சீக்கியக் கலையும் பண்பாடும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீக்கியக் கலையும் பண்பாடும் என்பது, சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களான பஞ்சாபியரின் மரபுவழியான கலையையும் பண்பாட்டையும் குறிக்கும். 23 மில்லியன் பின்பற்றுபவர்களைக் கொண்ட சீக்கிய மதம் உலகின் ஐந்தாவது பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட மதம். சீக்கிய வரலாறு 500 ஆண்டுகள் மட்டுமே எனினும், சீக்கியர்கள் தமக்கான தனித்துவமான கலை, பண்பாட்டு வெளிப்பாடுகளை வளர்த்துள்ளனர். இந்த வெளிப்பாடுகள் அவர்களது சீக்கிய மதத்தின் செல்வாக்காலும், பிற பண்பாட்டுகளின் கலப்பினாலும் உருவானவை. சீக்கியமே பஞ்சாப் பகுதியில் உருவான ஒரே மதம். அங்கு பின்பற்றப்படும் பிற மதங்கள் அப்பகுதிக்கு வெளியில் இருந்து கொண்டுவரப்பட்டவை. எல்லா சீக்கியக் குருமாரும், சீக்கிய வரலாற்றில் அதற்காகத் தமது உயிரை ஈந்தவர்களும் பஞ்சாபி மக்களே. பஞ்சாபிப் பண்பாடும், சீக்கியமும் பிரிக்க முடியாதபடி கலந்திருப்பவை என்று கருதப்படுகிறது. சீக்கியர் என்பது குறித்த மதத்தைப் பின்பற்றும் எவரையும் குறிப்பதேயன்றி அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. ஆனாலும், சீக்கியமதம் மிக அரிதாகவே மதமாற்றத்தை நாடுவதால், பெரும்பாலான சீக்கியர்கள் வலுவான இன-மத பிணைப்பைக் கொண்டவர்களாக உள்ளனர். இதன் காரணமாக ஐக்கிய இராச்சியத்தைப் போன்ற பல நாடுகள் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்களில், சீக்கியர்களைத் தனி இனமாகக் கொள்கின்றனர்.[1] அமெரிக்க இலாபநோக்கற்ற நிறுவனமான "ஒன்றிய சீக்கியர்" (United Sikhs) என்னும் அமைப்பு, சீக்கியர் தம்மைத் தனியான சிறுபான்மை இனத்தவராக அடையாளம் காண்கின்றனர் என்றும் அது ஒரு மதம் என்பதற்கும் அப்பாற்பட்டது என்றும் வாதிப்பதன் மூலம், ஐக்கிய அமெரிக்காவிலும் இவ்வாறான அங்கீகாரத்தைப் போராடிப் பெற்றுள்ளது.[2]

சீக்கியப் பண்பாடும் பஞ்சாபிப் பண்பாடும்[தொகு]

சீக்கியக் கலையும் பண்பாடும் என்பது பஞ்சாப் பகுதி என்பதுடன் இணைந்தது. இந்தியாவுக்குள் படையெடுத்து வந்த முகலாயர், பாரசீகர் போன்றோரின் பண்பாடுகளோடு கலந்ததின் விளைவாக பஞ்சாப் பகுதியை இந்தியாவின் கலப்புப் பண்பாட்டுப் பகுதி என்கின்றனர்.[3] எனவே சீக்கியப் பண்பாடும் பெருமளவுக்கு இந்தக் கலப்பின் விளைவே.

சீக்கியம் தனித்துவமான கட்டிடக்கலைப் பாணியை உருவாக்கியுள்ளது. சீக்கியக் கட்டிடக்கலை குரு நானக்கின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. சீக்கியக் கட்டிடக்கலை நடைமுறை ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட முழுதளாவிய மனிதநேயத்தின் அடையாளம் என்று பாத்தி (Bhatti) என்பவர் குறிப்பிட்டுள்ளார்.[4] சீக்கியக் கட்டிடக்கலையின் சிறப்பு குருத்துவாரா ஆகும். இது இசுலாமிய, சூஃபி, இந்துப் பண்பாடுகளின் செல்வாக்குகளை வெளிக்காட்டுவதன் மூலம் பஞ்சாப் பகுதியின் கலப்புப் பண்பாட்டுத் தன்மையை உருவகப்படுத்துகிறது. சீக்கியப் பேரரசின் ஆட்சிக்காலமே தனித்துவமான சீக்கிய வெளிப்பாட்டு வடிவத்தை உருவாக்குவதில் முக்கிய ஊக்கியாகச் செயற்பட்டது. இக்காலத்தில் மகாராசா ரஞ்சித் சிங்கின் ஆட்சியின்போது சீக்கியப் பாணியிலான கட்டிடங்கள், கோட்டைகள், மாளிகைகள், பங்காக்கள் (தங்குமிடங்கள்), கல்லூரிகள் போன்றவை கட்டப்பட்டன. சீக்கியப் பாணியில் கட்டப்பட்ட கட்டிடங்களுள் சிறப்பானதாகக் கருதப்படுவது அர்மந்திர் சாகிப் ஆகும்.

சீக்கியப் பண்பாடு பெருமளவு போர்சார்ந்த கருத்துருக்களின் செல்வாக்குக்கு உட்பட்டது. சீக்கியச் சின்னமான "கண்டா" இதற்கு எடுத்துக்காட்டு. எனவே குருமாரின் நினைவுப் பொருட்கள் தவிர்ந்த, பெரும்பாலான சீக்கியக் கலைப்பொருட்கள் போர்க் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. இக்கருத்துக்களின் தாக்கத்தை சீக்கியரின் ஓலா மொகல்லா, வாசாக்கி போன்ற விழாக்களிலும் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Petition to Disaggregate Sikhs Correctly in the 2010 Census". 16 செப்டம்பர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Memorandum Regarding the Tabulation of Sikh Ethnicity in the United States Census" (PDF). 24 பிப்ரவரி 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 20 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. the Crafts of the Punjab
  4. The magnificence of Sikh architecture