சுவராசு பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவராசு பால் (Swaraj Paul பிறப்பு 18 பிப்பிரவரி 1931) என்பவர் இங்கிலாந்தின் பெரும் தொழில் முதலாளியாகவும் பணக்காராகவும் கொடையாளராகவும் கல்வியாளராகவும் விளங்கி வருபவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.[1]

தொழில் முனைப்பு[தொகு]

இந்தியாவில் இருக்கும்போது அபிஜே என்னும் குழுமத்தில் சுவராசு பால் வேலை செய்தார். பின்னர் 1966 ஆம் ஆண்டில் இலண்டனில் குடியேறினார். 1968 இல் இயற்கை வாயுக் குழாய்கள் குழுமத்தைத் தொடங்கினார். அதன் வளர்ச்சியாக வங்கிக் கடன் பெற்று கேபரோ இரும்பு ஆலையைத் தொடங்கினார். அதற்குப்பிறகு தொழிலில் படிப்படியாக வளர்ச்சி அடைந்தார். மகிழுந்து உதிரிப் பாகங்கள் உருவாக்குதல் திரைப்படம் போன்ற துறைகளில் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டார். இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். அதனால் இங்கிலாந்து அரசு லார்டு என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கியது. இங்கிலாந்து நாட்டின் பெரும் பணக்காரர்களில் சுவராசு பால் ஒருவர் எனக் கருதப்படுகிறார்.

அரசியல், கல்வி[தொகு]

இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தின் பல் வேறு குழுக்களில் அங்கம் வகித்தார். இந்திய மற்றும் இங்கிலாந்து வட்ட மேசை அமைப்பில் இருந்தார். வோல்வராம்ப்டன் பல்கலைக் கழகம், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருந்தார். இலண்டனில் உள்ள விலங்குக் காட்சி சாலையின் புரவலராகவும் இருந்தார்.

விருதுகள் சிறப்புகள்[தொகு]

  • 1983 இல் சுவராசு பாலுக்கு பத்ம பூசன் விருதை இந்திய அரசு வழங்கியது.
  • 1996 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் அவுஸ் ஆப் லார்ட்ஸ் என்னும் அவையில் வாணாள் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
  • 2008 இல் அவுஸ் ஆப் லார்ட்ஸ் அவையில் துணை அவைத் தலைவர் பதவியிலும் 2009 இல் பிரிவி கவுன்சிலிலும் அமர்த்தப் பட்டார்
  • பெருங் குழுமத் தலைவர் என்னும் விருது மாசசூசட்ச் தொழில் நுட்ப நிறுவனத்தில் வழங்கப்பட்டது.
  • சிறந்த பன்னாட்டு இந்தியன் என்னும் விருது இலண்டனில் வழங்கப்பட்டது.
  • மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா,, சுவிட்சர்லாந்து இந்தியா பல்கலைக் கழகங்களில் இவருக்கு மதிப்புறு பட்டங்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

எழுதிய நூல்கள்[தொகு]

இந்திய பிரதமர் மறைந்த இந்திரா காந்தி பற்றி ஒரு நூலும், தம் வாழ்க்கை நினைவுகள் குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்

  • Indira Gandhi (1984)
  • Beyond Boundaries- A Memoir (1998)

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவராசு_பால்&oldid=2719925" இலிருந்து மீள்விக்கப்பட்டது