பயன்படுகின்றது. எனினும் பல பண்பாடுகளில், இது பிற பொருள்களைக் குறிக்கும் குறியீடுகளாகவும் பயன்படுவது உண்டு. இந்து, பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களில் இது வேறு பொருள் குறிக்கின்றது.

எண்முனை விண்மீன்

[தொகு]
உடுமுர்ட்டியாவின் கொடி
உடுமுர்ட்டியாவின் கொடி

பெரும்பாலும் நாற்படிச் சமச்சீருடன் கூடிய என்முனை விண்மீன் வடிவங்கள் சூரியனைக் குறிக்கின்றன. இவ்வடிவங்கள், உடுமுர்ட்டியா, மோர்டோவியா, மாரி எல், சுவாசியா போன்ற உருசிய நாட்டின் உட்பிரிவுகளின் கொடிகளில் சூரியனைக் குறிக்கும் குறியீடாகப் பயன்படுகின்றன. இதே பொருள் குறிக்கும் வகையில் இச் சின்னம் 1959 - 1963 காலப் பகுதி ஈராக்கின் கொடியிலும் அமைந்திருந்தது. பண்டைக்காலத்தில் ஊராலியப் பழங்குடியினர் தமது குறியீடாக இதனைக் கொண்டிருந்தனர்.

இரட்டைச் சூரியச் சிலுவை

[தொகு]
இரட்டைச் சூரியச் சிலுவை
இரட்டைச் சூரியச் சிலுவை

வட்டமொன்றை எட்டுப் பாகங்களாகப் பிரிக்கும் வகையில் நான்கு குறுக்குக் கோடுகளைக் கொண்ட குறியீடு இது. எட்டு ஆரைக்கால்கள் கொண்ட சில்லின் வடிவம் கொண்டது. இதுவும் சூரியனைக் குறிக்கும் ஒரு சின்னம் ஆகும்.


முப்படிச் சமச்சீர் வடிவம்

[தொகு]

முச்சுருளி

[தொகு]
சில்லு வடிவில் அமைந்த முச்சுருளிச் சின்னம்
சில்லு வடிவில் அமைந்த முச்சுருளிச் சின்னம்

மூன்று சுருளிகள் ஒன்னுடன் ஒன்று பிணைந்த அமைப்பைக் கொண்டவையே முச்சுருளி வடிவங்கள். சில முச்சுருளி வடிவங்கள் சூரியனைக் குறிப்பதற்கான குறியீடுகளாகப் பயன்படுகின்றன. உருசியாவின் உட்பிரிவுகளில் ஒன்றான இங்குசேத்தியக் குடியரசின் கொடியில் காணப்படும் முச்சுருளி வடிவம் சூரியனைக் குறிக்கிறது.

அறுபடிச் சமச்சீர் வடிவம்

[தொகு]

உரோசாவிதழுரு

[தொகு]
"உரோசாவிதழுரு"
"உரோசாவிதழுரு"

உரோசாப்பூவின் இதழ்களைக் காட்டுவதாகக் கூறப்படும் ஆறு இதழ்களுடன் அமைந்த இந்த உரோசாவிதழுரு என்னும் வடிவம், அங்கேரியில் ஒரு சூரியச் சின்னமாகவும், ஒரு அழகூட்டல் கூறு ஆகவும் பயன்படுகிறது. இதே சின்னம், சிலேவியப் பகுதிகளில் வியாழனைக் குறிக்கிறது. இது பல்வேறு பாரம்பரியக் கலைகளிலும், பண்டைய கட்டிடக்கலையிலும் அலங்காரக் கூறாகப் பயன்பட்டது. பொதுவாக இச்சின்னம் அரசியல் தொடர்புகள் அற்ற பாரம்பரியச் சின்னமாகவே கருதப்பட்டாலும், எசுப்பானியாவின் தன்னாட்சியுடன் கூடிய அசுட்டூரியாசுப் பகுதியில் சில தேசியவாத இயக்கங்கள் இதனைத் தமது சின்னமாகப் பயன்படுத்துகின்றன.

சூரிய வட்டம்

[தொகு]
சூரிய வட்டம்
சூரிய வட்டம்

வட்டமொன்று மூன்று குறுக்குக் கோடுகளால் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்படும் வகையில் அமைந்த வடிவமே சூரிய வட்டம் எனப்படுகிறது. சிலாவியப் பகுதியில் சூரியச் சின்னமாகப் பயன்படும் இக் குறியீடு இசுபுருச் சிலைகளிலும் காணப்படுகிறது. அச் சிலைகளில் இது போர்க் கடவுளான சுவாந்தவிட்டைக் குறிப்பதாகக் கூறப்படுகின்றது.

கதிர் அமைப்பிலான வடிவம்

[தொகு]

முக்கோணக் கதிர்கள்

[தொகு]
பழைய பிரான்சுத் தேவாலய ஓவியம்
பழைய பிரான்சுத் தேவாலய ஓவியம்

வட்டமான நடுப் பகுதியையும், அதிலிருந்து விரிந்து செல்வதுபோல் வரையப்பட்ட முக்கோண வடிவக் கதிர்களையும் கொண்ட குறியீடுகள் சூரியனின் சின்னமாகப் பயன்படுகின்றன. இவ்வாறான சூரியச் சின்னங்களில் கதிர்களின் எண்ணிக்கை மாறுபடுவது உண்டு. கதிர்கள் நேரான, வளைந்த, அல்லது அலைவடிவிலான முக்கோணங்களாக அமைவது உண்டு. பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சாமாசு என்னும் சூரியக் கடவுளைக் குறிக்கும் சின்னத்தில் நான்கு நேர் முக்கோணங்களும், அவற்றின் இடையே அமைந்த நான்கு அலைவடிவ முக்கோணங்களும் கதிர்களைக் குறிக்க வரையப்பட்டுள்ளன. உருகுவே, கிரிபாட்டி ஆகிய நாடுகளின் கொடிகளிலும், ஆர்சென்டீனாக் கொடியின் சில வகைகளிலும், ஐரியப் பாதுகாப்புப் படையினரின் தொப்பியில் உள்ள சின்னத்திலும் இவ்வகையான கலப்பு வடிவங்களைக் காணலாம். சீனக் குடியரசு, கசாக்கிசுத்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் கொடிகளில் நேர் முக்கோணங்களால் அமைந்த சூரியச் சின்னங்கள் உள்ளன. கிர்கிசுத்தான் கொடியில் அலைவடிவக் கதிர்களுடன் கூடிய சூரியன் உள்ளது. பிலிப்பைன்சு நாட்டுக் கொடியில் கதிர்கள் நடுவில் இருந்து விரிந்து செல்வதுபோல் அமைந்துள்ளன.

தமிழர் அரசியலில் சூரியச் சின்னங்கள்

[தொகு]

இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர் அரசியலில் அண்மைக் காலத்தில் சூரியச் சின்னம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இச் சின்னங்கள் உதய சூரியனைக் குறிப்பதாக அமைந்துள்ளன.

தமிழ் நாடு

[தொகு]

1957 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் சின்னமாக உதய சூரியனை ஏற்றுக்கொண்டது. மலைகளுக்கு இடையில் இருந்து சூரியன் உதிப்பது போல் அமைந்த சின்னம் அது. அரைவட்ட வடிவத்திலிருந்து கதிர்கள் விரிந்து செல்வது போன்ற அமைப்புக் கொண்டது திமுகவின் உதய சூரியன் சின்னம்.

இலங்கை

[தொகு]

இலங்கையில் மூன்று தமிழ் அரசியல் கட்சிகள் சேர்ந்து தமிழர் கூட்டணியை உருவாக்கியபோது அதன் சின்னமாக உதய சூரியன் தெரிவு செய்யப்பட்டது. உதய சூரியன் அக் கட்சியின் தேர்தல் சின்னமாக மட்டுமன்றி அதன் கொடியிலும் உதய சூரியன் பெரிய அளவில் பொறிக்கப்பட்டிருந்தது. இச்சின்னம் அரை வட்டத்திலிருந்து கதிர்கள் செல்வதுபோல் அமைந்தது. இதன் கதிர்கள் முக்கோண வடிவில் அமைந்தவை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சின்னங்கள்&oldid=3391494" இலிருந்து மீள்விக்கப்பட்டது