சிவகங்கை இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவகங்கை இராமச்சந்திரன்(செப்டம்பர் 16, 1884-பிப்பிரவரி 26, 1933) வழக்கறிஞராகவும் தந்தை பெரியாரின் தோழராகவும் சாதி ஒழிப்பில் முனைப்பாளராகவும் தென் தமிழ்நாட்டில் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். ஆதி திராவிடத் தமிழர்களும் தாழ்த்தப்பட்டோரும் கோவில்களில் தடையின்றி சென்று வழிபட பாடுபட்டார். தாழ்த்தப்பட்டோர் கல்வி பெற இரவுப் பள்ளிகளைத் தம் சொந்தச் செலவில் கட்டி அவர்கள் கல்வியறிவு பெற உதவினார். 1929இல் செங்கல்பட்டில் நடந்த சுய மரியாதை இயக்க மாநாட்டில் தம் சாதிப் பட்டமான 'சேர்வை' என்பதைத் துறப்பதாக அறிவித்து அந்நாளிலிருந்து சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அவர் மக்களால் அறியப்பட்டார். அந்தக் காலத்தில் நாடார் என்னும் பிரிவினர் கோவில்களிலும் அக்கிரக்காரத் தெருக்களிலும் நுழையவும் நடக்கவும் முடியாத சூழ்நிலை நிலவியது. இருப்பினும் சிவகங்கை இராமச்சந்திரன் இராமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டியில் தலைவர் பதவியில் இருந்தபோது பி. எஸ். சிதம்பரம் (நாடார்) என்ற நாடார் இனத்தவரை உறுப்பினராக அமர்த்தினார். 1932 சூன் திங்களில் அவர் நோய்வாய்ப்பட்டபோது வி. வி. இராமசாமி என்ற நாடார் இனத்தவரை தாம் வகித்த தலைவர் பதவிக்கு, தேவஸ்தானம் கமிட்டி சிறப்புக் கூட்டத்தை கூட்டி தேர்ந்தெடுக்கச் செய்தார்.

1930 அக்டோபரில் நீதிக்கட்சி அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்க அழைப்பு வந்தபோதும் அதனை ஏற்காமல் சுய மரியாதை இயக்கப் பணியில் முழுமையாகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டு உழைத்தார்.

இளமையும் கல்வியும்[தொகு]

திருவனந்தபுரம் உயர்நிலைப்பள்ளியில் பயின்று மெட்ரிக்குலேசன் தேர்வில் வெற்றி பெற்றார். மதுரையிலும் பின்னர் திருச்சியிலும் பயின்று பி.ஏ பட்டம் பெற்றார். 1913 இல் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்தார். இரண்டு ஆண்டுகள் கல்விக்குப்பின் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். மதுரையில் தம் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். 1916இல் தம் சொந்த ஊரான சிவகங்கைக்குத் திரும்பி அங்கேயே வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

இயக்க வாழ்க்கை[தொகு]

20-11-1916 இல் சர்.பிட்டி தியாகராயர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் உரிமை சாசனம் இராமச்சந்திரன் மனத்தில் ஆழமான எண்ணங்களை ஏற்படுத்தியது. 97 விழுக்காட்டு எளிய மக்கள் ஏற்றம் பெறவும் வேலை வாய்ப்புகள் பெறவும் உரிமைகளை அடையவும் வேண்டும் என்பதை உணர்ந்தார்.

1925 இல் அனைத்திந்திய பார்ப்பனரல்லாதார் காங்கிரசு என்னும் கூட்டம் வடஇந்தியாவில் உள்ள அம்ரோட்டில் நடந்தது. பனகல் அரசர் தலைமையில் ஒரு குழு சென்று கலந்து கொண்டது. அதில் இராமச்சந்திரன் சுய மரியாதைத் தீர்மானம் பனகல் அரசரின் பாராட்டைப் பெற்றது

1926ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் மதுரை மாகாண பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டை ஏ.பி.பாத்ரோ தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.

1929ஆம் ஆண்டு பிப்பிரவரி 17 இல் செங்கல்பட்டு மாநாட்டில் வருணாசிரமக் கோட்பாட்டைக் கண்டித்தும் தமிழர்கள் இனிமேல் தம் சாதிப் பட்டங்களை விட்டொழிக்கவேண்டும் என்றும் தீர்மானத்தை முன்மொழிந்தார் இராமச்சந்திரன். அந்தத் தீர்மானம் தந்தை பெரியாரால் வழிமொழியப்பட்டது. அன்று முதல் "சேர்வை" என்னும் பட்டத்தை இராமச்சந்திரன் கைவிட்டார்.

1930 மே திங்களில் ஈரோட்டில் சுய மரியாதை மாநாட்டில் நடந்த மதுவிலக்கு மாநாட்டிற்குத் தலைமை ஏற்று உரையாற்றினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெண்கள் விடுதலை மாநாட்டில் தலைமை ஏற்றார். இவ்வாறு தம் இறுதிக் காலம் வரை பல்வேறு மாநாடுகளை நடத்தினார். தொடர்ந்து சுயமரியாதை கொள்கைகளைப் பரப்பினார்.

1930 ஆம் ஆண்டு அக்டோபரில் முனுசாமி நாயுடு தலைமையில் அமைந்த நீதிக்கட்சி அமைச்சரவையில் பங்கேற்க வருமாறு சிவகங்கை இராமச்சந்திரனுக்கு அழைப்பு வந்தபோதிலும் தந்தை பெரியாரின் அறிவுரையின்படி அப்பதவியை அவர் நாடிச் செல்லவில்லை. சுயமரியாதை இயக்கத்துக்கு முழுதும் ஒப்படைத்துக்கொண்டார். அவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த காலத்தில் குடிநீர்ப் பானைகளிலும் சாதி வேறுபாடுகள் காட்டப்பட்டன. அவ் வழக்கத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.

குடும்பம்[தொகு]

கிருட்டினம்மமாள் என்னும் படித்த பெண்மணியை மணந்தார். கிருட்டினம்மாளும் தம் கணவரின் கொள்கைகளுக்கும் முற்போக்கு எண்ணங்களுக்கும் உறுதுணையாக இருந்தார். அவர்களின் குடும்பம் ஒரு கொள்கைக் குடும்பம். நான்கு ஆண் இரண்டு பெண் மக்களை அவர்கள் பெற்றனர். 1926 இல் பிறந்த ஆண் மகவுக்கு சர் பிட்டி தியாகராயர் நினைவாக 'தியாகராசன்' என்று பெயர் சூட்டி பெருமிதம் அடைந்தார். சிவகங்கை இராமச்சந்திரனார். 49 ஆண்டுகள் வாழ்ந்து 1933 ஆம் ஆண்டு பிப்பிரவரி 26 ஆம் தேதி அன்று காலமானார்.

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • சிவகங்கை இராமச்சந்திரனார் (ஆசிரியர், கொடைக்கானல் காந்தி, இராஜராஜன்-இராஜமாறன் பதிப்பகம்.
  • http://www.unmaionline.com/new/1037-maruthiruvar.html