உள்ளடக்கத்துக்குச் செல்

சுகுமாரி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுகுமாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுகுமாரி

பிறப்பு அக்டோபர் 6, 1940 (1940-10-06) (அகவை 84)
சென்னை, இந்தியா
தொழில் நடிகை
துணைவர் ஏ. பீம்சிங்

சுகுமாரி (அக்டோபர் 6, 1940 - மார்ச் 26 2013)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தார்.

நாகர்கோவிலில் பிறந்த இவர் தன்னுடைய 10-வது வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் 2003 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். 2010ம் ஆண்டு நம்ம கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.[2]

பிறப்பும் வளர்ப்பும்

[தொகு]

1940-ல் நாகர்கோவிலில் பிறந்தவர் சுகுமாரி. அத்தையும் நடிகை பத்மினியின் தாயுமான சரஸ்வதி அம்மாவிடம், சென்னையில் வளர்க்கப்பட்டதால், சிறு வயதிலேயே நடனம் மற்றும் நடிப்புத் துறையில் அவர் நுழைந்துவிட்டார். தனது 11-வது வயதில் ஓர் இரவு என்ற படத்தில் அறிமுகமாகி, சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த சுகுமாரி தனது 19-வது வயதில் பிரபலத் தமிழ் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார்.

மலையாள மனோரமா

[தொகு]

திருமணத்துக்குப் பிறகு பீம்சிங் சுகுமாரியை நடிக்க அனுமதிக்க…. தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் ஏறத்தாழ 2,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலானவை மலையாளப் படங்கள். தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிகை மனோரமா தூள் கிளப்பியதுபோல், மலையாளத்தில் நடிகை சுகுமாரி பலதரப்பட்ட வேடங்களில் ஏராளமாக நடித்ததால், அவர் ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று அழைக்கப்பட்டார்.

தனித்துவ நடிப்பும் முக பாவனைகளும்

[தொகு]

மலையாளத்தில் 1974-ல் வெளிவந்த ‘சட்டைக்காரி’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்மணியாக நடித்திருந்த சுகுமாரியின் ஆங்கிலம் கலந்த மலையாளப் பேச்சும் நடிப்பும் அனைவரையும் கவர்ந்து, மலையாளத் திரையுலகில் அவர் ஒரு தனித்துவமான இடத்தை அடைந்தார். 1984-ல் வெளிவந்த இயக்குநர் பிரியதர்ஷனின் ‘பூச்சாக்கொரு மூக்குத்தி’ என்ற மலையாளப் படத்தில் மேல்தட்டு மாடர்ன் பெண்போல் தன்னைக் காட்டிக்கொண்டு, எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி, அலட்டலாக நடித்த சுகுமாரியின் அருமையான நகைச்சுவை நடிப்பு, அவரை முன்னணி நகைச்சுவை நடிகையாகவும் மாற்றியது.

இத்துடன் குணச்சித்திர வேடங்களிலும் சுகுமாரி மகா அற்புதமாக நடித்துள்ளார். குறிப்பாக ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ படத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சுகுமாரி தன் மகனிடம் ஃபோனில் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறும் காட்சியில் சுகுமாரியின் நடிப்பு இன்றும் பேசப்படுகிறது. அதேபோல் ‘தசரதம்’ மலையாளப் படத்தின் இறுதிக் காட்சியில்; மோகன்லால், அவர் வீட்டு வேலைக்காரியான சுகுமாரியிடம், “என்னை மகனாக ஏற்றுக்கொள்வீர்களா?” என்ற கேட்கும்போது, சட்டென்று அந்த வேலைக்காரி முகபாவத்திலிருந்து விடுபட்டு, தாய்மையின் முகபாவத்துக்கு மாறும் நடிப்பு நினைவில் இருக்கிறது. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் சுகுமாரி அம்மாவாக நடித்தது பற்றி மலையாள நகைச்சுவை நடிகர் ஜெகதி, “சுகுமாரி ஒரு செட்டு முண்டு உடையை பையில எடுத்துகிட்டு வந்து, எல்லா செட்டுக்கும் போய் அம்மா வேடத்தில் நடித்துவிடுவார்” என்று கூறியிருக்கிறார்

தமிழிலும்எம்.ஜி.ஆர். சிவாஜியிலிருந்து தனுஷ்வரை பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் சுகுமாரியைக் , ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் பாட்டியாக. பிறகு சுகுமாரி தனுஷை அவரது கணீரென்ற வெண்கலக் குரலில் விரட்டியபோது. சுகுமாரியின் குரல் அவ்வளவு தனித்துவமான, உறுதியான குரல்.

வருஷம் 16 படத்தில் கார்த்திக், குஷ்புவுக்கு குளியலறையில் முத்தம் கொடுத்து மாட்டி, குடும்பத்தாரிடம் அவமானப்பட்டு நிற்கும்போது, கார்த்திக்கின் பாட்டியாக வரும்சுகுமாரி கார்த்திக்கிடம், “வருத்தப்படாதய்யா. இங்க என்ன பெருசா நடந்துடுச்சு…. போ” என்று நடந்தது ஒரு சாதாரண விஷயம் போன்ற முகபாவத்துடன் கூறி அனுப்பிவிட்டு, கார்த்திக் சென்றவுடன் சட்டென்று முகபாவம் மாறி, நடந்தவற்றின் தீவிரத்தை உணர்ந்து அவர் கண்ணீர் விடும் காட்சியைப் பார்த்தபோது, பல்லாண்டு காலமாகத் திரைத் துறையில் தொடர்ந்து இயங்கிவரும், ஒரு பரிபூரணமான நடிகையால் மட்டுமே இம்மாதிரியாக நடிக்க முடியும் .

பட்டிக்காடா பட்டணமா படத்தில் ஜில்லென்று மேக் அப்போட்டு ஜெயலலிதாவுடன் நடிப்பில் வெளுத்து வாங்கி வி கே ராமசாமியை ஓரம் கட்டியிருப்பார் .வசனங்கள் பேசும்போது கண்களில் துறுதுறுப்பும் ,உதட்டு சுழிப்பும் அவருடைய தனி முத்திரை . வசந்த மாளிகையில் தலையை கொஞ்சம் கூட அசைக்காமல் சூடு சூடு வசனம் பேசிவிட்டு கிண்டல் பார்வை வீசுவது இவரது தனி முத்திரை .

மறைவு

[தொகு]

தீக்காயம் பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுமாரி[3][4] 2013 மார்ச் 26-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுகுமாரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. http://week.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/theWeekContent.do?contentId=13722835&programId=1073754912&tabId=13
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-27. பார்க்கப்பட்ட நாள் 2013-03-26.
  3. http://tamil.oneindia.in/movies/news/2013/03/cm-enquires-well-being-with-sukumar-being-treated-172103.html[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://dinamani.com/cinema/article1513942.ece
  5. http://dinamani.com/cinema/article1518287.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுமாரி_(நடிகை)&oldid=4114104" இலிருந்து மீள்விக்கப்பட்டது