உள்ளடக்கத்துக்குச் செல்

சுகோதாய் வரலாற்றுப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சுகோதாய் மற்றும் சுற்றுப்புற வரலாற்று நகரங்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
சுகோதாய் வரலாற்று பூங்கா, சுகோதாய் மாநிலம், தாய்லாந்து
வகைபண்பாடு
ஒப்பளவுi, iii
உசாத்துணை574
UNESCO regionஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1991 (15வது தொடர்)

சுகோதாய் வரலாற்றுப் பூங்கா; (ஆங்கிலம்: Sukhothai Historical Park; தாய்லாந்து மொழி: อุทยานประวัติศาสตร์สุโขทัย) என்பது பழைமை வாய்ந்த சுகோதாய் இராச்சியத்தின் (Sukhothai Kingdom) இடிபாடுகளைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பூங்கா ஆகும்.[1]

சுகோதாய் வரலாற்றுப் பூங்கா வளாகத்தில் சுகோதாய்; கம்பெயங் பெட்; சி சட்சநலை; ஆகிய மூன்று நகரங்கள் உள்ளன. முன்பு காலத்தில் இந்த மூன்று நகரங்களும் சுகோதாய் அரசின் முக்கிய நகரங்களாகும். பொதுவான நீர் கட்டமைப்பு மற்றும் சாலைகளால் இணைக்கப்பட்டு இருந்தன.[2]

13-ஆம் 14-ஆம் நூற்றாண்டுகளில், வட மத்திய தாய்லாந்தில், சுகோதாய் நகருக்கு அருகில் சுகோதாய் இராச்சியம் இருந்தது. அதே அந்த இடத்தில்தான் சுகோதாய் வரலாற்றுப் பூங்காவும் இப்போது அமைக்கப்பட்டு உள்ளது.[3]

சுகோதாய்[தொகு]

சுகோதாய் நகரம் வடக்குத் தாய்லாந்தில் 13-ஆம் 14-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சுகோதாய் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. சுகோதாய் வரலாற்றுப் பூங்கா நவீன சுகோதாய் நகருக்கு அருகில் உள்ளது. சுகோதாய் என்றால் ‘மகிழ்ச்சியின் விடியல்’ என்று பொருளாகும்.[4]

சுகோதாய் நகரத்தின் மதில்கள் கிழக்கு மேற்காக 2 கி.மீ; வடக்கு தெற்காக 1.6 கி.மீ.; நீளத்திற்கு உள்ளன. சுகோதாய் வரலாற்றுப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 70 சதுர கிலோமீட்டர். இந்தப் பூங்காவின் வளாகத்திற்குள் 193 இடிபாடுகள் உள்ளன. இவற்றில் அரச மாளிகை மற்றும் 26 கோயில்களும் அடக்கம். இவற்றுள் வாட் மகாதத் கோயில் மிகப்பெரிய கோயிலாகும்.

சி சட்சநலை[தொகு]

சி சட்சநலை நகர்ப் பகுதியில் பல பௌத்த விகாரங்கள், கோயில்கள் உள்லன. சுகோதாய் அரசின் ஆன்மீக நகராக இது விளங்கியது. களிமண்பாண்டங்கள் ஏற்றுமதிக்கும் பெயர் பெற்ற நகரம்.

கம்பெயங் பெட்[தொகு]

கம்பெயங் பெட் தெற்கு எல்லையில் இருந்தது. மிக முக்கிய இராணுவத் தளமாகும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டும் அல்லாமல் வர்த்தகப் போக்குவரத்தையும் உறுதி செய்தது.

1991-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. தர்சமயம் இதனை, தாய்லாந்து அரசு பராமரித்து வருகிறது.

வரலாறு[தொகு]

சுகோதாய் வரலாற்றுப் பூங்காவிலுள்ள வாத் மகாதத்

13-ஆம் நூற்றாண்டுக்கு முன் தாய் லூ மக்களின், கோயன்யாங் மற்றும் ஹெயோகம் அரசுகள் வடக்கு மேட்டு நிலங்களில் இருந்தன.

சுகோதாய், கெமர் பேரரசின் கீழ் இருந்தது. தாய் லூ மக்கள் மேல் சாவோ பிரயா பள்ளத்தாக்கிற்கு படிப்படியாக நகரத் தொடங்கினர்.

சுகோதாய் மற்றும் சிரி சட்சாநலை நகரங்களின் ஆளுநர் போ குன் சிரி நாவ் நம்தோம் தலைமையில் 1180-ஆம் ஆன்டு முதல் சுகோதாய், தன்னாட்சி பெறத் தொடங்கியது. எனினும் லாவோ பகுதியைச் சார்ந்த மோன் மக்கள் மீண்டும் தங்களின் அதிகாரத்திற்குக் கீழ் சுகோதாயைக் கொண்டு வந்தனர்.

ஆட்சி மாற்றம்[தொகு]

போ குன் பாங்களாங்கவோ, போ குன் பாமெயுங் என்ற இரு சகோதரர்கள் மோன் மக்களிடம் இருந்து 1239-ஆம் ஆண்டில் சுகோதாயை மீட்டனர். சுகோதாயைத் தலைநகராகக் கொண்டு பாங்களாங்கவோ என்பவர்; சிரி இந்திரா தித்யா எனும் நகரில் பிரா ருவாங் வம்ச அரசாட்சியை நிறுவினார்.[5]

பாங்களாங்கவோ அரசாட்சி நிறைவுறும் போது சாவோ பிரயா பள்ளத்தாக்கு முழுமைக்கும் சுகோதாய் அரசாங்கம் விரிவு அடைந்து இருந்தது. சுகோதாய் அரசாங்கம் நிறுவப்பட்டது தாய்லாந்து நாட்டின் வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

ராம்கம்கயெங் கீழ் விரிவடைதல்[தொகு]

போ குன் பான் முவாங் மற்றும் அவரது சகோதரர் ராம் கம்கயெங் சுகோதாய் அரசாங்கத்தை விரிவுபடுத்தினார்கள். ராம்கம்கயெங் தெற்கில் சுபன்னபும் , சிரி தாம்னகொர்ன், தாம்பிரலிங்கா ஆகியவற்றைக் கைப்பற்றினார்.

வடக்கில் பிரே, முவாங் சுவா ஆகியவற்றை இணைத்தார். மேற்கில் வரேரு தலைமையிலான மோன் மக்களை பாகான் அரசிடமிருந்து விடுவித்து, மர்டபன் அரசை உருவாக்கினார்.

தாய்லாந்து மொழிக்கு வரி வடிவம்[தொகு]

தெரவடா புத்த சமயம் அரசு சமயமாக ஏற்கப் பட்டது. 1283-இல் தாய் மொழிக்கு வரி வடிவம் கொடுக்கப்பட்டது.

சீனாவின் யுவான் அரசுடன் அரசு முறையான தொடர்புகள் ஏற்பட்டன. சுகோதாய் அரசில் இருந்து சீனாவிற்குப் பளிங்குப் பாண்டங்கள் ஏற்றுமதி செய்யப் பட்டன.

வீழ்ச்சி[தொகு]

ராம்கம்கயெங் இறப்பிற்குப் பின் சுகோதாய் அரசாங்கம் சிதறுண்டது. அவருக்குப் பின் லியோ தாய் அரசரானார். அரசின் ஒவ்வொரு பகுதியும் தன்னாட்சியை அறிவித்துக் கொண்டன.

1378-இல் அயூத்தியா அரசு சுகோதாய் அரசைக் கைப்பற்றியது. லியோதாய் தன் தலைநகரை பிட்சனலோக்கிற்கு மாற்றிக் கொண்டார். 1584-இல் பர்மா-சியாம் போரின் போது, சுகோதாய் நகரை அயூத்தியா அரசாங்கம் கைவிட்டது.

பிற்காலம்[தொகு]

சுகோதாயில் பின்பு மக்கள் குடியேறிய போதும், தொடர்ச்சியான பர்மா-சியாம் போர்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1793 இல் பாங்காக் தலைநகரானதும், பழைய சுகோதாய்க்கு 12 கி.மீ. தொலைவில் புதிய சுகோதாய் நிறுவப்பட்டது. இதனால், சுகோதாய் முழுமையாகக் கைவிடப்பட்டது.

1801-இல் புதிய தலைநகர் கோயில்களுக்காக சுகோதாய் கோயில்களில் இருந்த புத்தர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றுள் வாட் மகாதத் கோயிலின் 8 மீட்டர் (25 அடி) பிரா சிரி சாக்யமுனி புத்தர் சிலை முக்கியமானது.

சுகோதாய்க்கு அருகில் உள்ள கம்பெயங் பெட், சி சட்சநலை ஆகியவை பிற முக்கிய பழங்கால நகரங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Sukhothai Historical Park ruins are one of Thailand's most impressive World Heritage sites. The park includes the remains of 21 historical sites and four large ponds within the old walls, with an additional 70 sites within a 5km radius". Lonely Planet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.
  2. "Sukhothai Historical Park - Ruins of the Sukhothai Kingdom. The historic town of Sukhothai and associated historic towns of Si Satchanalai and Kamphaeng Phet were declared a UNESCO World Heritage Site in 1991". www.renown-travel.com. பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.
  3. Sewell, Abby (12 December 2018). "Explore Thailand's awe-inspiring ancient city". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 2018-12-13.
  4. "The historic town of Sukhothai—meaning "The Dawn of Happiness"—and surrounding region are designated a UNESCO World Heritage site. The site encompasses more than 29,000 acres and includes the ancient towns of Si Satchanalai and Kamphaeng Phet along with Sukhothai itself". பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.
  5. Shepards, Sam. "The History of the Kingdom of Sukhothai, Thailand". WanderWisdom (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.

மேலும் காண்க[தொகு]