சி. சபாரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவாசக சுவாமிகள் என அழைக்கப்படும் சபாரத்தினம் சுவாமிகள் (மார்ச் 28, 1904 - சனவரி 25, 1988) தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரத்தில் சிவதொண்டுகள் புரிந்து தவ வாழ்வினை மேற்கொண்டவர். அங்கு திருவாசக மடம் ஒன்றை நிறுவி அடியார்களுக்கு அமுதளித்து திருவாசக உரையையும் வழங்கி வந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

திருவாசக சுவாமிகள் 1904 ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் திருவாதிரை நாளில் யாழ்ப்பாணம் அல்வாயைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவருக்கும் சுண்டிக்குளியில் பாண்டியன் தாழ்வில் வசித்த சின்னத்தங்கத்திற்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இளமையிலே யோகர் சுவாமிகளின் அருட்பார்வை இவருக்கும் கிட்டியது.

ஆரம்பக்கல்வியை கொழும்புத்துறை சைவப் பாடசாலையில் கற்றார். பின்பு கொழும்புத்துறைக் கத்தோலிக்க பாடசாலையில் கற்று ஆசிரியப் பயிற்சி கல்லூரிக்குத் தெரிவாகியதும் மதம் மாற வேண்டும் என வற்புறுத்தப்பட்டதால் வெளியேறினார். பின் கொழும்புத்துறைச் சைவப் பாடசாலையில் சிலகாலம் ஆசிரியராகக் கடமையாற்றினார். அங்கிருந்தும் வெளியேறித் திருமணம் செய்தார். குறுகியகாலத்தில் குழந்தைகள் இல்லாமலே மனைவியும் இறந்தார்.

தொண்டுகள்[தொகு]

திருக்கேதீச்சரத்தில் மடம் அமைப்பதற்காக தானே அனுமதிப்பத்திரத்தைப் பெற்று சுவாமிகள் காட்டில் பெரிய மரங்களை வெட்டித் தோளில் சுமந்து கொண்டு வந்து வண்டிகளில் ஏற்றியவர். இந்த திருவாசக மடத்தை அமைக்க கல்லும் மண்ணும் சுமந்தார். இந்த திருவாசக மடத்தை அமைப்பதற்குமுன்பு அதாவது சனநடமாட்ட மில்லாத காலத்தில் சுவாமிகள் திருக்கேதீச்சரம் சென்று குடிசை அமைத்து விவசாயம் செய்தார். இந்த உழைப்பில் பெற்ற ஊதியத்தில் விருந்தோம்பல் செய்தார். த்னது திருவாசக மடத்துக்கு வரும் அடியார்களுக்கு திருவாசக உரை வழங்கி வந்தார்.

சபாரத்தினம் சுவாமிகள் அங்கே கௌரீசர் பாடசாலை, நெசவுப் பாடசாலைகளை நிறுவி நடத்தி வந்தார்.

இறுதி நாட்கள்[தொகு]

இறுதி நாட்களில் சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார். நாள்தோறும் சுவாமியைச் சந்தித்து உரையாடவும் ஆசீர்வாதம் பெறவும் அவருடைய திருவாசக உரைகளைக் கேட்கவும் அடியார்கள் கூடுவார்கள். 1988 ஆம் ஆண்டு தை மாதம் பூர்வ பக்க சப்தமி திதியில் அவரது சுண்டிக்குளி இல்லத்தில் காலமானார். அவரது அஸ்தி அடங்கிய நினைவாலயம் ஒன்று மறவன்புலவில் அமைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சபாரத்தினம்&oldid=1217146" இருந்து மீள்விக்கப்பட்டது