சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்

சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம் (ஆங்கிலம்: Sungai Palas Tea Plantation, மலாய் மொழி: Ladang Teh Sungai Palas) என்பது மலேசியா, பகாங், கேமரன் மலை, பிரிஞ்சாங்கில் அமைந்துள்ள ஒரு தேயிலைத் தோட்டம் ஆகும். இதனை போ தேயிலை தோட்டம் என்று பரவலாக அழைப்பதும் உண்டு. 1929-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இத்தேயிலைத் தோட்டம் மலேசியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மை இடம் வகிக்கிறது.[1]

போ (BOH) தேயிலை நிறுவனத்திற்கு 8000 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.[2] சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டத்தில், 4 மில்லியன் கிலோ தேயிலை உறபத்தி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு கேமரன் மலையில் போ தேயிலை தோட்டம்; சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்; பேர்லி தேயிலை தோட்டம்; என மூன்று தேயிலைத் தோட்டங்களும், சிலாங்கூர் மாநிலத்தில் புக்கிட் சீடிங் எனும் இடத்தில் ஒரு தேயிலைத் தோட்டமும் உள்ளன.[3]

ஜான் அர்சிபால்ட் ரஸ்ஸல்[தொகு]

பாரத் தேயிலை தோட்டத்தைக் காட்டிலும், சுங்கை பாலாஸ் தோட்டத்திற்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை தருகின்றனர். அதற்கு காரணமும் உண்டு. மலேசியாவில் அதிகமானோர் போ தேயிலையையே அதிகமாக விரும்பி நுகர்கின்றனர்.[4]

சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம், பிரிஞ்சாங் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் கீ பண்ணைச் சந்தையில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இந்தத் தோட்டம் 1929-இல் ஜான் அர்சிபால்ட் ரஸ்ஸல் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 1890-இல் இவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது, தன் தந்தையாருடன் இங்கிலாந்தில் இருந்து மலாயாவுக்கு வந்தார்.[5]

மலேசியாவின் முதல் தேயிலை தோட்டம்[தொகு]

1913-இல் சிலாங்கூர், பத்து ஆராங்கில் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தைத் திறந்தார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சுரங்கத் தொழிலில் ஏற்பட்ட சில சறுக்கல்களினால் தேயிலை உற்பத்தி துறையில் அவருடைய கவனம் திசை மாறியது. அதுதான் அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய திருப்பு முனையாகும்.[6] 1932-இல் தன்னுடைய 50-ஆவது வயதில் காலமானார். அதன் பின்னர் அவருடைய மகன் திரிஸ்தான் பியூசாம்ப் ரஸ்ஸல் (82) என்பவர் போ நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்சமயம் திரிஸ்தானின் மகள் காரலின் போ நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி வகிக்கிறார்.[7]

மலேசியாவில் முதன்முதலாகத் திறக்கப்பட்ட தேயிலை தோட்டம், இந்த சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம். மலேசியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில் போ தேயிலை நிறுவனம் 70 விழுக்காடு தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது.[8]

மேற்கோள்[தொகு]