சூரத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரத்கர் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் கங்காநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சியாகும்.

வரலாறு[தொகு]

சூரத்கர் நகரமானது மகாராஜா கங்கா சிங்கின் ஆட்சியில் பெரிதும் வளர்ச்சியடைந்தது. மாவட்டம் நிறுவப்பட்டபோது ஹனுமன்கர் மற்றும் பிகானேர் ஆகியவை சூரத்கர் மாவட்டத்தின் கீழ் வந்தன. 1927 இல் கங்கை கால்வாய் நிறுவப்பட்டது சூரத்கரை உருவாக்க உதவியது. பாகிஸ்தானில் இருந்து பல்வேறு அகதிகள் வந்து அங்கு குடியேறத் தொடங்கியபோது அது ஒரு நகரமாக மாறியது. சூரத்கர் மத்திய மாநில பண்ணை 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி கால்வாய் திட்டம் மற்றும் மத்திய விலங்கு இனப்பெருக்கம் பண்ணை நிறுவப்பட்டது. மேலும் விமான மற்றும் இராணுவ தள நிலையம், ஆகாஷ்வானி மற்றும் பல்வேறு அலுவலகங்கள் நிறுவப்பட்டன. சூரத்கர் வெப்ப மின் நிலையம் 1998 நவம்பர் 3 முதல் செயல்படத் தொடங்கியது. இது சூரத்கர் நகரத்தின் முன்னேற்றத்தில் மைல்கல்லாக அமைந்தது. இது 1500 மெகாவாட் வெப்ப மின் நிலையத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் சிறந்த முறையில் இயங்கும் ஆலைகளில் ஒன்றிற்கான விருதை வென்றுள்ளது.

புவியியல்[தொகு]

சூரத்கர் 29.317701 ° வடக்கு 73.898935 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 168 மீட்டர் (551) அடி உயரத்தைக் கொண்டுள்ளது.

காலநிலை[தொகு]

சூரத்கர் தார் பாலைவனத்தின் எல்லைக்குள் இருப்பதால், இப்பகுதி மிகவும் வெப்பமான கோடை மற்றும் குளிர்ந்த குளிர்காலம் கொண்ட வெப்பமான பாலைவன காலநிலையைக் கொண்டுள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதி ஆண்டின் வெப்பமான மாதங்கள் ஆகும். இக்காலப் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 118 °F (48 °C) க்கு மேல் இருக்கும். மேலும் நாளின் சராசரி வெப்பநிலை 95 °F (35 °C) க்கு மேல் இருக்கும். மே மாதங்களில் சில நாட்களிலும், சூன் மற்றும் சூலை மாதங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து 122 °F (50 °C) ஐ தாண்டும். ஆண்டு முழுவதும் ஈரப்பதம் 50% க்கும் குறைவாகவே இருக்கும். கோடை மற்றும் குளிர்கால மாதங்களின் உச்சத்தில் ஈரப்பதம் தொடர்ந்து 20% வீதத்திற்கும் குறைகிறது. பாலைவன காலநிலையை கொண்டிருப்பதால் மழை குறைவாக கிடைக்கின்றது. ஆண்டு முழுவதும் சராசரி மழை வீழ்ச்சி 10 அங்குலங்களுக்கும் (25 செ.மீ) குறைவாக இருக்கும். கோடை மாதங்களில் பாலைவனத்தின் குறுக்கே வீசும் வறண்ட காற்று மாலை நேரங்களில் பொதுவாகக் காணப்படும் தூசி புயல்களைத் தூண்டிவிடும். குளிர்காலம் பொதுவாக லேசானது. குளிர்க்கால வெப்பநிலை சராசரியாக 55 °F ஆக இருக்கும். திசம்பர் மற்றும் சனவரி மாதங்களின் சில நாட்களில் வெப்பநிலை 33 °F (1 °C) வரை குறைகிறது.[2]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி  சூரத்கர் நகராட்சியில் 70,536 மக்கள் வசிக்கின்றனர். இதில் 37,126 ஆண்களும், 33,410 பெண்களும் அடங்குவர். ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9037 ஆகும்.[3]

இது சூரத்கர் மொத்த மக்கட் தொகையில் 12.81% வீதம் ஆகும். சூரத்கர் நகரத்தின் கல்வியறிவு விகிதம் 75.68% வீதம் ஆகும். இது மாநில சராசரியான 66.11% ஐ விட அதிகமாகும். சூரத்கரில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 83.19% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 67.39% ஆகவும் உள்ளது.[3]

பொருளாதாரம்[தொகு]

முக்கிய பாதுகாப்பு நிலையங்களும் சூரத்கர் வெப்ப மின் நிலையமும் நிலையான பொருளாதாரத்திற்கு ஊக்கமளித்து வருகிறது. ஸ்ரீ சிமென்ட் லிமிடெட் மற்றும் பாங்கூர் சிமென்ட் யூனிட் என பெயரிடப்பட்ட புதிதாக கட்டப்பட்ட சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைகள் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து சாம்பலைப் பயன்படுத்துகின்றன. பிபிசி, ஓபிசி மற்றும் பிரீமியம் சீமேந்து என்பவற்றை உற்பத்தி செய்கின்றன. உள்ளூர் மக்களில் பெரும்பாலோர் விவசாய நடவடிக்கைகளை சார்ந்துள்ளனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்கர்&oldid=3587014" இருந்து மீள்விக்கப்பட்டது