சிவவாக்கியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவவாக்கியர் என்னும் சித்தர், பதினெண் சித்தர்களில் ஒருவராக எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர்.

அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு. அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம்.

சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும்(வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார்.

சிவவாக்கியார்

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!

உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?

ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.

அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலங்களும் அனாதியோ?
உயிரி்ருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம்
உயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதடா
உயிரையும் உடம்பையும் ஒன்று விப்ப தேதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா?

"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துகளுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார்.


சிவவாக்கியர் இயற்றிய நூல்கள் என்னவென்று காண்போம்.

அனைவரும் அறிந்திருப்பது, சிவவாக்கியச் சித்தர் இயற்றிய ஞானயோக புரட்சி பாடல்கள்; பெரிய ஞானக் கோவையில் வெளிவந்த 520 பாடல்கள் மட்டுமே. அதைத் தாண்டி சில நூல்கள் வெளிவந்துள்ளன. அதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


1.சிவவாக்கியர் பாடல்கள் 500[1]

1. சிவவாக்கியர் பாடல்கள் 500[2]

1927ஆம் ஆண்டு பெரிய ஞானக் கோவையில் ஒரு பகுதியாக சிவவாக்கியர் பாடல்கள் மொத்தம் 518 பாடல்களுடன் விளக்க உரை இன்றி வெளிவந்து உள்ளது. அதே  பெரிய ஞானக் கோவையின் 2016ஆம் ஆண்டு பதிப்பில் 550 சிவவாக்கியர் பாடல்கள்  வெளிவந்துள்ளன.

அது போல 1933 ஆம் ஆண்டு மாங்காடு வடிவேலு முதலியார் அவர்களால் 519 பாடல்கள் *விளக்கவுரையுடன்* இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் பதிப்பின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்தும் அந்த விளக்கவுரை திருப்திகரமாக இல்லை. இது பெரிய சிவவாக்கியர் பாடல் என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.


2. சிவவாக்கியம் 1000[3]

1000 பாடல்களைக் கொண்ட நூலினை சிறுமணவூர் முனுசாமி முதலியார் அவர்கள் 1903 ஆம் ஆண்டு சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார். இதில் மருத்துவ செய்திகளும் பெருமருந்தும் அடக்கம்.

இதில் மேலே கூறிய 550 பாடல்களும் அடக்கம். இதற்கு விளக்கவுரை இன்னும் வெளிவரவில்லை


3. சிவவாக்கியர் நாடி 31

இந்நூல் பதினெண் சித்தர் நாடி சாஸ்திரம் என்னும் ஒரு நூலின் பகுதியாக வெளிவந்துள்ளது. இது வாத பித்த ஐயங்கள் பற்றிய ஞானத்தை கொடுக்கும் ஒரு நூலாக உள்ளது.


4. சிவவாக்கியர் 100

இது நூறு பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது. இது 1925ஆம் ஆண்டு பி.வே நமச்சிவாய முதலியார் அவர்களால் பதிக்கப்பட்டது. இந்த நூறு பாடல்களும் ஏற்கனவே பார்த்த ஆயிர பாடல்களில் அடக்கம்.


5. சிவவாக்கியர் அவத்தி எண்ணெய்

இது பதினெண் சித்தர் வைத்திய சிரோரத்ன நடன காண்டம் 1500 என்ற நூலில் நான்கு பாடல்கள் மட்டும் சிவவாக்கியர் இயற்றியதாக காணப்படுகிறது.


6. சிவவாக்கியர் 1200

இது பற்றிய தகவல் அகசான்றாக பஞ்சகாவிய நிகண்டு என்ற நூலில் உள்ளது. இந்த நூல் கிடைக்கவில்லை.

இதை சிவவாக்கியருடைய பெருநூலாக கருதலாம். சிவவாக்கியர் 1000 என்பது இந்த நூலின் பகுதியா என்பது ஆராயத்தக்கது.


7. சிவவாக்கிய மந்திரம்.

8. சிவவாக்கியர் குணவாகடம்.

9. சிவவாக்கியர் சூத்திரம் -33.

இந்த மூன்று நூல்களும் மின்னூல் ஆக்கப்பட்டதாக முன்சிறை சித்த மருத்துவர் மோகன்ராஜ் அவர்கள் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நூல்களின் பெருமை, பொருண்மை இவை வெளிவந்தால் தான் தெரியும்.

10.சிவவாக்கியர் விருத்தம்

இந்நூலினை சுபாஷினி(தமிழ் மரபு அறக்கட்டளை) அவர்கள் ராயல் லைப்ரரி, கோபென்ஹஜென் இல் இருந்து மின்னூல் ஆக்கி உள்ளதாக தமிழ் மரபு அறக்கட்டளை வலைத்தளத்தில் கூறியுள்ளார். இவை வெளிவந்தால் தான் இவை ஏற்கனவே வந்துள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும்.[4]

உசாத் துணை[தொகு]

இரா.இளங்குமரன், சித்தர் பாடல்கள்: சிவவாக்கியர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1984, பக்கங்கள் 1 - 126

சிவவாக்கியர் இயற்றிய நூல்கள்[தொகு]

  1. "சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1". சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  2. "சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1". சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  3. "சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1". சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  4. "சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1". சிவவாக்கியரும் சித்த மருத்துவ நூல்கள் ஆராய்ச்சியும்-1. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவவாக்கியர்&oldid=3694642" இலிருந்து மீள்விக்கப்பட்டது