சுருள் கதவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுருள் கதவு என்பது, பெரிய அளவு கொண்ட வாயில்களில் அமைக்கப்படும் ஒருவகைக் கதவு ஆகும். உலோகங்களினால் செய்யப்படும் இவ்வகைக் கதவுகளைத், திறக்கும்போது கதவின் படல் மேல்நோக்கிச் சென்று வாயிலுக்கு மேலேயுள்ள தண்டொன்றில் சுருட்டப்படுகின்றது. மூடும்போது இச் சுருள் விரிந்து வாயிலை மறைக்கும் படி கீழ்நோக்கி வரும். பெரிய அளவுள்ள பொருட்களை உள்ளே கொண்டு செல்லவேண்டிய தேவையுள்ள தொழிற்சாலைகள், களஞ்சியங்கள் போன்ற இடங்களிலும், பெரிய ஊர்திகள் கட்டிடங்களுக்குள் சென்றுவர வேண்டிய இடங்களிலும் சுருள் கதவுகள் பயன்படுகின்றன. வீடுகளிலும் உள்ளே வண்டிகளை நிறுத்தும் இடங்களின் வாயில்களில் சுருள் கதவுகள் பயன்படுவதுண்டு.


பயன்கள்[தொகு]

வழமையான பிணைச்சல்களோடு கூடிய கதவுகளைத் திறந்து மூடுவதற்கு தனியாக இடம் தேவைப்படுகிறது. இவ்விடங்களைப் பிற தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. சிறிய பிணைச்சல் கதவுகளைப் -பொறுத்தவரை இது பெரிய பிரச்சினையாகக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் பெரிய, அகலமான கதவுகள் தேவைப்படும் இடங்களில் பிணைச்சல் கதவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெறுமதியான இடப்பரப்பை வீணாக்கவேண்டி இருக்கும். அத்துடன் அவ்வாறான பெரிய கதவுகளின் நிறையும் அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றைத் தாங்குவதற்காக ஒழுங்குகளைச் செய்வதிலும், திறந்து மூடுவதிலும் பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டி வரும். சுருள் கதவுகள் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைக்ன்றன.


பயன்படும் பொருட்கள்[தொகு]

சுருள் கதவுகள், எஃகு, அலுமினியம், துருவேறா எஃகு போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. சாதாரண எஃகுக் கதவுகள் உறுதியானவை ஆனால் துருப்பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம், துருவேறா எஃகு இதற்குத் தீர்வாக அமையும் எனினும், இவ்வுலோகம் விலை கூடியது. அதனால் எல்லா இடங்களுக்கும் பொருத்தமாக அமையாது. அலுமினியத்தினால் செய்யப்படும் கதவுகள் துருப்பிடிப்பதில்லை. விலை சாதாரண எஃகிலும் கூடுதல் எனினும் துருவேறா எஃகை விட மலிவு. ஆனால் எஃகைப்போல் வலுவானது அல்ல. எனவே, தேவைக்கும் வசதிக்கும் ஏற்றபடி ஏதாவது ஒரு உலோகக் கதவைப் பயன்படுத்துவர்.


அமைப்பு[தொகு]

சுருள் கதவின் படல்கள், ஒடுக்கமானதும் நீளமானதுமான உலோகத் தகடுகளைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. ஒடுங்கிய இத் தகடுகலைப் பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட குறுக்குவெட்டு வடிவத்துடன் கூடிய பட்டிகளாக உருவாக்குவர். இப்பட்டிகளின் நீளப்பக்கங்களை ஒன்றோடொன்று கொழுவிப் படலை உருவாக்க முடியும். பொதுவாக இப்பட்டிகள் 75 சமீ, 100 சமீ போன்ற அகலங்களைக் கொண்டவையாக அமையும். நீளம் கதவின் அகலத்துக்குத் தக்கபடி வேறுபடும். பட்டிகளின் அகலம் குறைவாக இருப்பின் படலைத் தண்டில் இறுக்கமாகச் சுருட்ட முடியும். இப்பட்டிகளில் துளைகள் இட்டு இயற்கை ஒளியும் காற்றும் உள்ளே வருவதற்கு வழி செய்வதும் உண்டு. இவ்வாறான துளைகள் ஊடாக தூசி முதலியன உட்செல்லக்கூடும் என்பதாலும், வளிப்பதனம் செய்யப்பட்ட இடங்களில் அமைக்கப்படும் கதவுகளில் துளைகள் இடமுடியாது என்பதாலும், ஒளியை மட்டும் உள்ளே செல்ல விடும் வகையில் கண்ணாடிகள் இடப்பட்ட மிகச் சிறிய சாளரங்கள் அமைக்கப்படுவதும் உண்டு.


வகைகள்[தொகு]

வளிப்பதனம் செய்யப்பட்ட இடங்களிக்கான கதவுகள் வெப்பக்காப்புச் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். இதனால் சுருள் கதவுகளில் வெப்பக்காப்புச் செய்யப்பட்ட கதவுகளும், வெப்பக் காப்புச் செய்யப்படாத கதவுகளும் கிடைக்கின்றன. வெப்பக்காப்புச் செய்யப்படாத கதவுகளின் படல்கள் ஒற்றைத் தகட்டினால் ஆனவை. வெப்பக்காப்புக் கொண்ட கதவுகளில் பட்டிகள் இரட்டைத் தகடுகளினால் செய்யப்பட்டு இரண்டு தகடுகளுக்கும் இடையே வெப்பக்காப்புப் பொருள் நிரப்பப்படும். இவ்வெப்பக்காப்புப் பொருளின் தடிப்பு 25 மிமீ வரை இருக்கும். தடிப்பு அதிகமானால் படலைத் தண்டில் சுருட்டும்போது சுருள் மிகவும் பெரிதாகிவிடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்_கதவு&oldid=634402" இலிருந்து மீள்விக்கப்பட்டது