உள்ளடக்கத்துக்குச் செல்

சுருவாசோ கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுருவாசோ கல்வெட்டு (இந்தோனேசியம்: Prasasti Saruaso I; மினாங்கபாவு மொழி: Batu basurek Saruaso I) என்பது பகாருயோங் மன்னனான மலையபுர ஆதித்தியவர்மன் என்பவரின் கல்வெட்டுக்களில் ஒன்றாகும். இது வாப்பாகே கல்வெட்டு (Prasasti Batu Bapahek) என்றும் அழைக்கப்படுகிறது. இது சுருவாசோ கல்வெட்டு என அழைக்கப்படக் காரணம் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஸ்ரீ சுருவாசோ (Sri Surawasa) என்னும் பெயர்தான்.

இப்பெயரே சுருவாசோ கிராமத்தின் பெயர்க் காரணமும் ஆகும். இக்கிராமம் இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திரா மாகாணத்தின் தானா டாத்தார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அமைவு

[தொகு]
ஆதித்தியவர்மன்; மேற்கு சுமாத்திராவின் சுவர்ணபூமி மலையபுரம் இராச்சியத்தின் அரசர் (1309 - 1328)

சுருவாசோ கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரு குன்றின் அடிப்பகுதியில், பத்தாங் செலோ (Batang Selo) குளக் கரையிலிருந்து இரண்டு மீற்றர் தள்ளி இக்கல்வெட்டு காணப்படுகிறது. மேற்படி குன்றிலிருந்து பார்த்தால் எப்பக்கமும் வயல்களும் வாய்க்கால்களுமே தென்படும். ஆங்காங்கே கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த சுருவாசோ கல்வெட்டு ஆகும்.

இக்கல்வெட்டின் ஒரு பகுதி பண்டைய மலாயு மொழி எழுத்துக்களாலும், மறு பகுதி தமிழ் எழுத்துக்களாலும் எழுதப்பட்டுள்ளது. ஆதித்திய வர்மன் வெறுமனே தனது காட்டு வளத்திலும் சுரங்கங்களிலும் தங்கியிருக்காமல், விவசாயத்தின் மூலம் மக்களை வளப்படுத்த வேண்டும் என்னும் நோக்கிலேயே அங்கு வாய்க்கால்களை அமைத்திருப்பது அவற்றின் மூலம் தெரிய வருகிறது.

கல்வெட்டு வாசகம்

[தொகு]

சுருவாசோ கல்வெட்டிலுள்ள மலாயு மொழி எழுத்துக்களின் மூலம் கூறப்படுவதாவது, எப்போதும் நெல் வளத்தில் குன்றாத நந்தன ஸ்ரீ சுராவாசாவுக்கு (Nandana Sri Surawasa) நீர் பாய்ச்சத் தேவையான கால்வாய்களை அமைப்பதை ஆதித்திய வர்மன் நிறைவு செய்தான்[1] என்பதும், அவ்விடத்தில் கால்வாய்களை அமைப்பது அதற்கு முன்னர் ஆதித்திய வர்மனின் மாமாவான அகரேந்திர வர்மன் (Akarendrawarman) என்பவரால் செய்யப்பட்டது என்பதும் ஆகும்.

அக்கால மினாங்கபாவு மரபின்படி மாமாவிடமிருந்து மருமகனுக்கோ அல்லது மருமகளுக்கோ வாரிசுரிமை ஏற்படுவது இருந்தது என்பதை உலி கொசோக் உறுதிப்படுத்துகின்றார்.[2]

உசாத்துணை

[தொகு]
  1. Casparis, J. G. de., (1992), Kerajaan Malayu dan Adityawarman, Seminar Sejarah Malayu Kuno, Jambi, 7-8 Desember 1992. Jambi: Pemerintah Daerah Tingkat I Jambi bekerjasama dengan Kantor Wilayah Departemen Pendidikan dan Kebudayaan Jambi, hlm. 235-256.
  2. Kozok, Uli, (2006), Kitab Undang-Undang Tanjung Tanah: Naskah Melayu yang Tertua, Jakarta: Yayasan Obor Indonesia, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-461-603-6.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருவாசோ_கல்வெட்டு&oldid=4196681" இலிருந்து மீள்விக்கப்பட்டது