உள்ளடக்கத்துக்குச் செல்

சு. முத்துலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சு. முத்துலட்சுமி
பிறப்பு30 சூலை 1886
திருக்கோகர்ணம், புதுக்கோட்டை அரசாட்சி, பிரித்தானிய இந்தியா (தற்போது
புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு22 சூலை 1968(1968-07-22) (அகவை 81)
மதராசு
(தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா
அறியப்படுவதுசமூகப் போராளி, பெண் உரிமை தன்னார்வலர்,மருத்துவர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
டி. சுந்தரரெட்டி
பிள்ளைகள்இராம்மோகன் கிருஷ்ணமூர்த்தி

சு. முத்துலட்சுமி (Muthulakshmi)(சூலை 30, 1886 - சூலை 22, 1968) ஆகிய இவர் முத்துலட்சுமி ரெட்டி என்று பரவலாக அறியப்படுகிறார். மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் முத்துலட்சுமி ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.[1][2]

1926 ஆம் ஆண்டு மதராஸ் சட்டமன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம், பெண்களின் சமத்துவத்தை நிலைநாட்டவும் சமூக அநீதிகளை நீக்கவும் அவர் மேற்கொண்ட வாழ்நாள் முயற்சியின் தொடக்கமாக அமைந்தது.பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடிய சமூக மாற்ற செயற்பாட்டாளராக அவர் விளங்கினார். [3][4][5]அவரது வாழ்க்கையில் பல முதல்முறைகள் இடம்பெற்றுள்ளன. ஆண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்ட முதல் பெண் மாணவி, அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் முதல் பெண் இல்ல வைத்தியர், பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், மாநில சமூக நல ஆலோசனை வாரியத்தின் முதல் தலைவி, சட்டமன்ற துணைத் தலைவர் பதவியில் இருந்த முதல் பெண் மற்றும் மதராஸ் மாநகராட்சியில் பணியாற்றிய முதல் பெண் ஆகிய பெருமைகளை பெற்றார். 1931 ஆம் ஆண்டு “அவ்வை இல்லம்” அமைத்தார்.[6][7]

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை அரசில் பிறந்த அவர், அக்காலத்தில் பெண்கள் எதிர்கொண்ட பல கட்டுப்பாடுகளையும் கடந்து உயர்கல்வி பெற்றார். [8]1907 ஆம் ஆண்டு மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். பல தங்கப்பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்று 1912 ஆம் ஆண்டு மருத்துவ பட்டம் பெற்றார்.[9] இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவராக விளங்கினார்.பின்னர் அன்னி பெசன்ட் மற்றும் மகாத்மா காந்தியின் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டார்.[10]1947 ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடியில் அவரது பெயர் இடம்பெற்றது.

பிறப்பு

[தொகு]

இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி ஐயர், சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். இவரின் தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலவிய காலக் கட்டத்தில், அதை உடைத்து 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரின் தந்தை பக்க பலமாக இருந்தார். வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை என்பதுடன் உள்ளூர் கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடும் இருந்தது.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

கல்லூரியில் சேர்ந்த பின், சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-இல் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.[சான்று தேவை]

திருமணத்தில் ஆர்வம் இல்லை. [சான்று தேவை]அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Annie Beasant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.[11]

தாக்கங்கள்

[தொகு]

தன் கல்லூரி காலத்தில் முத்துலட்சுமி, சரோஜினி நாயுடுவை சந்தித்து பெண்கள் கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார். பெண்களின் உரிமைகள் குறித்து ஒரே எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.அவரது வாழ்க்கையில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய முக்கியமானவர்கள் மகாத்மா காந்தி மற்றும் அன்னி பெசன்ட் ஆவர். அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணிக்குமாறு அவரை ஊக்குவித்தனர்.மகாத்மா காந்தி அவரை விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க அழைத்தபோதும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக முழுநேரம் செலவிட விரும்பியதால் அவர் மறுத்தார். எனினும், 1930 ஆம் ஆண்டு குடியுரிமை மீறல் இயக்கத்தில் பெண்கள் பங்கேற்பை அவர் ஆதரித்தார்.மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். பெண்கள் வீட்டிற்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், அவர்களின் விடுதலைக்காக அவர் பாடுபட்டார்.[12]

தமிழ்ப் பணிகள்

[தொகு]

இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.

சமூகப்பணி

[தொகு]
  • 1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
  • அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
  • 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு,[13] இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
  • அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
  • சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கினார்.[14] அதற்காகப் பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் இரண்டாவது பெரிய புற்றுநோய் மருத்துவமனையான இது சுமார் 80000 நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளது.[15][16]

விருதுகள் மற்றும் நூல்கள்

[தொகு]
'ஒரு சட்டமன்ற உறுப்பினராக எனது அனுபவங்கள்' (1930) நூலின் தலைப்புப் பக்கம்

முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்தது.[17]“மை எக்ஸ்பீரியன்ஸ் அஸ் அ லெஜிஸ்லேட்டர்” (1930) என்ற அவரது நூலில், மதராஸ் சட்டமன்றத்தில் சமூக மாற்றங்களுக்காக செய்த முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன.புற்றுநோய் தடுப்பு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதிற்கு ரெட்டி ஊக்கமாக இருந்தார்.[18]

மறைவு

[தொகு]

முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். [19]

நினைவஞ்சலி

[தொகு]

2019 ஜூலை 30 அன்று, கூகுள் நிறுவனம் அவருடைய 133வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் டூடில் ஒன்றை வெளியிட்டது.2022 ஆம் ஆண்டு, வி.ஆர். தேவிகா எழுதிய “முத்துலட்சுமி ரெட்டி – அறுவைச் சிகிச்சை மற்றும் பெண்களின் உரிமைகளில் முன்னோடி” என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. இந்த நூல், இந்திய பெண்களின் முன்னேற்றத்திற்கு அவர் செய்த மருத்துவ, சமூக மற்றும் பெண்ணிய பங்களிப்புகளை வலியுறுத்துகிறது.[20]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kamatchi, M. (2016). "Muthulakshmi Reddy: The First Medical Woman Professional in South India". Proceedings of the Indian History Congress 77: 612–623. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/26552689. 
  2. "List of recipients of Padma Bhushan awards (1954–59)" (PDF). Ministry of Home Affairs (India). 14 August 2013. pp. 1–9. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 23 August 2015.
  3. Hartog, P. J.; Selby-Bigge, L. A.; Ahmed, S. Sultan; Anderson, G.; Narendranath; Reddi, S. Muthulakshmi; Statham, R. M. (1929). Interim Report of the Indian Statutory Commission Review of Growth of Education in British India by the Auxiliary Committee Appointed by the Commission. Calcutta, Central Publication Branch.
  4. Yadav, Karan (July 30, 2019). "Dr Muthulakshmi Reddy: The unsung feminist of India". India Today (in ஆங்கிலம்). Retrieved 2022-05-16.
  5. "Dr. Muthulakshmi Reddi: A Powerful Face of Nationalist Feminism". The Wire. Retrieved 2022-05-16.
  6. "Avvai Home". www.avvaihome.org. Retrieved 2025-02-18.
  7. Devika, V. R. (2018-04-26). "Dr. Muthulakshmi Reddy, a rebel with a cause" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/dance/dr-muthulakshmi-reddy-a-rebel-with-a-cause/article23681989.ece. 
  8. Kumar, Sneha (2018-05-28). "Dr. Muthulakshmi Reddy: Founder Of Adyar Cancer Institute | #IndianWomenInHistory". Feminism In India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2022-05-16.
  9. "The inspiring story of Dr Muthulakshmi Reddy, Who broke barriers in Education, Medicine and Law". DailyRounds (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-07-31. Retrieved 2022-05-16.
  10. Madras medical college – history பரணிடப்பட்டது 10 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம்
  11. "பாரதி கண்ட புதுமைப் பெண்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 1 ஆகத்து 2014. p. 8. Archived from the original on 2016-03-06. Retrieved 1 ஆகத்து 2014.
  12. Padmanabhan, Geeta (2015-03-03). "Stones that tell a story" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/metroplus/city-explorer-stones-that-tell-a-story/article6955543.ece. 
  13. "தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி குறித்து தெரியுமா?". BBC News தமிழ். 2020-08-20. Retrieved 2021-10-17.
  14. தினமணி கொண்டாட்டம், 2023 02 19 பக்.2
  15. "Adyar Cancer institute". Archived from the original on 2017-01-01. Retrieved 2021-10-17.
  16. Viswanathan, S. "The Pioneers: Dr Muthulakshmi". Frontline. The Hindu. Retrieved 26 April 2013.
  17. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/mar/08/womens-day-muthulakshmi-reddy-3376050.html
  18. "88 nurses honoured with 'Dr Muthulakshmi Reddy certificate' for their service in cancer prevention" (in en-IN). The Hindu. 2016-02-07. https://www.thehindu.com/news/national/tamil-nadu/88-nurses-honoured-with-dr-muthulakshmi-reddy-certificate-for-their-service-in-cancer-prevention/article8204840.ece. 
  19. "திராவிடத்தூண் தர்மாம்பாள்". Archived from the original on 2008-12-01. Retrieved 2009-01-03.
  20. "Muthulakshmi Reddi's 133rd Birthday". Google.com. 30 July 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._முத்துலட்சுமி&oldid=4505205" இலிருந்து மீள்விக்கப்பட்டது