உள்ளடக்கத்துக்குச் செல்

சுலப் பன்னாட்டு கழிப்பறைகள் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலப் பன்னாட்டு கழிப்பறைகள் அருங்காட்சியகம்
சுலாப் வளாகத்தில் காணப்படும் இரண்டு சுற்றுச்சூழல் கழிப்பறைகளுக்கான எடுத்துக்காட்டு.
Map
நிறுவப்பட்டது1992
அமைவிடம்இந்தியா, புது தில்லி
வலைத்தளம்sulabhtoiletmuseum.org

சுலப் சர்வதேச கழிப்பறைகள் அருங்காட்சியகம் (Sulabh International Museum of Toilets) என்பது சுலப் இண்டர் நேசனல் என்ற அமைப்பால் தில்லியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இது உலக நலவாழ்வு வரலாறு மற்றும் கழிப்பறைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உலகின் வினோதமான அருங்காட்சியகங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்த அருங்காட்சியகத்துக்கு மூன்றாவது இடத்தை டைம்ஸ் பத்திரிகை அளித்துள்ளது.[1].[2] இது 2009 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்ற சுலாப் நலவாழ்வு மற்றும் சமூக சீர்திருத்த இயக்கத்தால் 1992 இல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு பகேஷ்வர் பதிக் என்னும் சமூக செயற்பாட்டாளரால் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகம் கழிப்பறையின் 4,500 ஆண்டுகால உலக வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.[3]

சிறப்பு அம்சங்கள்

[தொகு]

இந்த அருங்காட்சியகம் 1992 இல் நிறுவப்பட்டது, இங்கு 50 நாடுகளைச் சேர்ந்த, கி.மு 3000 முதல் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நலவாழ்வு கலைப்பொருட்களைப் காலவரிசையின்படி, "பண்டைய, இடைக்கால, நவீன கால" என மூன்று பிரிவுகளில் தொடர்ச்சியாகப் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டவைகளைக் கொண்டு மனித வரலாறு, சமுதாயப் பழக்கவழக்கங்கள், தற்போதுள்ள சுகாதார நிலைமை மற்றும் கழிவறை தொடர்பான தொழில்நுட்பம் ஆகியவற்றை அறியக்கூடியவகையில் அமைந்துள்ளது. இதற்கிடையில் கழிப்பறையின் 4,500 ஆண்டுகால உலக வரலாற்றைத் தாங்கி நிற்கிறது இந்த அருங்காட்சியகம் மரம், இரும்பு, பீங்கான் உள்ளிட்ட வெவ்வேறு பொருட்களால் ஆன கலை நயத்தோடு அலங்கரிக்கப்பட்ட கழிப்பிடங்கள், அலங்காரமான விக்டோரியா கழிப்பறை இருக்கை போன்றவை இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கழிப்பறை மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான கவிதைகளைப் காட்சிப்பலகைகளில் எழுதிவைத்துள்ளனர்.[4]

உலகின் பழம்பெரும் நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிக காலத்தில் கட்டமைக்கப்பட்ட வடிகால் மற்றும் சுகாதார அமைப்பு இங்கு விளக்கப்பட்டுள்ளது. கி.மு. 2500 இல் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் எவ்வாறு வடிகால் திட்டம் வடிவமைக்கப்பட்டது, கிணறு, குளியல் தொட்டி உள்ளிட்டவைகள் எப்படிக் கட்டப்பட்டன என்பன தொடரான அரிய ஒளிப்படங்கள் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பல விதமான கழிப்பிடங்களில் பிரெஞ்சு மன்னர் பதினாறாம் லூயி பயன்படுத்திய வித்தியாசமான கழிப்பிடத்தின் மாதிரி. அவர் சில மணித்துளிகளைக்கூட வீணடிக்க விரும்பாத காரணத்தால் தன்னுடைய அரியணையிலேயே கழிப்பிடத்தையும் பொறுத்தினார். அதேபோல நீர்முழ்கிக் கப்பலில் பயன்படுத்த ஏதுவாக அமெரிக்கக் கடற்படை வடிவமைத்த ‘இன்கினோலெட்’ என்னும் மின்சாரக் கழிப்பிடம், இதில் ஒரு விசையை அழுத்தினால் கழிவுகள் எரிந்து சாம்பல் ஆகிவிடுகின்றன. இந்த அரிங்காட்சியகத்தை ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் பார்வையிடுகிறார்கள். இதற்கு நுழைவு கட்டணமோ, வழிகாட்டி கட்டணமோ கிடையாது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "36 hours in Delhi". Visit a Museum. India Today. 16 April 2015. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
  2. "Delhi's toilets museum among world's 10 weirdest museums". The Hindu. 22 May 2014. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
  3. "The Museum". Sulabhtoiletmuseum Organization. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
  4. "Delhi's Toilets Museum Among World's 10 Weirdest Museums". NDTV. 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
  5. ம. சுசித்ரா (8 சூலை 2017). "கழிப்பிடத்தின் வரலாற்றுப் பெட்டகம்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2017.