சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் (S.A.Vengada Subburaya Nayagar) ஓர் இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். 1963 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். புதுச்சேரியில் வசித்து வரும் இவர் பிரெஞ்ச், தமிழ், ஆங்கில மொழிகளுக்கிடையே மொழிப்பாலம் அமைத்து  பல சிறந்த புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். ஆன்டன் செகாவ், ஆல்ஃபர் காம்யூ, ஹினர் சலீம், தாஹர் பென் ஜீலோவ்ன், லூயி பஸ்தேர் போன்ற பல பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் பிரெஞ்சு மொழியிலிருந்து இவரது நேரடி மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்துள்ளன.[1] சங்க இலக்கிய நூல்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்றவற்றை முழுமையாகத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழியாக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தாஹர் பென் ஜீலோவ்ன் பிரெஞ்சு மொழியில் எழுதி, இவரால் தமிழாக்கம் செய்யப்பட்ட ‘உல்லாசத் திருமணம்’ என்னும் நூல் இந்திய மொழிகளில் வெளியான சிறந்த மொழியாக்க நூலாக தெரிவு செய்யப்பட்டு, பிரெஞ்சு அரசின் ‘ரோமன் ரோலன் 2021’ விருது பெற்றது.

பிறப்பும், கல்வியும்[தொகு]

சு. ஆ .வெங்கட சுப்புராய நாயகர், ஏப்ரல் 3, 1963-ல் புதுச்சேரியில் பிறந்தார். பெற்றோர் மு. சு. ஆறுமுக நாயகர் – ராஜரத்தினம் அம்மாள். புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் பிரெஞ்சு முதுகலைப் பட்டமும், புதுவைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு ஆய்வறிஞர் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.

1994 இல் பிரான்சின் பெசன்சோன், கிரேனோபில் ஆகிய ஊர்களில் உள்ள கல்வி நடுவங்களில் பிரெஞ்சு அரசின் உதவியுடன் மூன்று மாத பயிற்சி பெற்றார். 2008 இல் மீண்டும் பிரெஞ்சு அரசின் உதவியுடன் இரு மாதங்கள் பாரீசில் தங்கி தேசிய நூலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். பிரான்சு நாட்டின் நிதிநல்கையுடன் 201 ஆம் ஆண்டு பிரான்சின் ஆர்ல் என்னும் ஊரில் அமைந்துள்ள அனைத்துலக இலக்கிய மொழிபெயர்ப்பாளர் நடுவத்தில் மூன்று மாதங்கள் தங்கி உய்பெர் அதாத் என்னும் பிரெஞ்சு எழுத்தாளரின் விரும்பத்தக்க உடல் என்னும் புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.[2]

தொழில்[தொகு]

கடந்த 33 ஆண்டுகளாக புதுச்சேரி கல்லூரிகளில் பிரெஞ்சு பேராசிரியராகவும், இலக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆய்வு நிறுவனம், பிரெஞ்சு துறைத் தலைவராகப் பணிபுரிகிறார். இதுவரையில் சொந்தப் படைப்புகள், மொழிபெயர்ப்புகள் என பதினான்குக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு மக்கள் தமிழ் கற்க உதவும் மொழிக் கையேடு, குறுந்தகடு, புதுச்சேரி பொது அறிவு வினா விடை ஆகியவற்றையும் படைத்துள்ளார். தமிழ் சங்க இலக்கியச் செல்வங்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றை முழுமையாகப் பிரெஞ்சு மொழியாக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரெஞ்சு - தமிழ் இலக்கியப் பரிவர்த்தனை எனும் தலைப்பில் சாகித்திய அகாதமியின் ஆய்வுத்திட்டப் பணியினை முடித்துள்ளார். மேலும், தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளில் 130-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் பல தேசிய, சர்வதேச ஆய்வரங்குகளில் வழங்கியுள்ளார். 1994, 2008, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் பிரான்ஸ் சென்று, பிரஞ்சுஅரசின் உதவியுடன் பிரான்ஸில் சில மாதங்கள் பயிற்சியும், நூலகங்களில் ஆய்வும், மொழியாக்கத்திட்டப்பணியும் மேற்கொண்டார். பல இலக்கிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ள இவரது மொழியாக்கப் பணியினைப் பாராட்டி மும்பை ஸ்பேரோ (Sparrow) அமைப்பு கடந்த டிசம்பர் மாதம், இலக்கிய விருது 2020-ல் வழங்கிப் பாராட்டியது. 

இந்திய மொழிகளில் வெளியான சிறந்த மொழியாக்க நூலாக இவரது ‘உல்லாசத் திருமணம்’ என்னும் நூல் தெரிவு செய்யப்பட்டு, ரோமன் ரோலன் 2021 மொழியாக்கப் பரிசினைப் பிரெஞ்சு அரசு கொல்கத்தா இலக்கியத் திருவிழாவில் 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் வழங்கிச் சிறப்பு செய்தது.[3] மேலும், 2022 ஏப்ரல் மாதத்தில் பாரீஸில் நடந்த புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்தது. ‘உல்லாசத் திருமணம்’ என்னும் இந்த மொழியாக்க நூல் கேரளப் பல்கலைக்கழக முதுகலைத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் (புலம்பெயர் இலக்கியம்) இடம் பெற்றுள்ளது. நல்லி திசை எட்டும் விருது 2022, செப்டம்பரில் இவருக்கு வழங்கப்பட்டது. பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்து வரும் இவரது மொழியாக்கத்தில் உள்ள எளிமை எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், பிரபஞ்சன் போன்ற பல இலக்கிய ஆளுமைகளின் பாராட்டைப் பெற்ற பெருமைக்குரியதாகும்.

நூல்கள்[தொகு]

பிரெஞ்சு[தொகு]

  1. ‘Destination: le tamoul parlé’, with an audio CD. April 2008. Published by Astarté Publicaions. Pondicherry.
  2. பிரஞ்சு மக்கள் பேச்சுத்தமிழ் கற்க உதவும் கையேடு, குறுந்தகடுடன்.

தமிழ்[தொகு]

  1. புதுச்சேரி பொது அறிவு வினா விடை - நயாகரா பதிப்பகம், புதுச்சேரி, 2009.
  2. கலகம் செய்யும் இடது கை – (பிரெஞ்சு கதைகளின் மொழியாக்கம்), நற்றிணை பதிப்பகம், சென்னை, 2012.
  3. அத்தையின் அருள் - கண்ணம்மா பதிப்பகம், புதுச்சேரி, 2013.
  4. அப்பாவின் துப்பாக்கி - ஹினர் சலீம், (பிரெஞ்சிலிருந்து தமிழில்), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2013,
  5. கடவுள் கற்ற பாடம் – (பிரஞ்சு கதைகளின் மொழியாக்கம்), நற்றிணை பதிப்பகம், சென்னை, 2015.
  6. சூறாவளி - லெகிளெஸியோ, (பிரெஞ்சிலிருந்து தமிழில்), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2015.
  7. ஃபுக்குஷிமா - மிக்காயேல் ஃபெரியே, (பிரெஞ்சிலிருந்து தமிழில்), தடாகம் பதிப்பகம், சென்னை. 2016.
  8. விரும்பத்தக்கஉடல்[4] - ஹூபெர் ஹதார், (பிரஞ்சிலிருந்து தமிழில்),  காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2018.
  9. ஆன்டன் செக்காவ் ஆகச்சிறந்த கதைகள், தடாகம் பதிப்பகம், சென்னை, 2019.
  10. உல்லாசத்திருமணம் - தாஹர் பென் ஜீலோவ்ன், தடாகம் பதிப்பகம், சென்னை. 2020.
  11. வாழ்வு… இறப்பு… வாழ்வு… - (லூயி பஸ்தேரின் வாழ்க்கை வரலாறு), தடாகம் பதிப்பகம், சென்னை, 2020.
  12. வீழ்ச்சி – அல்பர் கமுய், (பிரெஞ்சிலிருந்து தமிழில்), காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2021.
  13. தண்டனை - தாஹர் பென் ஜீலோவ்ன், (பிரெஞ்சிலிருந்து தமிழில்), தடாகம் பதிப்பகம், சென்னை, 2022.

விருதுகள்[சான்று தேவை][தொகு]

  1. இளங்கலை பிரெஞ்சு பட்டத்தில் அதிக சதவீத மதிப்பெண் பெற்றதகான சான்றிதழ், கேடயம் 1985.
  2. முதுகலை பிரெஞ்சு பட்டத்தில் அதிக சதவீத மதிப்பெண் பெற்றதகான சான்றிதழ், கேடயம் 1987.
  3. சிறந்த பிரெஞ்சு கல்வியாளர் விருது, 2012.
  4. இலக்கியப் பங்களிப்புக்கான ‘ஆல்ஃபர் காம்யூ விருது’, புதுச்சேரி, 2013.
  5. மொழிபெயர்ப்புக்கான ‘ஈரோடு தமிழன்பன் விருது’, புதுச்சேரி, 2014.
  6. மொழிபெயர்ப்பு மாமணி விருது’, 2018.
  7. மொழிபெயர்ப்புக்கான ‘ஸ்பாரோ இலக்கிய விருது’, 2020.
  8. ரோமன் ரோலண்ட் புத்தக விருது’, பிரெஞ்சு அரசு, 2021.
  9. தமிழ்ச்சங்க விருது’, புதுவை தமிழ்ச்சங்கம், 2021.
  10. இல்லாரா உத்தியானா ட்யூப்யூஸ் விருது’, இறை ஊழியர் லூயில் சவேனியன் ட்யூப்பூஸ் வரலாற்றுச் சங்கம், புதுச்சேரி, 2021.
  11. மொழிபெயர்ப்புக்கான ‘நல்லி – திசை எட்டும் விருது’, 2022.
  12. மொழிபெயர்ப்புக்கான ‘நல்லி – திசை எட்டும் விருது’, 2022.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அறிவியல், சமூக, வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பதும் அவசியம்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் நேர்காணல்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/930188-interview-with-s-a-venkata-subbaraya-nayakar.html. பார்த்த நாள்: 2 February 2023. 
  2. மொழிபெயர்ப்பாளர் புதுவை சீனு. தமிழ்மணி, கட்டுரை, வெங்கட சுப்புராய நாயகர் 60: பிரெஞ்சு - தமிழ் மொழிப் பாலம் 1 ஏப்ரல் 2013, இந்து தமிழ் திசை
  3. "60: பாரிஸ் உலகப் புத்தகத் திருவிழாவில் கெளரவிக்கப்பட்ட புதுச்சேரிப் பேராசிரியர்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/literature/793984-360-events.html. பார்த்த நாள்: 11 December 2022. 
  4. "விரும்பத்தக்க உடல் /உய்பெர் அதாத் ; பிரெஞ்சிலிருந்து தமிழில், சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர். Virumpattakka uṭal /Uyper Atāt ; Pireñciliruntu Tamil̲il, Cu. Ā. Veṅkaṭa Cuppurāya Nāyakar. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.