சூரக்குடி செகுட்டு அய்யனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரக்குடி செகுட்டு அய்யனார் கோயில் என்பது சிவகங்கை மாவட்டத்தில் சூரக்குடி ஊராட்சி S.கோவில்பட்டியில் அமைந்துள்ள காவல் தெய்வக் கோயிலாகும். [1] இக்கோவில் முத்தரையர் (வலையர்அம்பலகாரர்) சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவிலாகும். இக்கோயிலை காட்டுக் கோயில், செடிக்கோயில் என்று அழைக்கின்றனர். இக்கோயிலில் மதில்சுவர், கட்டிடம், மின் விளக்குகள் போன்றவை இல்லை. இயற்கையான செடிகளைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. செகுட்டு அய்யனை கண்டெடுத்தவர்கள் முத்தரையர் (வலையர்அம்பலகாரர்) சமுதாய மக்கள் ஆவர். இன்றளவும் பாரம்பரிய முறைப்படி புரவி எடுப்பு திருவிழாவை நடத்தி வருகிறார்கள். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமியாட்டம் ஆடுவது முத்தரையர் சமுதாய மக்களான அம்பலகாரர்கள் மட்டுமே மற்றும் இம்மக்கள் காலம்காலமாக செகுட்டு அய்யனுக்கு காது வளர்த்து வருகிறார்கள்.

தலவரலாறு[தொகு]

முன்னொரு காலத்தில் முத்தரையர் (வலையர்அம்பலகாரர்)சமுதாயத்தை சேர்ந்த பெரியண்ணன் அம்பலம், சின்னையா அம்பலம் முன்னோர்கள் இருவர், வளர்ப்பு நாயுடன், காட்டு வழியே இருவேறு பாதைகளில் மானை வேட்டையாட வந்தனர், இரவில் தங்கும்படி ஆனது. அப்போது பசிக்காக கிழங்கைத் தேடி நிலத்தினை தோண்டினர். இதனால் அங்கிருந்த அய்யனார் சிலையின் காதில் காயம் பட்டது. இதனால் தங்களின் வாரிசுகளுக்கும் இவ்வாறே காதில் துளையிட்டுக் கொள்வதாக வேண்டிக் கொண்டனர். செகுட்டு அய்யனை கண்டெடுத்தவர்கள் முத்தரையர்(வலையர்அம்பலகாரர்) சமுதாய மக்கள் ஆவர்.

இவ்வாறு காதில் காயம் பட்டதால், அய்யனாரை செவிட்டு அய்யனார் என்று அழைத்தனர். இது மருவி செகுட்டு அய்யனார் என்று அழைக்கப்படுகிறது.இக்கோவிலானது சிவகங்கை மாவட்டம் சூரக்குடி ஊராட்சி S.கோவில்பட்டி ஊரில் அமைந்துள்ளது.இவ்வூரில் முத்தரையர் சமுதாய மக்கள் மட்டும் வாழக்கூடிய ஊராகும். S. கோவில்பட்டி என்ற ஊரின் முழு விரிவாக்கம் செகுட்டு அய்யனார் கோவில்பட்டியாகும்.

காது வளர்க்கும் ஊர் மக்கள்[தொகு]

செகுட்டு ஐயனார் கோயில் அமைந்திருக்கும் சூரக்குடி ஊராட்சி S.கோவில்பட்டியில், ஏறத்தாழ 400 முத்தரையர் குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் வசிக்கின்றனர். ஐயனார் செவிடான மரபு வழிக் கதையை நிரூபிக்கும் வகையில் இவ்வூரில் ஒரு வினோதமான பழக்கம் பல வருடங்களாகத் தொடர்கிறது. ஐயனார் செவிடானதால் தாங்கள் தெய்வ குற்றம் செய்ததாக உணர்ந்த மக்கள், "உன் காதை ஊனமாக்கிய நாங்களும் எங்கள் சந்ததியினரும் காதை ஊனமாக்கி கொள்கிறோம்" என வேண்டியுள்ளனர். அதன்படி, அன்றிலிருந்து இன்று வரை இவ்வூர் மக்கள் காது வளர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். குழந்தை பிறந்த 3 மாதங்களில் காதில் கத்தியால் துளையிட்டு வளையத்தை மாட்டி தொங்க விடுவர். வளையத்தின் எடை தாங்காமல் காது சில நாட்களில் கீழ் நோக்கி இழுபடத் தொடங்கும். இவ்வாறு மக்கள் தங்களது காதை வளர்த்துக் கொள்கின்றனர். இதில் ஆண், பெண் என வேறுபாடு இல்லை. திருமண வயதில் உள்ள சில பெண்கள் வளர்ந்த தங்கள் காதை வெட்டி, மீண்டும் ஒட்ட வைத்துக் கொள்வதும் நடந்துள்ளது. நாகரீகம் கருதியும், திருமணம் தடைபடுவதைக் கருத்தில் கொண்டும் தற்போது பெண்களுக்கு மட்டும் காது வளர்ப்பதில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர், காது வளர்க்க மறுத்த சிலருக்கு காது செவிடாதல், உடல் ஊனமாதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.

ஆதாரம்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=16078 அய்யனாருக்கு காது வளர்க்கும் ஆம்பள வாரிசுகள் - தினமலர்