சீன வரலாறு
சீனாவின் வரலாறானது (ஆங்கிலம்: History of China) பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு பரந்த புவியியல் பகுதியில் விரிவடைந்துள்ளது. சீன உலகத்தின் ஒரு பகுதியாக தற்போது கருதப்படும் ஒவ்வொரு பகுதியும் ஒற்றுமை, சிதைவு, செழிப்பு, மோதல் ஆகியவற்றின் காலத்தைக் கண்டுள்ளது. சீன நாகரிகமானது மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கில் முதன் முதலில் தோன்றியது. இந்த பள்ளத்தாக்கானது யாங்சி வடிநிலத்துடன் சேர்ந்து சீன பண்பாட்டு கோளத்தின் புவியியல் மையத்தை அமைக்கிறது. ஒரு செழிப்பான வேறுபாடுடைய இன மற்றும் மொழி சார்ந்த மக்கள் குழுக்களை சீனா பேணி வந்துள்ளது. சீன வரலாற்றை பார்க்கும் பாரம்பரிய கண்ணாடியாக அரசமரபுகளின் சுழற்சியானது உள்ளது. ஏகாதிபத்திய அரசமரபுகள் வளர்ச்சியடைந்து வீழ்ந்தது மற்றும் சில சாதனைகளுக்கு காரணமாக அரசமரபுகள் குறிப்பிடப்படுவது ஆகியவை இந்த சுழற்சியில் அடங்கும். முற்காலத்திற்குள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தடயமிடப்படும் ஓர் உடைக்கப்படாத நூலாக சீன நாகரிகம் திகழ்வதாகவும் இந்தக் கண்ணாடியானது எடுத்துக் கொள்கிறது. இது நாகரிகத் தொட்டில்களில் ஒன்றாக சீனாவை ஆக்குகிறது. பல்வேறு காலங்களில் ஓர் ஆதிக்கம் மிக்க சீனப் பண்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்த அரசுகளானவை மேற்கே தியான் சான், தாரிம் வடிநிலம் மற்றும் இமயமலையிலிருந்து, வடக்கே சயான் மலைத்தொடர் வரையிலும், தெற்கே சிவப்பு ஆற்றின் சமவெளி வரையிலும் விரிவடைந்திருந்த பகுதிகளை நேரடியாகக் கட்டுப்படுத்தி வந்துள்ளன.
புதிய கற்காலமானது மஞ்சள் மற்றும் யாங்சி ஆறுகளின் அருகில் அதிகரித்து வந்த நிலையாக நுட்பமான அரசுகள் தோன்றுவதன் தொடக்கத்தைக் கண்டது. சீனாவின் நடு சமவெளிகளில் அமைந்திருந்த எர்லிதோ பண்பாடானது பாரம்பரிய சீன வரலாற்றியலில் சியா அரசமரபுடன் (பொ. ஊ. மு. 3-ஆம் ஆயிரமாண்டு) சில நேரங்களில் அடையாளப்படுத்தப்படுகிறது. தற்போது எஞ்சியிருக்கும் தொடக்க கால சீன எழுத்துக்களானவை தோராயமாக பொ. ஊ. மு. 1250-ஆம் ஆண்டிற்குக் காலமிடப்படுகின்றன. ஆரை எலும்புகள் மீது எதிர்கால கணிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளதும் இந்த எழுத்துக்களில் உள்ளடங்கியுள்ளன. மூதாதையர்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட சடங்கு சார்ந்த எழுத்துக்களான சீன உலோக வெட்டெழுத்துக்களானவை தொடக்க கால சீன எழுத்து முறையின் மற்றுமொரு பெரிய தொகுப்பை அமைக்கின்றன. சீன மொழி இலக்கியத்தின் தொடக்க கால அடுக்குகளானவை கவிதை, எதிர்காலக் கணிப்புகள் மற்றும் அலுவல்பூர்வ உரைகளின் பதிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. எழுத்து முறை தோன்றிய மிகச் சில தனித்துவமான இடங்களில் ஒன்று என சீனா நம்பப்படுகிறது. தற்போது எஞ்சியிருக்கும் தொடக்க கால பதிவுகளானவை ஏற்கனவே முதிர்ச்சியடைந்திருந்த எழுதப்பட்ட மொழியைக் காட்டுகின்றன. சவு அரசமரபின் (அண். 1046 – 256 பொ. ஊ. மு.) தற்போது எஞ்சியிருக்கும் தொடக்க கால இலக்கியம், சொர்க்கத்தின் கட்டளை எனும் நம்பிக்கையானது அறிமுகப்படுத்தப்பட்ட சீனாவின் அச்சுக் காலம் மற்றும் கன்பூசியம், தாவோயியம், சட்டவியல், மற்றும் உக்சிங் போன்ற தத்துவங்களுக்கான அடித் தளங்கள் நிறுவப்பட்டது ஆகியவற்றால் சீனாவின் பண்பாடானது நினைவுபடுத்தப்படுகிறது.
சீனா ஓர் ஒற்றை ஏகாதிபத்திய அரசின் கீழ் முதன் முதலில் பொ. ஊ. மு. 221-ஆம் ஆண்டு சின் சி குவாங்கால் ஒன்றிணைக்கப்பட்டது. இலக்கணம், எடைகள், அளவீடுகள் மற்றும் சட்டம் ஆகிய அனைத்தும் தரப்படுத்தப்பட்டன. இதற்குப் பிறகு சிறிது காலத்தில் ஆன் அரசமரபின் (202 பொ. ஊ. மு. – 220 பொ. ஊ.) காலத்துடன் சீனா அதன் செவ்வியல் சகாப்தத்தில் நுழைந்தது. ஒரு மிக முக்கியமான காலகட்டத்தை இது குறித்தது. சீன மொழிக்கான ஒரு சொல்லாக "ஆன் மொழி" என்ற சொல் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஆதிக்கம் மிகுந்த சீன இனக்குழுவானது இன்றும் ஆன் சீனர் என்று அழைக்கப்படுகின்றனர். இக்காலத்தின் போது தான் சீனப் பேரரசானது அதன் தொலை தூர புவியியல் விரிவுகளில் சிலவற்றை அடைந்தது. கன்பூசியமானது அலுவல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கன்பூசியத்தின் மைய நூல்களானவை அவற்றின் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவங்களுக்கு தொகுக்கப்பட்டன. பண்டைக்கால உயர்குடியினரிடமிருந்து தனித்துவமாக இருந்த நில உடைமை கொண்டிருந்த செல்வச் செழிப்புமிக்க குடும்பங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கின. சமகால உரோமைப் பேரரசின் தொழில்நுட்பத்துக்கு ஒத்ததாக கருதப்படும் அளவுக்கு ஆன் தொழில்நுட்பமானது இருந்தது. எழுதப்பட்ட ஆவணங்கள் பெருமளவுக்கு அதிகரிப்பதற்கு காகிதமானது மொத்தமாக தயாரிக்கப்பட்டது உதவி புரிந்தது. இதற்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட மொழியானது பயன்படுத்தப்பட்டது. சீனா பன்னாட்டு அளவில் அதன் பட்டுப்புழு வளர்ப்புக்காக அறியப்படத் தொடங்கியது. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆன் ஏகாதிபத்திய ஒழுங்கானது இறுதியாக வீழ்ச்சியடைந்த போது அதே கால அளவுடைய ஒற்றுமையின்மையின் காலத்திற்குள் சீனா நுழைந்தது. இக்காலத்தின் போது பௌத்தம் சீனப் பண்பாட்டின் மீது ஒரு குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. அதே நேரத்தில், அழகெழுத்தியல், கலை, வரலாற்றியல் மற்றும் கதை சொல்லுதல் ஆகியவை செழித்து வளர்ச்சியடைந்தன. சில நேரங்களில் மைய அரசாங்கத்தை விட செல்வந்த குடும்பங்கள் அதிக சக்தியுடையவையாக உருவாயின. யாங்சி ஆற்றுப் பள்ளத்தாக்கானது ஆதிக்கம் மிக்க பண்பாட்டு கோளத்திற்குள் இணைத்துக் கொள்ளப்பட்டது.
சுயி அரசமரபுடன் 581-ஆம் ஆண்டு ஒற்றுமையின் ஒரு காலமானது தொடங்கியது. இந்த அரசமரபு சீக்கிரமே நீண்ட காலம் நீடித்திருந்த தாங் அரசமரபுக்கு (608–907) வழிவிட்டது. தாங் அரசமரபின் காலமானது மற்றுமொரு சீனப் பொற்காலமாகக் கருதப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், கவிதை, பொருளாதாரம் மற்றும் புவியியல் செல்வாக்கு ஆகியவற்றில் செழித்த வளர்ச்சிகளை தாங் அரசமரபானது கண்டது. சீனாவின் அலுவல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே பேரரசியான ஊ செதியான் இந்த அரசமரபின் முதலாம் நூற்றாண்டின் போது ஆட்சி புரிந்தார். தாங் பேரரசர்களால் பௌத்த சமயமானது பின்பற்றப்பட்டது. ஆன் இனக் குழுவுக்கான மற்றுமொரு பொதுவான பெயராக "தாங் மக்கள்" என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. தாங் அரசமரபு சிதைவடைந்ததற்குப் பிறகு சொங் அரசமரபானது (960–1279) ஏகாதிபத்திய சீனாவின் பல இன மொழி சார்ந்த வளர்ச்சியின் அதிகபட்ச விரிவைக் கண்டது. எந்திர அச்சிடுதலானது அறிமுகப்படுத்தப்பட்டது. சில நூல்களின் எஞ்சியுள்ள தொடக்க கால குறிப்புகளில் பல இந்த சகாப்தத்தைச் சேர்ந்த மரத் துண்டு அச்சுக்கள் ஆகும். சொங் அரசமரபின் அறிவியல் முன்னேற்றமானது இந்த உலகத்தை வழி நடத்தியது. அந்த அரசமரபின் ஏகாதிபத்திய தேர்வு அமைப்பானது அரசியல் அதிகார அமைப்பிற்குக் கொள்கை ரீதியான கட்டமைப்பைக் கொடுத்தது. இந்த காலத்தின் போது கன்பூசியமும், தாவோயியமும் முழுவதுமாக இணைக்கப்பட்டு புது கன்பூசியமாக உருவாயின.
இறுதியாக மங்கோலியப் பேரரசானது அனைத்து சீனாவையும் வென்று 1271-ஆம் ஆண்டு யுவான் அரசமரபை நிறுவியது. ஐரோப்பாவுடனான தொடர்பானது இந்த காலகட்டத்தின் போது அதிகரிக்கத் தொடங்கியது. உலக ஆய்வுப் பயணம், தரமான பீங்கான் மற்றும், பெரும் கால்வாய் மற்றும் பெருஞ் சுவர் ஆகியவற்றை மறு சீரமைப்பது போன்ற பல ஏற்கனவே இருந்த கட்டமைப்புகளின் பொதுப்பணித் திட்டங்கள் உள்ளிட்டவை இதைத் தொடர்ந்து வந்த மிங் அரசமரபின் (1368–1644) காலத்தின் போது நிகழ்த்தப்பட்ட சாதனைகளாக உள்ளன. நான்கு சிறந்த செவ்வியல் புதினங்களில் மூன்று இக்காலத்தின் போது எழுதப்பட்டன. மிங் அரசமரபுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சிங் அரசமரபானது மஞ்சு இனக்குழுவைச் சேர்ந்த மக்களால் ஆளப்பட்டது. கியான்லோங் பேரரசர் (ஆ. 1735–1796) ஏகாதிபத்திய நூலகங்களின் ஒரு முழுமையான கலைக்களஞ்சியத்தைத் தொகுக்க ஆணையிட்டார். இந்த கலைக்களஞ்சியத்தில் மொத்தமாக கிட்டத்தட்ட 100 கோடி சொற்கள் இருந்தன. மிங் அரசமரபின் காலத்தின் போது ஏகாதிபத்திய சீனாவானது அதன் உச்ச பட்ச நிலப்பரப்பு விரிவை அடைந்தது. ஆனால், ஐரோப்பிய சக்திகளுடன் அதிகரித்து வந்த நிலையாக சீனா சண்டையில் ஈடுபடத் தொடங்கியது. அபினிப் போர்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த சமமற்ற ஒப்பந்தங்களில் இச்சண்டை முடிவடைந்தது.
சுன் இ சியான் மற்றும் பிறரால் தலைமை தாங்கப்பட்ட 1911-ஆம் ஆண்டின் சீனப் புரட்சியானது சீனக் குடியரசை உருவாக்கியது. 1927 முதல் 1949 வரை சங் கை செக் தலைமையிலான குடியரசு அரசாங்கம் மற்றும் பொதுவுடைமைவாதிகளுடன் இணைந்திருந்த சீன சிவப்பு இராணுவம் ஆகியவற்றுக்கு இடையில் ஓர் இழப்பை ஏற்படுத்திய உள்நாட்டுப் போரானது நடைபெற்றது. இரண்டாம் உலகப் போரில் தான் தோல்வியடையும் வரை இந்த பிரிவடைந்திருந்த நாட்டின் மீது தொழில்மயமாக்கப்பட்ட சப்பானியப் பேரரசானது படையெடுத்த காலம் மட்டுமே இதற்கு இடையூறாக அமைந்திருந்தது.
பொதுவுடைமைவாதிகளின் வெற்றிக்குப் பிறகு மா சே துங் 1949-இல் சீனா (சீன மக்கள் குடியரசு) நிறுவப்படுவதை அறிவித்தார். சீனக் குடியரசு அரசாங்கமானது தைவானுக்கு இடத்தை மாற்றியது. ஒட்டு மொத்த சீனாவின் முதன்மை நிலப் பகுதிக்கான ஒற்றை முறைமைத் தன்மையை இரு அரசாங்கங்களுமே இன்றும் உரிமையாகக் கோருகின்றன. சீன மக்கள் குடியரசானது மெதுவாக தூதரக அங்கீகாரங்களில் பெரும்பாலானவற்றைப் பெறத் தொடங்கியது. தைவானின் நிலையானது இந்த நாள் வரையிலும் விவாதத்திற்குரியதாக உள்ளது. 1966 முதல் 1976 வரை முதன்மை நிலப்பகுதி சீனாவில் நடைபெற்ற சீனப் பண்பாட்டுப் புரட்சியானது மாவோவின் சக்தியானது அவரது வாழ்வின் இறுதிக் காலம் வரையிலும் நிலை நிறுத்தப்படுவதற்கு உதவி புரிந்தது. அவரது இறப்பிற்குப் பிறகு டங் சியாவுபிங் தலைமையின் கீழ் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அரசாங்கமானது தொடங்கியது. சீனா தான் ஒன்றிணைக்கப்பட்டதிலிருந்து தசாப்தங்களுக்கு உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகத் திகழ்கிறது. 2023-ஆம் ஆண்டு இந்தியா சீனாவை முந்தும் வரையிலும் இந்நிலை நீடித்திருந்தது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
[தொகு]பழைய கற்காலம் (17 இலட்சம் ஆண்டுகள் – 12 ஆயிரம் ஆண்டுகள்)
[தொகு]தொல்வழக்கான மனித இனமான ஓமோ இரெக்டசு 13 இலட்சம் முதல் 18 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இடைப்பட்ட ஏதோ ஒரு காலத்தில் ஐரோவாசியாவிற்கு வந்தனர் என்று கருதப்படுகிறது. இந்த இனத்தவரின் துணை இனங்களின் ஏராளமான புதை படிவங்களானவை தற்போதைய சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1] இவற்றில் மிகப் பழமையானது தென்மேற்கு யுவான்மோவு மனிதன் (元谋人; யுன்னானில்) ஆவான். இவை அண். 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்படுகின்றன. இவர்கள் சாலிகாதேர்கள், மான்கள், இசுதெகோதோன் யானைகள், மூக்குக் கொம்பன்கள், கால்நடைகள், பன்றிகள் மற்றும் குறுகிய முக இராட்சத கழுதைப்புலிகள் ஆகியவற்றுடன் புதர் நில-காடுகளின் ஒரு கலவையான சுற்றுச் சூழலில் வாழ்ந்தனர்.[2] நன்றாக அறியப்பட்ட பீக்கிங் மனிதன் (北京猿人; பெய்சிங்கிற்கு அருகில்) தற்போதைய காலத்திலிருந்து 7 முதல் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்படுகிறான்.[1] இம்மனிதன் சிராய்ப்புக் கருவிகள், குட்டையான கோடரி வகைக் கருவிகளுடன் சேர்த்து சோவுகோவுதியன் குகையில் கண்டுபிடிக்கப்பட்டான்.[3] இதை விட சற்று பிந்தைய காலத்தைச் சேர்ந்த முனைகள், உளிகள் மற்றும் ஊசிகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட பிற ஓமோ இரெக்டசு புதை படிவங்களானவை இப்பகுதி முழுவதும் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் சென்சி மாகாணத்தின் வடமேற்கு லந்தியான் மனிதன், மேலும் வடகிழக்கு லியாவோனிங் மற்றும் தெற்கு குவாங்டொங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்த புதை படிவ மனிதர்களும் அடங்குவர்.[1] பெரும்பாலான பழைய கற்கால தளங்களின் காலங்களானவை நீண்ட காலமாக விவாதத்திற்குரியவையாக இருந்து வந்துள்ளன. ஆனால், நவீன காந்த அடுக்கு முறை மூலம் மிகுந்த நம்பகத்தன்மையுடன் நிறுவப்பட்டுள்ளன. இதில் முசுவான்கோவு (16.6 - 15.5 இலட்சம் ஆண்டுகள்), லான்போ (16 இலட்சம் ஆண்டுகள்), சியாவோசங்லியாங் (13.6 இலட்சம் ஆண்டுகள்), சின்டை (13.6 இலட்சம் ஆண்டுகள்), பன்சான் (13.2 இலட்சம் ஆண்டுகள்), பெயிலியாங் (12 இலட்சம் ஆண்டுகள்) மற்றும் தோங்குதுவோ (11 இலட்சம் ஆண்டுகள்) ஆகிய இடங்கள் அடங்கும்.[4] ஓமோ இரெக்டசு மனிதர்கள் நெருப்பைப் பயன்படுத்தியதற்கான ஆதாரமானது சான்சி மாகாணத்தின் சிகோவுது தொல்லியல் களத்தில் தற்காலத்திலிருந்து 10 முதல் 18 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது.[5]
சமகால ஓமோ சேப்பியன்களுடன் சேர்ந்து ஓமோ இரெக்டசு பரிணாமம் அடைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளானவை இன்றும் விவாதிக்கப்பட்டு கொண்டுள்ளன. முக்கியமானதாக கருதப்படும் "ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய" கோட்பாடு, பிராந்திய தொடர்ச்சி மாதிரி மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய கோட்பாட்டின் கலவையான வேறுபாடு ஆகியவை இது குறித்த மூன்று முதன்மையான கோட்பாடுகளாக உள்ளன.[1] இருந்த போதிலும், குனான் பகுதியின் தாவோ கோட்டத்தின் புயான் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட புதை படிவ பல்லை அடிப்படையாகக் கொண்டு சீனாவுக்கு தொடக்க கால நவீன மனிதர்களானவர்கள் நிகழ்காலத்திலிருந்து 1.2 இலட்சம் முதல் 80,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வந்தனர் என்று காலமிடப்படுகிறது.[6] இந்த மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்த பெரிய விலங்குகளாக அயிலுரோபோதா பகோனி பாண்டா கரடி, குரோகுடா அல்டிமா கழுதைப்புலி, இசுதெகோதோன் யானைகள் மற்றும் இராட்சத தபீர் பன்றி போன்றவை குறிப்பிடப்படுகின்றன.[6] தென்மேற்கு சீனாவில் குவான்யிந்தோங் குகைத் தளத்தில் உள்ள கற்கள் அமைப்புகளில் நடு பழைய கற்கால செதிற்கல் தொழில்நுட்பத்துக்கான ஆதாரமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[7] இது தோராயமாக 1.70 இலட்சம் முதல் 80,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக காலமிடப்படுகிறது.[7]
புதிய கற்காலம்
[தொகு]சீனாவில் புதிய கற்காலமானது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்று கருதப்படுகிறது.[8] புதிய கற்காலமானது பொதுவாக ஒரு பகுதியில் வேளாண்மை நடைபெற்றதைக் கொண்டு குறிப்பிடப்படுவதன் காரணமாக, தற்போதைய சீனா என்றழைக்கப்படும் பகுதியில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் புதிய கற்காலமானது தொடங்கியது என்று கருதப்படுகிறது. சீனாவில் வேளாண்மையானது படிப்படியாக வளர்ச்சியடைந்தது. தொடக்கத்தில் வெகு சில தானியங்கள் மற்றும் விலங்குகள் கொல்லைப்படுத்தப்பட்டதானது தொடர்ந்து வந்த ஆயிரமாண்டுகளில் மேலும் பல சேர்த்து கொள்ளப்பட்டது என படிப்படியாக விரிவடைந்தது.[9] யாங்சி ஆற்றின் அருகில் கண்டெடுக்கப்பட்ட அறுவடை செய்யப்பட்ட நெல்லின் தொடக்க கால ஆதாரமானது 8,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பின் படி குறிப்பிடப்படுகிறது.[10] மஞ்சள் ஆற்றுச் சமவெளியில் சிறுதானிய வேளாண்மையின் தொடக்க ஆதாரமானது கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பின் படி பொ. ஊ. மு. சுமார் 7,000 ஆண்டைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்படுகிறது.[11] சியாகு தளமானது தொடக்க வேளாண்மைக் கிராமங்களிலேயே மிக நல்ல நிலையில் உள்ள தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது (7,000 - 5,800 பொ. ஊ. மு.). நிங்சியாவின் தமைதி என்ற இடத்தில் 6,000 - பொ. ஊ. மு. 5,000 ஆண்டுகளுக்குக் காலமிடப்படுகிற 3,172 சரிவுப் பாறை செதுக்குதல்களானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர் லி சியாங்சியின் கூற்றுப் படி, "கதிரவன், நிலவு, விண்மீன்கள், கடவுள்கள் மற்றும் வேட்டையாடுதல் அல்லது மேய்ச்சல் குறித்த காட்சிகள் போன்ற 8,453 தனித்தனி கதாபாத்திரங்களை" இவை கொண்டுள்ளன. சில நேரங்களில் ஆதி எழுத்துக்கள் என்றழைக்கப்படும் எழுதப்பட்ட குறியீடுகளானவை கண்டுபிடிக்கப்பட்டு, சியாகு தளத்தில் பொ. ஊ. மு. சுமார் 7,000-ஆம் ஆண்டுக்கும்,[12] தமைதி என்ற இடத்தில் பொ. ஊ. மு. சுமார் 6,000-ஆம் ஆண்டுக்கும், ததிவான் என்ற இடத்தில் பொ. ஊ. மு. சுமார் 5,800 - 5,400-க்கு இடைப்பட்ட காலத்திற்கும்[13] மற்றும் பன்போ என்ற இடத்தில் பொ. ஊ. மு. 5-ஆம் ஆயிரம் ஆண்டுக்கும் காலமிடப்பட்டுள்ளன. வேளாண்மையுடன் சேர்ந்து மக்கள் தொகை அதிகரித்தது, தானியங்களைச் சேமித்து வைத்தல் மற்றும் மறு விநியோகம் செய்யும் ஆற்றல், மற்றும் நிபுணர்களான கைவினைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆதரவளிக்கும் ஆற்றலும் வந்தது. இவை யாங்சி சமவெளியின் தாவோசி மற்றும் லியாங்சு பண்பாடு போன்ற பிந்தைய புதிய கற்கால தளங்களில் அமைந்திருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[10] நடு மஞ்சள் ஆற்று பள்ளத்தாக்கின் நடு மற்றும் பிந்தைய புதிய கற்காலப் பண்பாடுகளானவை யாங்சவோ பண்பாடு (5,000 - பொ. ஊ. மு. 3,000) மற்றும் லோங்சான் பண்பாடு (3,000 - பொ. ஊ. மு. 2,000) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியில் தொடக்க காலத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட விலங்குகளாக பன்றிகளும், நாய்களும் திகழ்கின்றன. பொ. ஊ. மு. சுமார் 3,000 ஆண்டுக்குப் பிறகு கொல்லைப்படுத்தப்பட்ட கால்நடைகள் மற்றும் செம்மறியாடுகள் மேற்காசியாவிலிருந்து இப்பகுதிக்குப் பரவின. இதே நேரம் வாக்கில் கோதுமையும் இங்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், ஒரு முக்கியத்துவமற்ற பயிராகவே அது தொடர்ந்து இருந்து வந்தது. குழிப்பேரி, சேலாப்பழம் மற்றும் ஆரஞ்சுகள் போன்ற பழங்கள், மேலும் கோழிகள் மற்றும் பல்வேறு காய்கறிகள் ஆகியவையும் புதிய கற்கால சீனாவில் கொல்லைப்படுத்தப்பட்டன.[9]
வெண்கலக் காலம்
[தொகு]
வெண்கல கலைப்பொருட்களானவை மசியாயாவோ பண்பாட்டுத் தளத்தில் (3,100 மற்றும் பொ. ஊ. மு. 2,700-க்கு இடைப்பட்ட காலம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[14][15] வெண்கலக் காலமானது வடகிழக்கு சீனாவின் கீழ் சியாசியாதியான் பண்பாட்டாலும் (2,200 - பொ. ஊ. மு. 1,600) பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[16] தற்போதைய சிச்சுவானில் அமைந்துள்ள சான்சிங்துயி என்பது ஒரு முக்கியமான பண்டைக்கால நகரத்தின் தளமாக நம்பப்படுகிறது. இது இதற்கு முன்னர் அறியப்படாத வெண்கலக் காலப் பண்பாடு (2,000 மற்றும் பொ. ஊ. மு. 1,200 இடைப்பட்ட காலம்) ஆகும். இந்த தளமானது முதன் முதலில் 1929-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு 1986-இல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. சீன தொல்லியலாளர்கள் சான்சிங்துயி பண்பாட்டை சூ அரசின் பகுதி என அடையாளப்படுத்துகின்றனர். இத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப் பொருட்களை சூவின் தொடக்க கால தொன்ம மன்னர்களுடன் தொடர்புபடுத்துகின்றனர்.[17][18] மோகோவு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளானவை சிசியா பண்பாட்டில் அதிக அளவிலான வன்முறைகள் நடந்ததை வெளிக் காட்டுகின்றன.[19]
இரும்பு உலோகவியலானது யாங்சி ஆற்றுப் பள்ளத்தாக்கில் பிந்தைய ஆறாம் நூற்றாண்டில் தோன்றத் தொடங்குகிறது.[20] விண்கல் இரும்பால் செய்யப்பட்ட ஒரு கோடரி முனையுடன் கூடிய வெண்கலக் கோடரியானது சிஜியாசுவாங்கின் (தற்போது ஏபெய் மாகாணம்) காவோசெங் நகரத்திற்கு அருகில் அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இது பொ. ஊ. மு. 14-ஆம் நூற்றாண்டுக்குக் காலமிடப்படுகிறது. திபெத்தியப் பீடபூமியின் ஓர் இரும்புக் காலப் பண்பாடானது தோராயமாக தொடக்க கால திபெத்திய எழுத்துக்களில் விவரிக்கப்பட்டுள்ள சாங்சூங் இராச்சியத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
பண்டைக் கால சீனா
[தொகு]பிந்தைய காலகட்டங்களில் சீன வரலாற்றாளர்கள் ஓர் அரசமரபுக்குப் பிறகு மற்றொரு அரசமரபு ஆட்சிக்கு வரும் கருத்துக்குப் பழக்கப்பட்டிருந்தனர். ஆனால், தொடக்க கால சீனாவில் அரசியல் சூழ்நிலையானது இதை விட மிகவும் நுட்பமானதாக இருந்தது. எனவே, சில சீன அறிஞர்கள் பரிந்துரைப்பதன் படி, சியா மற்றும் சாங் ஆகிய அரசமரபுகளை ஒரே நேரத்தில் அமைந்திருந்த இரு வேறு தனித்துவமான அரசியல் அமைப்புகளாகக் குறிப்பிடலாம். சாங் அரசமரபு அமைந்திருந்த அதே நேரத்தில் தொடக்க சோவு அரசமரபு அமைந்திருந்ததை இது ஒத்திருந்தது.[21] சம காலத்திலும், பிந்தைய காலத்திலும் சீனா எவ்வாறு சட்ட ரீதியாகவோ அல்லது பண்பாட்டு ரீதியாகவோ ஒரே பகுதியாக இல்லாத அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதற்கான ஒற்றுமைகளை இது கொண்டிருந்தது.[22]
ஒரு காலத்தில் வரலாற்று ரீதியானது என்று கருதப்பட்ட தொடக்க காலமானது யாவோ, சன் மற்றும் யூ ஆகிய முனிவர்-பேரரசர்களின் தொன்ம சகாப்தம் ஆகும். பாரம்பரியமாக பதவியை விட்டு விலகும் அமைப்பானது இந்த காலகட்டத்தின் போது முக்கியத்துவம் பெற்றிருந்தது.[23] யாவோ தன்னுடைய அரியணையை சன்னுக்காகவும், சன் யூவுக்காக தன்னுடைய பதவியை விட்டும் விலகினர். யூ சியா அரசமரபை நிறுவினார்.
சியா அரசமரபு (அண். 2070 – அண். 1600 பொ. ஊ. மு.)
[தொகு]
சியா அரசமரபானது (அண். 2070 – அண். 1600 பொ. ஊ. மு.) மிக பிந்தைய பாரம்பரிய வரலாற்றியலில் விவரிக்கப்பட்டுள்ள மூன்று அரசமரபுகளிலேயே தொடக்க கால அரசமரபு ஆகும். இந்த வரலாற்றியல் எனக் குறிப்பிடப்படுவதில் மூங்கில் ஆண்டுத் தொகுப்பேடுகள் மற்றும் சிமா சியானின் மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் (அண். 91 பொ. ஊ. மு.)உள்ளிட்டவை அடங்கும். சியா அரசமரபானது மேற்குலக அறிஞர்களால் பொதுவாக புராணக் கதை என்று கருதப்படுகிறது. ஆனால், சீனாவில் இந்த அரசமரபானது பொதுவாக 1959-ஆம் ஆண்டு அகழ்வாய்வு செய்யப்பட்ட கெனானில் உள்ள எர்லிதோவு (1900–1500 பொ. ஊ. மு.) என்ற இடத்தில் அமைந்திருந்த தொடக்க வெண்கலக் கால தளத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. எர்லிதோவுவிலோ அல்லது எந்தவொரு பிற சமகால தளத்திலோ எழுத்துக்கள் அகழ்வாய்வு செய்யப்படாததால் சியா அரசமரபானது எப்போதாவது அமைந்திருந்ததா என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. சில தொல்லியலாளர்கள் எர்லிதோவு தளமானது சியாவின் தலைநகரம் என்று வாதிடுகின்றனர்.[24] எவ்வாறாயினும், பிந்தைய நூல்களில் பதிவிடப்பட்டுள்ள சியா புராணக் கதைகளுடன் பொருந்திப் போகாததாக எர்லிதோவு தளத்தில் அமைந்திருந்த அரசியல் அமைப்பின் நிலையானது இல்லை.[25] மிக முக்கியமாக, அச்சில் வார்க்கப்பட்ட வெண்கலக் கொள்கலன்களைப் பயன்படுத்தி சடங்குகளைச் செய்த உயர் வகுப்பினருக்கான தொடக்க கால ஆதாரத்தை எர்லிதோவு தளமானது கொண்டுள்ளது. பிற்காலத்தில் இந்த பழக்க வழக்கமானது சாங் மற்றும் சோவு அரசமரபுகளால் பின்பற்றப்பட்டது.[26]
சாங் அரசமரபு (அண். 1600 – அண். 1046 பொ. ஊ. மு.)
[தொகு]
ஆரை எலும்புகள் மற்றும் வெண்கலப் பொருட்கள் போன்ற இரு விதமான தொல்லியல் ஆதாரங்களும், மேலும் இடம் விட்டு இடம் பரவிய நூல்கள் ஆகியவையும் சாங் அரசமரபின் (அண். 1600 – அண். 1046 பொ. ஊ. மு.) வரலாற்று ரீதியிலான இருப்பை உறுதிப்படுத்துகின்றன. தொடக்க கால சாங் காலத்தைச் சேர்ந்த கண்டுபிடிப்புகளானவை எர்லிகங் (நவீன செங்சவு) என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன. இன்க்சுவில் (நவீன அன்யங், கெனானுக்கு அருகில்) கண்டுபிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த இடம் பிந்தைய சாங் காலத்தின் போது (அண். 1250–1050 பொ. ஊ. மு.) இறுதி சாங் தலைநகரத்தின் தளமாக இருந்தது.[27] தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சீனர்களின் தொடக்க கால எழுதப்பட்ட பதிவுகளை உள்ளடக்கியவையாக அன்யங்கில் கண்டுபிடிக்கப்பட்டவை திகழ்கின்றன. அண். 1250 – அண். 1046 பொ. ஊ. மு. காலத்துக்குக் காலமிடப்படுகிற ஆரை எலும்புகள் இவையாகும். விலங்குகளின் எலும்புகள் அல்லது ஓடுகள் மீது பண்டைக் கால சீன மொழியில் எழுதப்பட்ட எதிர்காலக் கணிப்புப் பதிவுகளின் பொறிப்புகள் இவையாகும்.[28]
சாங் அரசமரபின் காலத்தின் போது குறைந்தது 29 மன்னர்கள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தனர்.[29] அவர்களின் ஆட்சிக் காலம் முழுவதும் சிசி நூலில் (மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள்) குறிப்பிட்ப்பட்டுள்ளதன் படி, தலை நகரமானது ஆறு முறை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது.[30] கடைசி மற்றும் மிக முக்கியமான இட நகர்வானது இன் என்ற இடத்துக்கு ஊ டிங் மன்னரின் ஆட்சிக் காலத்தின் போது அண். 1250 பொ. ஊ. மு.-ஆம் ஆண்டு நகர்த்தப்பட்டதாகத் திகழ்ந்தது.[31] பிந்தைய காலங்களில் சாங் அரசமரபின் இரண்டாம் பாதி காலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், வரலாற்றில் இன் அரசமரபு என்ற பெயரானது சாங் அரசமரபுக்குப் பயன்படுத்தப்படும் பெயராக உள்ளது.[29]
அன்யங்கில் கண்டுபிடிக்கப்பட்ட எழுதப்பட்ட பதிவுகளானவை சாங் அரசமரபின் இருப்பை உறுதிப்படுத்தினாலும்,[32] அன்யங் குடியிருப்புடன் சமகாலத்தைச் சேர்ந்த குடியிருப்புகளை சாங் அரசமரபுடன் தொடர்புபடுத்த மேற்குலக அறிஞர்கள் பொதுவாகத் தயக்கம் காட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, சன்சிங்துயியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் கண்டுபிடிப்புகளானவை அன்யங்கைப் போல் இல்லாமல் பண்பாட்டு, தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நாகரிகத்தைப் பரிந்துரைக்கின்றன. அன்யங்கிலிருந்து சாங் அரசமரபின் ஆட்சி எல்லையானது எந்த அளவுக்கு விரிவடைந்திருந்தது என்பதை நிரூபிக்கத் தகுந்த ஆதாரமாக இவை இல்லை. இது குறித்த முன்னணிக் கோட்பாடாக உள்ளதானது, அலுவல்பூர்வ வரலாற்றில் அதே சாங் அரசமரபால் ஆளப்பட்ட அன்யங்கானது தற்போது முதன்மையான சீனப் பகுதி என்றழைக்கப்படும் பகுதியிலிருந்த பண்பாட்டு ரீதியாக வேறுபட்ட ஏராளமான பிற குடியிருப்புகளுடன் தானும் அமைந்திருந்து, அப்பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டது என்பதாகும்.[33]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Wilkinson 2018, ப. 737.
- ↑ Zhu et al. 2008, ப. 1077, 1084–1085.
- ↑ Wu & Lin 1983, ப. 92.
- ↑ Ao et al. 2013, ப. 1.
- ↑ James et al. 1989, ப. 2.
- ↑ 6.0 6.1 Liu et al. 2015, ப. 696.
- ↑ 7.0 7.1 Hu et al. 2018, ப. 82.
- ↑ "Neolithic Period in China". Timeline of Art History. பெருநகரக் கலை அருங்காட்சியகம். October 2004. Retrieved 10 February 2008.
- ↑ 9.0 9.1 Lander, Brian (2021). The King's Harvest: A Political Ecology of China from the First Farmers to the First Empire (in ஆங்கிலம்). Yale University Press.
- ↑ 10.0 10.1 Pringle, Heather (1998). "The Slow Birth of Agriculture". Science 282 (5393): 1446. doi:10.1126/science.282.5393.1446. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. http://cas.bellarmine.edu/tietjen/images/neolithic_agriculture.htm.
- ↑ "Rice and Early Agriculture in China". Legacy of Human Civilizations. Mesa Community College. Archived from the original on 27 August 2009. Retrieved 10 February 2008.
- ↑ Rincon, Paul (17 April 2003). "'Earliest writing' found in China". BBC News. http://news.bbc.co.uk/2/hi/science/nature/2956925.stm.
- ↑ Qiu_Xigui (2000). Chinese Writing. English translation of 文字學概論 by Gilbert L. Mattos and Jerry Norman. Early China Special Monograph Series No. 4. Berkeley: The Society for the Study of Early China and the Institute of East Asian Studies, University of California, Berkeley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55729-071-7
- ↑ Mo, Duowen; Zhao, Zhijun; Xu, Junjie; Li, Minglin (2010). "Holocene Environmental Changes and the Evolution of the Neolithic Cultures in China". In Martini, I. Peter; Chesworth, Ward (eds.). Landscapes and Societies: Selected Cases. Springer. p. 310. doi:10.1007/978-90-481-9413-1_19. ISBN 978-90-481-9412-4.
- ↑ Higham, Charles (2004). Encyclopedia of Ancient Asian Civilizations. Infobase. p. 200. ISBN 0-8160-4640-9.
- ↑ Shelach, Gideon (2002). Leadership Strategies, Economic Activity, and Interregional Interaction: Social Complexity in Northeast China. Springer. p. 89. doi:10.1007/0-306-47164-7_5. ISBN 978-0-306-47164-3.
- ↑ Bagley 1999, ப. 135.
- ↑ Rawson, Jessica. "New discoveries from the early dynasties". Times Higher Education. Retrieved 3 October 2013.
- ↑ Dittmar, J. M.; Berger, E.; Zhan, X.; Mao, R.; Wang, H.; Yeh, H. Y. (December 2019). "Skeletal evidence for violent trauma from the bronze age Qijia culture (2,300-1,500 BCE), Gansu Province, China". International Journal of Paleopathology 27: 66–79. doi:10.1016/j.ijpp.2019.08.002. பப்மெட்:31606648. Bibcode: 2019IJPal..27...66D.
- ↑ Higham, Charles. 1996. The Bronze Age of Southeast Asia[page needed]
- ↑ Zhang, Shanruo Ning (2016). Confucianism in Contemporary Chinese Politics: An Actionable Account of Authoritarian Political Culture (in ஆங்கிலம்). Lexington Books. p. 56. ISBN 978-0-7391-8240-6.
- ↑ Goldin, Paul R. (2015). "Representations of Regional Diversity during the Eastern Zhou Dynasty". In Yuri Pines; Paul R. Goldin; Martin Kern (eds.). Ideology of Power and Power of Ideology in Early China. Sinica Leidensia, vol. 124. Brill. pp. 31–48. doi:10.1163/9789004299337_003. ISBN 9789004299337.
- ↑ Yuri Pines (2005). "Disputers of Abdication: Zhanguo egalitarianism and the sovereign's power". T'oung Pao 91 (4/5): 243–300. doi:10.1163/156853205774910098.
- ↑ Xu Hong (许宏) (2021). 最早的中国:二里头文明的崛起 [The Earliest China: The Rise of Erlitou Civilization] (in சீனம்). 生活读书新知三联书店. ISBN 978-7-108-07083-8.
- ↑ China: Five Thousand Years of History and Civilization. City University of Hong Kong Press. 2007. p. 25. ISBN 978-962-937-140-1.
- ↑ Bagley 1999, ப. 158–159.
- ↑ Wilkinson 2018, ப. 756.
- ↑ Boltz 1986, ப. 436.
- ↑ 29.0 29.1 Keightley 1999, ப. 232.
- ↑ Keightley 1999, ப. 233.
- ↑ Boileau, Gilles (2023). "Shang Dynasty's "nine generations chaos" and the Reign of Wu Ding: towards a Unilineal Line of Transmission of Royal Power". Bulletin of the School of Oriental and African Studies (Cambridge University Press) 86 (2): 293–315, esp. 299, 303. doi:10.1017/S0041977X23000277.
- ↑ Cheung, Kwong-yue (1983). "Recent archaeological evidence relating to the origin of Chinese characters". In Keightley, David N.; Barnard, Noel (eds.). The Origins of Chinese Civilization. Translated by Barnard, Noel. University of California Press. p. 235. ISBN 978-0-520-04229-2.
- ↑ Bagley 1999, ப. 158.