சூபிக் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதையின் பெயர்: சந்திர காந்தக்கல்

சூபிகளின் சின்னம்
சூபிகளின் தத்துவம்
ஒரு சூஃபி ஞானி

பல வருடங்களுக்கு முன்னால் தான் சென்றிருந்த ஓர் ஊருக்கு மாறுவேடமிட்டு, சூஃபி ஞானி மீண்டும் போனார். ஏனெனில், முன்பு அவர் சென்ற போது, அவரின் அறிவுரைகளைக் கேட்காமல், சூஃபியின் மீது கோபம் கொண்டு, அவரைக் கற்களால் அடித்து விரட்டியிருந்தனர்.

தற்பொழுது அவரை அடையாளம் தெரிந்து கொள்ளாத மக்களிடம், என்னிடம் ஒரு சந்திர காந்தக்கல் இருக்கிறது. அபூர்வ கற்களை வியாபாரம் செய்யும் எனக்கு, இந்தக் கல் என் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்தது. இது சந்திரனிலிருந்து, பூமியில் விழுந்ததாகப் பெரியவர்கள் சொன்னார்கள். அக்கல்லைப் பார்த்தாலே, செய்த பாவங்கள் விலகும். நோய் நீங்கும். எதிரிகள் விலகுவர் என பலவாறு சோதிடரைப் போல உரை நிகழ்த்தினார்.

உடனே, மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். நான்தான் முதலில் பார்ப்பேன், எனக்குத் தான் முதலில்.. என்று அங்கே பெரிய அடிதடி ரகளையே நடந்தது. சூஃபி உடனே அவர்களைப் பார்த்து , இதை சும்மா காட்ட மாட்டேன். இதைப் பார்க்கக் கட்டணம் என்று கூறி, அதற்கான கட்டணத்தைக் கூறினார். அக்கட்டணத்தை மக்கள் ஏற்று , சந்திர காந்தக்கல்லைப் பார்க்க வரிசையில் நின்றனர். எல்லோரும் உரிய கட்டணத்தைக் கொடுத்து, அந்த சந்திர காந்தக்கல்லைப் பார்த்தனர். பலர் தங்கள் சிரமங்கள், அப்பொழுதே விலகியதாகக் கூறி வியந்தனர். சிறிது நேரத்திலேயே, ஞானிக்கு நிறைய பணம் சேர்ந்து விட்டது.

அன்று மாலை கூடியிருந்த மக்கள் முன் ஞானி, மக்களால் சேர்ந்த பணம் அனைத்தினையும் கொட்டினார். பின்பு, பின்வருமாறு உரை நிகழ்த்தினார். சில நாட்களுக்கு முன் நான் உங்களிடம் நல்லதைச் சொன்ன போது, நீங்கள் என்னைக் கற்களால் அடித்து விரட்டினீர்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அங்ஙனம் அடித்தக் கற்களுள் ஒன்று தான், இந்த சந்திர காந்தக்கல். இந்த முறை, நான் மிகைப்படுத்திப் பொய்யானத் தகவலைச் சொன்னேன். நீங்கள் பணத்தை அள்ளிக் கொடுக்கிறீர்கள். உழைக்காமல் பொருளீட்டப் பார்க்கிறீர்கள் என்றுரைத்து விட்டு, மாறுவேடத்தினைக் களைந்தார்.

அதனைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து, வெட்கி தலைக்குனிந்தனர். அப்பொழுது ஞானி, அவர்கள் கொடுத்த அனைத்துப் பணத்தினையும் அவர்களிடமே கொடுத்து விட்டு, அங்கிருந்து அகன்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூபிக்_கதை&oldid=1094983" இலிருந்து மீள்விக்கப்பட்டது