சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்
நூலாசிரியர்வி.வி.வி.ஆனந்தம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைஇந்திய சுதந்திரப் போராட்டம்
வெளியீட்டாளர்கங்கை புத்தகநிலையம்; சென்னை
வெளியிடப்பட்ட நாள்
ஜூலை 1998
பக்கங்கள்216

"சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்"[1] புத்தகம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் பற்றிய வரலாறு அடங்கிய நூல். ஆசிரியர் இந்நூலை சுதந்திரப்போராட்ட வீரரும், நெருக்கடி நிலைப்பிரகடன காலத்தில் ஜனநாயகத்திற்காக பாடுபட்டவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.

இந்தியாவில் பிரிட்டிஷார் வரும் முன்னர் 33 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற புள்ளிவிவர தகவலையும். கொள்கைகள் ஆய்வு மையம் என்ற அமைப்பு தனக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளில் 1767 லிருந்து 1771 வரை செங்கல்பட்டு பகுதி தொடர்பான குறிப்புகளில் ஒரு ஏக்கருக்கு சுமார் நான்கு டன் நெல்விளைச்சல் கண்ட செய்தி கிடைத்துள்ளதையும் பிரித்தானிய ஆதிக்கத்திற்குப் பின்னர் சுதந்திர இந்தியாவில் அது இரண்டு டன் விளைச்சல் என்பதிலிருந்து விவசாயத்துறையில் ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்பின் விளைவையும் ஆசிரியர் விளக்குகிறார்.

இந்நூலுக்கு பாரத ரத்னா சி. சுப்பிரமணியம், குமரி அனந்தன் இருவரும் அணிந்துரை வழங்கியுள்ளனர்.

ஆசிரியர் பற்றிய குறிப்பு[தொகு]

வி. வி. வி. ஆனந்தம் 25-9-1925 அன்று விருதுநகரில் பிறந்தவர். காந்தியக் கொள்கையில் இளமையிலேயே ஈர்க்கப்பட்டவர். பன்மொழி அறிவு பெற்றவர். முன்னாள் தமிழக முதல்வர் காமராஜருடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவர். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தவர். தமிழ்நாடு உணவுப்பொருள் சங்கத்தின் தலைவராக சுமார் இருபது ஆண்டுகள் பணிபுரிந்தவர். மரம் வளர்ப்பதில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர்.

நூல் பகுதிகள்[தொகு]

அ.சுதந்திரப் போராட்ட வரலாறு[தொகு]

காந்தியடிகளின் செய்தியுடன் ஆரம்பித்து, பாரதத்தின் பெருமை, ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்றியது, அவர்களது ஆதிக்கமும் பரவலும் வளர்ந்த விதம், விடுதலைப் புரட்சியின் தொடக்கம், ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதார சுரண்டல், விடுதலைப் போரில் செய்தித்தாள்களின் பங்கு, இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றமும் வளர்ச்சியும், சைமன் கமிஷன், திலகர், காந்தியடிகள், நேதாஜி ஆகியோரின் பங்கு ஆகியவை இந்தப் பகுதியில் குறிப்பிடப்படுகின்றன.

ஆ.சுதந்திரப் பயிர்க்கு உயிர் தந்தவர்கள்[தொகு]

புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது பாண்டியர், தளவாய் வேலுத்தம்பி , தாந்தியா தோப்பே, ஜான்சிராணி இலட்சுமிபாய் ஆகியோரில் ஆரம்பித்து லோகமான்ய பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், மோதிலால் நேரு, பண்டித மதன் மோகன் மாளவியா, இலாஜா இலஜபதிராய்,புரட்சித் தளபதி பாகாஜதீன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வ.வெ.சுப்பிரமணிய ஐயர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, சத்திய மூர்த்தி, குதிராம் போஸ், சித்தரஞ்சன் தாஸ், நேத்தாஜி சுபாஸ் சந்திரபோஸ், கொடி காத்த குமரன், பகத்சிங், கே.பாஷ்யம் ஐயங்கார் போன்ற பல வீரர்களின் வரலாற்றை ஆசிரியர் கூறியுள்ளார்.

இ.எழுச்சிமிகு செய்திகள்[தொகு]

இந்த பகுதியில் ஆசிரியர் பல தலைப்புகளின் கீழ் அதிகம் அறியப்படாத செய்திகள் உட்பட பல செய்திகளைத் தொகுக்கிறார்.

  • தூக்கு மேடையில் வாக்கு மூலம்
  • வீரம், தியாகம், துரோகம்
  • சுதந்திர பாரதத்திற்கு பெருமை சேர்த்தவர்கள்
  • காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்கள் : விடுதலைக்கு முன் காங்கிரஸ் மகாசபைத் தலைவர்களது புகைப்படங்கள்.
  • சுதந்திரப் போரில் பெண்கள்
  • ’சிந்திய ரத்தம் வீணா’, ’ஒருமை போற்றுவோம்’ கவிதைகள்
  • நினைவகற்றாதீர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்;வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; சென்னை