உள்ளடக்கத்துக்குச் செல்

சுழல் கதவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கட்டிடத்தின் வாயிலில் பொருத்தப்பட்டுள்ள சுழல் கதவு

சுழல் கதவு என்பது, கட்டிடங்களில் வாயிற் கதவாகப் பயன்படும் ஒரு வகைக் கதவு ஆகும். இது ஒரு உருளை வடிவான சுற்றடைப்புக்குள், அதன் மையத்தில் அமைந்த தண்டொன்று பற்றிச் சுழலும் படி அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று அல்லது நான்கு படல்களைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது முதன் முதலில் பல மாடிகள் உயரம் கொண்ட வாயிற் கூடங்களைக் கொண்ட கட்டிடங்களில் புகைபோக்கி விளைவினால் வாயில் கதவுகளினூடாக ஏற்படக்கூடிய வேகமான காற்று உள்ளிழுப்பைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. வழமையான கதவுகளில், ஒவ்வொரு முறையும் கதவைத் திறந்து மூடப்படும் போது வெளியிலிருந்து காற்று உள்ளே வருவதோ அல்லது உள்ளிருந்து காற்று வெளியேறுவதோ நடைபெறுகிறது. இதனால் வெப்பப் பரிமாற்றமும் இடம்பெற்றுக் குளிர்பதனம் அல்லது சூடாக்கத் தொகுதிகளின் சுமையைக் கூட்டுகிறது. சுழல் கதவுகளில் இவ்வாறு நடை பெறுவதில்லை ஆதலால், இவ்வகைக் கதவுகள் ஆற்றல் சேமிப்புத் தேவை உள்ள இடங்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது.

அமைப்பு

[தொகு]

சுழல் கதவு அமைப்பின் தளம் வட்ட வடிவமானது. இவ்வட்டத்தின் ஒரு பகுதியில் கதவின் சுற்றடைப்புக்குள் செல்வதற்கான வாயிலும், அதற்கு நேரெதிராக அதிலிருந்து வெளியேறுவதற்கான வழியும் இருக்கும் இரண்டும் ஒரே அளவு கொண்டதாக இருக்கும். இத் திறந்த பகுதிகள் தவிர இரண்டு பக்கங்களிலும் எஞ்சியிருக்கும் வட்டத்தின் பகுதிகளில் உலோகச் சட்டகங்களில் பொருத்தப்பட்ட வளைவான கண்ணாடித் தடுப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். கதவுக்கு மேல் வட்ட வடிவான கவிகை (canopy) இருப்பது வழக்கம். மேற்படி வட்ட வடிவான சுற்றடைப்பின் மைய அச்சில் ஒரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும். மூன்று அல்லது நான்கு படல்கள் ஒன்றுக்கொன்று சம அளவான கோணத்தில் இருக்கும்படி படல்களின் ஒரு பக்க விளிம்பு இத் தண்டுடன் பொருத்தப்பட்டிருக்கும். இத் தண்டை அச்சாகக் கொண்டு சுழலக்கூடியதாக அமைக்கப்படும் இப் படல்களின் எதிர் விளிம்புகள் அவை சுழலும்போது வளைவான பக்கத் தடுப்புக்களைத் தடவிச் செல்லுமாறு இருக்கும். இத்தொகுதியில், உட்செல்லும் வழியினதும், வெளியேறும் வழியினதும் அகலங்கள் இரண்டு அடுத்தடுத்த படல்களின் வெளி விளிம்புகளுக்கு இடையிலான வளைவுத் தூரத்திலும் சற்றுக் குறைவாக இருக்க வேண்டும். இதன்மூலம் சுழற்சியின் எல்லா நிலைகளிலும் கட்டிடத்தின் உட் பகுதிக்கும் வெளிப் பகுதிக்கும் இடையே நேரடியான தொடர்பு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தலாம்.

படல்களும் கண்ணாடியிடப்பட்ட உலோகச் சட்டங்களாகவே இருப்பது வழக்கம். இது இரண்டு பக்கங்களிலுமிருந்து அடுத்த பக்கத்தைப் பார்த்து அதற்கேற்ப பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். பக்கத் தடுப்புக்களுக்கும், படல்களுக்குமான சட்டங்கள் அலுமினியத்தாலோ அல்லது எஃகினாலோ செய்யப்படலாம். அழகுக்காக இச் சட்டங்கள் துருவேறா எஃகுத் தகடுகளால் மூடப்படுவதும் உண்டு.

செயற்பாடு

[தொகு]
சுழல் கதவு வேலை செய்யும் விதம்

சுழல் கதவுகள் செயற்பாட்டைப் பொறுத்தவரை இரண்டு வகைகளாக உள்ளன. ஒரு வகையில் பயனர்கள் தன்முயற்சியால் படல்களைச் சுழற்றி இயக்குவர். இரண்டாம் வகையில் படல்கள் தன்னியக்கமாகச் சுழலுமாறு அமைக்கப்படும். கைகளால் இயக்கும் வகையில் யாராவது படல்களை வேகமாகச் சுழற்றிவிடாமல் இருப்பதற்காக வேகக் கட்டுப்பாட்டு முறைமை அமைக்கப்பட்டிருப்பது வழக்கம். தன்னியக்கக் கதவுகளில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வேகத்தில் கதவு சுழலும் வகையில் அமைந்திருக்கும்.

தன்னியக்கச் சுழல் கதவுகள் பயனர்கள் அண்மையில் வரும்போது மட்டும் சுழலக்கூடிய வகையில் உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதை விடப் பல பாதுகாப்புத் தேவைக்காக அமைக்கப்படும் உணரிகளும் உள்ளன. இது மெதுவாக நடபவர்களை உணர்ந்தறிந்து சுழல் வேகத்தைத் தன்னியக்கமாகக் குறைத்தல், அசையும் கூறுகளுக்கு இடையே உடல் உறுப்புக்கள் அல்லது உடை சிக்கிக்கொள்ள நேரும்போது அதை உணர்ந்து சுழற்சியை நிறுத்துதல் போன்ற தேவைகளுக்கு இத்தகைய உணரிகள் பயன்படுகின்றன.

தீப் பிடிப்பது போன்ற அவசர காலங்களில் சுழல் கதவின் படல்களைச் சாதாரண கதவுகளைத் திறப்பதுபோல் முற்றாகத் திறந்துவிடக் கூடிய வசதிகளுடன் கூடிய சுழல் கதவுகளும் உள்ளன. இது கூடிய எண்ணிக்கையானவர்களை வெளியேற்றுவதற்கு வசதி அளிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழல்_கதவு&oldid=2743873" இலிருந்து மீள்விக்கப்பட்டது