சீனா போரா கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனா போரா (Sheena Bora) என்ற 24 வயது இளம்பெண் ஒருவர் மும்பையிலிருக்கும் மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்தில் செயல் பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் ஊடகத் துறையில் பிரபலமாக விளங்கிய இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகியோரது மகள் ஆவார். சீனா போராவிற்கு மெக்கேல் போரா என்ற ஒரு தம்பியார் இருக்கின்றார். சீனா போரா தனது தாயாரான இந்திராணி முகர்ஜியின் மூன்றாவது கணவரும், ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலராக பணியாற்றிய பீட்டர் முகர்ஜியின் முதலாவது மனைவியின் மகனான ராகுல் முகர்ஜியை காதலித்தும் வந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 முதல் அவர் காணாமல் போனார், அதன் பின் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2015-யில் அநாமதேயர் ஒருவரால் வழங்கப்பட்ட துப்பின் அடிப்படையில் மும்பை காவல்துறையினர் அவருடைய தாயாரான இந்திராணி முகர்ஜியை சீனா போராவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். அவருடன் இந்திராணி முகர்ஜியின் இரண்டாவது கணவரான சஞ்சீவ் கண்ணா மற்றும் வாகன ஓட்டுநர் சியாம்வர் பிந்துராம் ராய் ஆகியோரையும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர் என கைது செய்தனர். [1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1988-யில் சித்தார்த்தா தாஸ் என்பவரை காதலித்து மணம் புரியாமலேயே ஒன்றிணைந்து வாழத் தொடங்கியிருந்தார் இந்திராணி.[1] [2] 1989-யில் கொல்கத்தாவில் இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் சீனா போரா. அவர்களுக்கு 1990-யில் மிக்கேல் போரா என்ற மகனும் பிறந்தார். 1990-ஆம் ஆண்டு சீனா போராவின் பெற்றோர்கள் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரோடு சில காலம் இந்திராணி ஒன்றிணைந்து வாழ்ந்திருந்தார் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால், அவர்கள் பின்னர் பிரிந்து விட்டனர். [3] 1990-யில் இந்திராணி தனது இரு பிள்ளைகளையும் கௌகாத்திக்கு அழைத்துச் சென்று அங்கு தமது பெற்றோருக்கு தத்துக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.பின்னர் குவாகத்தியில் தாத்தா, பாட்டியால் அவர்கள் வளர்க்கப்படனர்.

இந்திராணி முகர்ஜி பின்னர் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் கண்ணாவை மணந்து கொண்டார். அவர்களுக்கு விதி கண்ணா என்றொரு மகளும் இருக்கின்றார். கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திராணி முகர்ஜியும், சஞ்சீவ் கண்ணாவும் பிரிந்துவிட்டனர். அதே ஆண்டு பீட்டர் முகர்ஜியை மணந்து கொண்டார் இந்திராணி முகர்ஜி. சஞ்சீவ் கண்ணாவிற்கும் இந்திராணி முகர்ஜிக்கும் பிறந்த விதி கண்ணாவை பீட்டர் முகர்ஜி தத்தெடுத்துக் கொண்டார். அதன் பின்னர் இந்திராணியும், அவரது மகள் விதியும் பீட்டர் முகர்ஜியின் கடைசிப் பெயரை தமது பெயர்களோடு இணைத்துக் கொண்டனர்.[1]

இந்நிலையில் இந்திராணி முகர்ஜி தமது மூத்த மகளான சீனா போராவை சந்தித்து அவரை மும்பைக்கு அழைத்து வந்தார். ஆனால் தமது கணவர் பீட்டர் முகர்ஜி உட்பட அனைவரிடமும் சீனா போராவை தமது தங்கை என அறிமுகம் செய்து வைத்திருக்கின்றார். அது மட்டுமின்றி, சீனா போரா, மெக்கேல் போரா ஆகியோர் இருவரும் தமது பிள்ளைகள் என்பதை மறைத்து, தமது சகோதர்கள் என்றே கூறி வந்திருக்கின்றார்.[1] மும்பையிலுள்ள செண்ட் சேவியர் கல்லூரியில் படிப்பதற்கு சீனா போராவிற்கு சீட்டு வாங்கிக் கொடுத்திருக்கின்றார் பீட்டர் முகர்ஜி. அக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து சீனா போரா கடந்த 2009-யில் பி.ஏ பட்டம் பெற்று, பின்னர் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனத்தில் மேலாண்மை பயில்நராக பணிக்குச் சேர்ந்தார். பின்னர் கடந்த 2011-யில் மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்தில் செயல் பணியாளராக இணைந்து பின்னர் அங்கு துணை மேலாளராக பணியைத் தொடர்ந்து வந்தார்.[1]

மும்பையில் வாழ்ந்திருந்த சமயத்தில் பீட்டர் முகர்ஜியின் மூத்த தாரத்து மகனான ராகுல் முகரிஜியோடு சீனா போராவிற்கு அறிமுகம் கிடைத்தது. இருவரும் ஒருவகையில் ரத்த சம்பந்தமில்லாத சகோதர முறை என்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினார்கள். 2009-யில் இந்திராணி முகர்ஜியிடம் இருந்து விலகிய சீனா போரா, அவர் காணமல் போகும் வரை ஒன்றாகவே வாழ்ந்தும் வந்தனர். அவர்களின் உறவிற்கு இந்திராணி முகர்ஜி சம்மதம் தெர்விக்கவில்லை. ஆனால், பீட்டர் முகர்ஜி அவர்கள் இருவரும் மணந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24, 2012-யில் திடிரென சீனா போரா தனது வேலையிலிருந்து விடுப்பு எடுத்திருக்கின்றார். பின்னர், அவர் பணியாற்றிய நிறுவனத்திற்கு அவருடைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து ராஜினாமா கடிதம் ஒன்றும் வரப்பெற்றுள்ளது.[1] அதே நாளன்று, சீனா போராவின் செல்பேசியிலிருந்து இனி ராகுலோடு உறவை நீடிக்க விருப்பமில்லை, பிரிந்து விடலாம் என்றொரு குறுந்தகவல் வந்தது.[1] அவருடைய தாயாரான இந்திராணி முகர்ஜியோ சீனா போரா மேல் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு போய்விட்டார் என கூறிவந்திருக்கின்றார். அதனால் சீனா போரா காணாமல் போனதாக யாரும் காவல்துறையிடம் புகாரும் அளிக்கவில்லை.[1] அவர் உயிரோடு இருப்பதாக நம்பப்பட்டும் வந்திருக்கின்றது. ஆனால், ஏப்ரல் 24, 2012-யின் பின் சீனா போராவை யாரும் பார்த்திருக்கவில்லை.

ராகுல் முகர்ஜியின் புகார் முயற்சி[தொகு]

நன்றாகவே போய்க் கொண்டிருந்த தமது காதல் வாழ்க்கையிலிருந்து சீனா போரா விலகுவதற்கான காரணங்கள் என்ன என புரியாமல் தவித்த ராகுல் முகர்ஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், கடந்த ஏப்ரல் 2012-யில் வோர்லி காவல்நிலையத்தில் சீனா போராவை காணவில்லை என புகார் கொடுக்க முயன்றிருக்கின்றார் அவர். ஆனால், ராகுல் முகர்ஜியும், சீனா போராவும் அந்தேரியில் வசித்து வந்ததால், புகாரை அங்கு போய் கொடுக்குமாறு வோர்லி காவலர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் அந்தேரி காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முயன்றிருக்கின்றார் அவர். ஆனால், அவர் கொடுத்த புகார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை. காவல் துறை மீது நம்பிக்கையிழந்த ராகுல் முகர்ஜி பலமுறை இந்திராணி முகர்ஜியை சந்தித்து சீனா போராவைப் பற்றி விசாரித்திருக்கின்றர். ஆனால், இந்திராணி முகர்ஜியோ சீனா போரா மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட்டதாகவும், ராகுல் முகர்ஜியோடு வாழ விருப்பமில்லை எனவும், மற்றொரு ஆணை அங்கு விரும்புவதாகவும் கூறியிருக்கின்றார். சீனா போராவின் கடவுச்சீட்டு தன்னிடமுள்ளா போது, எப்படி அவரால் அமெரிக்கா செல்ல முடியும் என வினவியிருக்கின்றார் ராகுல் முகர்ஜி. ஆனால், வேறொரு கடவுச்சீட்டைப் பெற்று அமெரிக்கா போய்விட்டதாக கூறியிருக்கின்றார் இந்திராணி முகர்ஜி. பல இடங்களில் தேடியும் சீனா போரா பற்றிய தகவல்கள் கிடைக்காததால், ராகுல் முகர்ஜி தனது தாயார் வசிக்கும் தேராதுன்னிற்கு சென்றுவிட்டார்.[1]

புகார் கொடுப்பதை தடுத்திருக்கின்றார் இந்திராணி முகர்ஜி[தொகு]

கடந்த ஏப்ரல் 2012-யிலிருந்து சீனா போராவை பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், ராகுல் முகர்ஜியும், சீனா போராவின் தம்பியான மெக்கேல் போராவும் சீனா போராவை காணவில்லை என புகார் கொடுக்க முயன்றிருக்கின்றனர். ராகுல் முகர்ஜியின் வற்புறுத்தல் காரணமாக காவல்துறை ஒருமுறை இந்திராணி முகர்ஜியின் வீட்டுக்கே சென்று விசாரணையும் நடத்தியுள்ளனர். ஆனால், இந்திராணி முகர்ஜியோ சீனா போரா அமெரிக்கா சென்றுவிட்டதாகவும், ராகுல் முகர்ஜி சீனா போராவை தொந்தரவு செய்கின்றதால் எவ்வித தொடர்பு முகவரிகளையும் தர விரும்பவில்லை எனவும் கூறியிருக்கின்றார்.[1]

கொலைச் சம்பவமும் பின்னர் நடந்தவைகளும்[தொகு]

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அநாமதேயர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்திராணி முகர்ஜி மீது சந்தேகம் எழவே அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநர் சியாம்வர் பிந்துராம் ராய் ஆகியோரையும் கைது செய்தனர். சியாம்வர் பிந்துராம் ராய் வழங்கிய வாக்குமூலத்தில் இந்திராணி முகர்ஜியே சீனா போராவை கொலை செய்ய திட்டமிட்டார் என்பதும் தெரிய வந்தது. இந்திராணி முகர்ஜியும், அவருடைய முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணாவும் இணைந்தே சீனா போராவை தீர்த்துக் கட்டியுள்ளனர். சம்பவ நாளன்று, மும்பைக்கு விமானத்தில் வந்த சஞ்சீவ் கண்ணா, வோர்லியிலுள்ள ஹில்டாப் விடுதியில் தங்கியிருக்கின்றார். இந்திராணி முகர்ஜியும், சஞ்சீவ் கண்ணாவும் சீனா போராவை கடத்திக் கொலை செய்திருக்கின்றனர். 

கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாளன்று மாலை ஆறு மணியளவில் சஞ்சீவ் கண்ணாவை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஏற்றிக் கொண்ட இந்திராணி முகர்ஜி திட்டமிட்ட படி சீனா போராவை பாந்திராவிலுள்ள நேசனல் கல்லூரியின் லிங்கிங் சாலைக்கு வருமாறு கூறியிருக்கின்றார். இந்திராணியை சந்திக்க சீனா போரா விரும்பவில்லை எனவும், ஆனாலும் தொடர்ந்து வற்புறுத்தியாதால் அவர் அங்கு வந்திருக்கின்றார். அவரை நேசனல் கல்லூரிக்கு அருகே இறக்கிவிட்டு வீடு திரும்பினார் ராகுல் முகர்ஜி. பாந்திராவில் காத்திருந்த சீனா போராவை காரில் ஏற்றிக் கொண்டார் இந்திராணி முகர்ஜி. காரை அவருடைய வாகன ஓட்டுநர் பிந்துராம் ராய் ஒட்ட, பின்னிருக்கையில் சஞ்சீவ் கண்ணா அமர்ந்திருக்கின்றார். ஓட்டுநருக்கு அருகே இந்திராணி முன்னிருக்கையில் அமர்ந்திருக்கின்றார். அப்போது சீனா போராவிற்கு போதை கலந்த தண்ணீரை பருகக் கொடுத்திருக்கின்றார் இந்திராணி முகர்ஜி. பாந்திராவை கார் கடக்கின்ற சமயம், அரை மயக்கத்திலிருந்த சீனா போராவை கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கின்றார் சஞ்சீவ் கண்ணா. பின்னர் சீனா போராவின் உடலத்தை வோர்லியிலுள்ள தமது வீட்டுக்கு எடுத்துச் சென்ற அவர்கள், ஒரு பையிலிட்டு காரின் பூட்டில் போட்டிருக்கின்றனர். சஞ்சீவ் கண்ணா பின்னர் ஓட்டலுக்கு சென்றுவிடவே, இந்திராணி முகர்ஜி தமது வீட்டிலேயே அன்றிரவு தங்கியிருக்கின்றனர். காரில் உடலத்தைக் கண்காணித்த வண்ணம் உறங்கியிருக்கின்றார் ஓட்டுநர் பிந்துராம் ராய்.

அன்று அதிகாலை, மூவரும் பின்னர் ஒன்றிணைந்து மும்பைக்கு வெளியே இருக்கின்ற ராயக்காடு பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அங்கு ககோடே என்றொரு கிராமத்தின் காட்டுப் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் சீனா போராவின் உடலத்தை பெற்றோலிட்டு கொளுத்தியிருக்கின்றனர். உடலம் முழுமையாக எரிந்து சாம்பலாகிய பின்னர், அங்கேயே சாம்பலை புதைத்துவிட்டு, மூவரும் மும்பைக்கு திரும்பியுள்ளனர். அன்றைய தினமே சஞ்சீவ் கண்ணா மும்பையிலிருந்து கொல்கத்தா சென்று விட்டார்.[1]

2012-ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள், அக் கிராமத்தில் பாதி அழுகிய நிலையில் ஓர் உடலிருப்பதாக ஊரார்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். ஆனால், பாதி எரிந்த நிலையில், பாதி அழுகிய நிலையில் எலும்புகள் மட்டுமே எஞ்சிய நிலையிலிருந்த அந்த உடலத்தை காவல்துறையினரால் அடையாளம் காணமுடியவில்லை. கைப்பற்றப்பட்ட உடலத்தின் மிச்சங்களை மும்பையிலிருக்கும் சேர் ஜாம்சத்ஜி ஜிஜிபாய் மருத்துவமனையின் தரும மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இதைப் பற்றிய முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதியவில்லை என்பதும், மேற்கொண்டு எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.[1] சீனா போரா காணாமல் போயுள்ளார் என்ற தகவலே கடந்த ஆகஸ்ட் 2015 வரை வெளியுலகிற்கு தெரியாமேலேயே இருந்து வந்தது.

கொலை வழக்கின் முடிச்சுகள் அவிழ்ந்தன[தொகு]

ராயக்காடு மாவட்டம் ககோடே கிராமத்தில் கிடைத்த உடலத்திற்கும், சீனா போரா காணமல் போனதற்குமான தொடர்புகளை யாருமே நினைத்துப் பார்க்கக் கூட இல்லை. கிட்டத்தட்ட சீனா போரா காணாமல் போய் 40 மாதங்கள் கழித்தே இந்த உண்மை வெளியுலகிற்கு தெரியவந்திருக்கின்றது. இந்திராணி முகர்ஜி பற்றிய அநாமதேய துப்பு கிடைத்ததும் ஏறத்தாழ நான்கு மாதங்கள் அவருக்குத் தெரியாமல் இந்திராணி முகர்ஜியை கண்காணித்து வந்திருக்கின்றது மும்பை காவல்துறை. அநாமதேயர் வழங்கிய துப்பில் இந்திராணி முகர்ஜியின் தங்கை சீனா போரா காணமல் போனதற்கும் இந்திராணிக்கும் தொடர்பு இருப்பதாகவே ஆரம்பத்தில் காவல்துறை வழக்கைப் பதிவு செய்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தார் என மற்றொரு வழக்கில் இந்திராணி முகர்ஜியின் வாகன ஓட்டுநர் பிந்துராம் கைது செய்யப்படவே, அந்த விசாரணையில் அவர் சீனா போராவின் கொலை பற்றியும் உளறியிருக்கின்றனர். இதன் பின்னரே, சீனா போரா வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்டார். ஆரம்ப கட்ட விசாரணையில் சீனா போரா அமெரிக்காவில் இருப்பதாக சாதித்து வந்த இந்திராணி முகர்ஜி பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டிருக்கின்றார்.[1] வாகன ஓட்டுநர் பிந்துராம் ராய் அப்புரூவராக மாறியதால், அவர் கொலைக் குற்றம் பற்றிய முழுத் தகவல்களையும் காவல்துறைக்கு வழங்கிவிட்டார். இந்த செய்தி வெளியாகிய அடுத்த தினம் மெக்கேல் போரா செய்தியாளர்களிடம் வழங்கிய தகவலின் படி, சீனா போராவும், தாமும் இந்திராணி முகர்ஜியின் பிள்ளைகள் எனவும், இந்திராணி சொல்வது போல அவருடைய சகோதரர்கள் இல்லை எனவும் கூறினார். இதைப் பற்றி காவல்துறையினர் விசாரித்த போது, இந்திராணி முகர்ஜியும் உண்மையை ஒத்துக் கொண்டார்.[1]

விசாரணைகள்[தொகு]

சில மாதங்களுக்கு முன் அநாயமதேயர் வழங்கிய துப்பினால் சீனா போரா காணாமல் போகவில்லை கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கக் தொடங்கினர். இந்திராணி முகர்ஜியின் வாகன ஓட்டுநர் சியாம் ராயின் கைதும், அவர் வழங்கிய வாக்குமூலத்தின் படி இந்திராணி முகர்ஜியும், அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணாவும் சீனா போராவை கொன்ற தகவல் தெரிய வந்தது.[1]

இதன் பின்னர் காவலதுறையினர் இந்திராணி முகர்ஜியை கைது செய்தனர்.[1] இந்தியக் குற்றப்பிரிவு 302(கொலை), 201(தடயங்களை அழித்தல்), 34(சதித் திட்டம்) போன்ற பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவரை வரும் ஆகஸ்ட் 31 வரை காவல்துறையினரது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாந்திரா பெருநகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[1]

சித்தார்த்தா தாஸ்[தொகு]

சீனா போராவின் தந்தை சித்தார்த்தா தாசை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.சில்லாங்கில் கல்லூரியில் படிக்கின்ற சமயத்தில் இந்திராணியை சந்தித்திருக்கின்றார் சித்தார்த்தா. அதன் பின் சித்தார்த்தா தாஸ், இந்திராணி ஆகியோர் மணம் புரியாமலேயே இந்திராணியின் பெற்றோரது வீட்டில் ஒன்றிணைந்து வாழ்ந்ததாகவும். அச்சமயத்தில், அவர்களுக்கு சீனா போரா, மிக்கேல் போரா ஆகிய இருவரும் பிறந்ததாகவும் கூறியிருக்கின்றார். சீனா போராவின் பிறந்த நாள் பிப்ரவரி 11, 1987 எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்[4]. இந்திராணி முகர்ஜி பணத்தாசை பிடித்தவர் எனவும், அதனாலேயே தன்னை விட்டு பிரிந்து போனார் எனவும், கௌகாத்தியில் வசித்திருந்த சமயம், இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு திடிரென ஒரு நாள் இந்திராணி போய்விட்டார் எனவும். அவரை பலமுறை சில்லாங்கில் போய் தேடியதாகவும், ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை எனவும் கூறியிருக்கின்றார். மீண்டும் கௌகாத்தியில் தம் பிள்ளைகளிடம் வந்த சமயம், இந்திராணியின் பெற்றோர் அவரை அவமானப்படுத்தி துரத்தி விட்டனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.[5]. அச் சமயத்தில் பொறுப்பற்றிருந்தேன் எனவும், அது தான் செய்த தவறு எனவும், தமது பிள்ளைகளை தன்னோடு வைத்திருக்க விரும்பியதாகவும், ஆனால் இந்திராணியின் பெற்றோர் மறுத்துவிட்டனர் எனவும் தெரிவித்திருக்கின்றார்.[2]

அதன் பின் சித்தார்த்தா தாஸ் கொல்கத்தாவில் இனிப்புக் கடையில் வேலை பார்த்திருக்கின்றார். பலமுறை பிள்ளைகளை காண கௌகாத்திக்கு போயிருக்கின்றார். ஆனால், இந்திராணியின் பெற்றோர்கள் அவரை தடுத்துவிட்டனர். 1998-யில் சித்தார்த்தா பாப்லி என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார். 2000-ஆவது ஆண்டு கௌகாத்தி சென்று சீனா போராவை சந்தித்ததாகவும், அவருடைய தொலைபேசி எண்ணைக் கூட மகளிடம் தந்துவிட்டு போனதாகவும், அதன் பின் ஒருமுறை சீனாவோடு பேசியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க விரும்புவதாகவும், ஆனால் அவருடைய மகன் இந்த ஆண்டு தான் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பதாகவும், மகனி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருடைய புகைப்படத்தை வெளியிட வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கின்றார். "இந்திராணியைப் பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை, கடந்தவை கடந்தவையே" என சித்தார்த்தாவின் மனைவி பாப்லியும் தெரிவித்திருக்கின்றார்[6].

முடிவு[தொகு]

சீனா போராவை தான் கொலை செய்ததாக இந்திராணி முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். பல நாட்களாக சீனா போரா அமெரிக்காவில் வசிப்பதாகக் கூறிவந்த இவர் செய்திகளில் வந்த தகவல்களால் ஒப்புக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[7][8] இதற்கிடையில் இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜியை சிபிஐ அதிகாரிகள் 19 ஆம் திகதி நவம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு கைது செய்தனர்.[9]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 "Who's who". The Huffington Post. http://www.huffingtonpost.in/2015/08/28/indrani-mukerjea_n_8047866.html. பார்த்த நாள்: Aug 2015. 
  2. Prabin Kalita (30 Aug 2015). "Indrani is my daughter: Upendra". Times of India. http://timesofindia.indiatimes.com/city/guwahati/Indrani-is-my-daughter-Upendra/articleshow/48726016.cms. பார்த்த நாள்: 31 Aug 2015. 
  3. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Indrani-lived-in-with-Kolkata-bizman-in-90/articleshow/48750289.cms
  4. http://indianexpress.com/article/india/india-others/indrani-mukerjeas-first-husband-siddhartha-das-traced-in-kolkata-report/
  5. http://timesofindia.indiatimes.com/india/I-am-father-of-Sheena-and-Mikhail-Indrani-was-money-minded-Siddhartha-Das/articleshow/48753596.cms
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-03. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.
  7. Bora Murder: Indrani Mukerjea to be produced in court
  8. போராவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் இந்திராணி? - ஊடகங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு தி இந்து தமிழ் 05 செப்டம்பர் 2015
  9. போரா கொலை வழக்கில் இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி கைது தி இந்து தமிழ் 20 நவம்பர் 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனா_போரா_கொலை_வழக்கு&oldid=3554843" இலிருந்து மீள்விக்கப்பட்டது