சுசிலா நய்யார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசிலா நய்யார்

சுசிலா நய்யார் (Sushila Nayyar) (1914 – 2000) என்பவர் காந்தியின் தனிச் செயலாளராக இருந்த பியாரேலால் நய்யாரின் தங்கை ஆவார். மேலும் இவர் காந்தியின் தனி மருத்துவராக இருந்தவரும் ஆவார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவர். தற்போதய பாகித்தானில் இருக்கும், பஞ்சாபின் கஞ்சாஹ் பகுதியில் 1914இல் பிறந்தார். தன் பதின்ம வயதில் தில்லி லேடி ஹார்டிஞ்ச் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க வந்தார். 1939 இல் இவர் தன் அண்ணனுடன் சேவா கிராமத்துக்கு வந்தார். விரைவில் காந்தியின் நெருங்கிய நண்பராக ஆனார். அவரது வருகையைத் தொடர்ந்து வர்தா பகுதியை கொள்ளை நோயான காலரா தாக்கியது, ஒற்றை மருத்துவராக சுசிலா நய்யார் அதை உறுதியாகக் கையாண்டதைப் பார்த்து காந்தி அவரைத் தனது தனி மருத்துவராக நியமித்தார். 1942 இல் இவர் மருத்துவ முதுகலைப் பட்டம்பெற்று மீண்டும் காந்தியிடம் வந்து சேர்ந்து, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டார். அதே ஆண்டு இவர் பூனேயில் உள்ள ஆகா கான் அரண்மனையில் பிற காந்தியவாதிகளுடன் சேர்த்து சிறை வைக்கப்பட்டார்.

1944 இல் இவர் சேவாகிராமத்தில் ஒரு சிறு மருத்துவ மையத்தை அமைத்தார், ஆனால் அது விரைவில் வளர்ந்து ஆசிரமத்தின் அமைதியை பாதித்ததால், வார்தாவில் பிர்லாக்களால் நன்கொடையாக அளிக்கப்பட்ட ஒரு விருந்தினர் இல்லத்திற்கு மாற்றினார். 1945 ஆம் ஆண்டில் இந்த சிறு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக கஸ்தூர்பா மருத்துவமனை (தற்போது மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம்) என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தக் காலகட்டமானது, மிகவும் மோசமாக இருந்தது; இந்து தீவிரவாதிகள் காந்தியைக் கொல்ல பல முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதியாக இதைச் செய்தவர் நாதுராம் கோட்சே ஆவார். தாக்குதல்கள் குறித்து சுசிலா நய்யார் பல சந்தர்ப்பங்களில் சாட்சியம் அளித்தார். 1948 ஆம் ஆண்டில் காந்தி கொலை தொடர்பாக கபூர் கமிஷன் முன்பாக தோன்றி சாட்சியளித்தார்.

காந்தியின் படுகொலைக்குப் பிறகு அமெரிக்காவுக்குச் சென்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பொது சுகாதாரப் பள்ளியில் மேற்கல்வி படித்த சுசிலா நய்யார், பொது மருத்துவத்தில் இரண்டு பட்டங்களைப் பெற்றார். 1950இல் இந்தியாவுக்குத் திரும்பி பரிதாபாத்தில் காசநோய் மருத்துவமனையை நிறுவினார். காந்தி நினைவு தொழுநோய் அறக்கட்டளை ஒன்றின் தலைவராகவும் இருந்தார்.

1952இல் தேர்தல் அரசியலில் நுழைந்து தில்லி சட்டமன்ற உறுப்பினரானார். 1952 முதல் 1955 வரை நேருவின் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தார். பின் இவர் 1955 முதல் 1956 வரை தில்லி சட்டமன்ற சபாநாயகராக இருந்தார். 1957 இல், இவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 வரை பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டு முதல் 1967 வரை அவர் மீண்டும் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தார். இக்காலத்தில் இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜனதா கட்சிக்குச் சென்றார். ஒரு கட்டத்தில் அரசியலிலிருந்து விலகி சேவைக்குத் திரும்பினார். 1969இல் மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் என்ற அமைப்பைத் துவக்கினார், அதை வளர்த்து, விரிவாக்க வேண்டும் என்று அவர் உறுதிபூண்டிருந்தார். 2001 சனவரி 3 ஆம் நாள் மாரடைப்பு காரணமாக அவர் இறந்தார். இவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஷங்கர் (30 அக்டோபர் 2018). "முன்னோடிப் பெண்கள்: காந்தி இட்ட தீ". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசிலா_நய்யார்&oldid=3930036" இலிருந்து மீள்விக்கப்பட்டது