சுந்தரவதி நாவல் பிரபாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தர்வதி நாவல் பிரபாகர் (1922-2010) தில்லியைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் எட்டாவது மக்களவையில் கரோல் பாக் மக்களவை உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுந்தர்வதி 1922ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தில்லியில் பிறந்தார். பல்கலைக்கழக நுழைவு தகுதி முன் வரை கல்வி பயின்றார்.[1]

தொழில்[தொகு]

சுந்தர்வதி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார்.[2] இவர் சீன-இந்தியப் போர் (1962) மற்றும் 1965இன் இந்திய-பாக்கித்தான் போரின் போது பாதுகாப்பு நிதி வழங்க முன்வந்தார். இவரது சமூக சேவையைப் பாராட்டி, அப்போதைய இந்தியப் பிரதமரால் இவருக்குக் கேடயம் வழங்கப்பட்டது. சுந்தர்வதி தில்லி பட்டியலிடப்பட்ட சாதிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராகவும், 1972-80 மற்றும் 1982-84 வரை தில்லி பெருநகர சபை உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1980 இந்தியப் பொதுத் தேர்தலில் கரோல் பாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எட்டாவது மக்களவையில் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1]

சுந்தர்வதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தனியார் உறுப்பினர்களின் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்களுக்கான குழுவில் பணியாற்றினார். தில்லியில் உள்ள சிவாஜி கல்லூரி மற்றும் சமூக நல வாரியத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுந்தர்வதி 1936-ல் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி நாவல் பிரபாகரை மணந்தார். இந்த இணையருக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர்.[1] இவர் 24 மார்ச் 2010 அன்று தில்லியில் இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Members Bioprofile: Nawal Prabhakar, Shrimati Sundarwati". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  2. 2.0 2.1 2.2 "The Speaker made references to the tragic demise of Mr. Lech Kaczynski". IndiaKanoon.org. 15 April 2010. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.