சீலா ரசீத் சோரா
சீலா ரசீத் சோரா (Shehla Rashid Shora) என்பவர் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் மாணவி ஆவார். 2015 முதல் 2016 வரை மாணவர்கள் சங்கத்தில் உதவித் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.[1]
2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கன்னையா குமார் என்ற மாணவர்கள் சங்கத் தலைவர், தேசத் துரோக வழக்கில் கைது ஆனபோது அவரை விடுவிக்கக் கோரி நடந்த போராட்டத்தைச் சீலா ரசீத் சோரா முன்னெடுத்தார். மேலும் மாணவர்களின் உதவித் தொகையை உயர்த்தவும் பல்கலைக் கழக மானியக்குழுவின் மானியங்கள் தொடர்பாகவும் போராடினார். மேலும் காசுமீரில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாகவும் போராட்டம் நடத்தினார். இவர் இடதுசாரிக் கொள்கைகளில் நாட்டம் கொண்டவர்.
பிறப்பும் படிப்பும்
[தொகு]சோரா சிறீநகரில் பிறந்தார். இவருடைய தாயார் மருத்துவச் செவிலியராகப் பணியாற்றுகிறார்.[2] சிறீ நகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி பொறியியல் கல்வி பயின்றார். பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் சேர்ந்து அரசியலில் தலைமை என்ற படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் எச். சி. எல். என்னும் மென்பொருள் குழுமத்தில் சில காலம் பணி ஆற்றினாலும் காசுமீரத்தில் பெண்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தார். அதன் பின்னர் இவர் சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து குமுகவியலில் முதுவர் பட்டமும் சட்டப் படிப்பில் எம். பில். படிப்பும் படித்தார். 2016 மார்ச்சில் இந்தியா டுடே இதழ் நிறுவனம் நடத்திய மாநாட்டில் உரையாற்றினார்.