உள்ளடக்கத்துக்குச் செல்

சிறை (2025 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறை (2025 திரைப்படம்)
திரைப்பட பதாகை
இயக்கம்சுரேஷ் இராஜ்குமாரி
தயாரிப்புலலித் குமார்
திரைக்கதை
  • தமிழ்
  • சுரேஷ் இராஜ்குமாரி
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு
  • விக்ரம் பிரபு
  • எல்கே அக்சைய குமார்
  • ஆனந்தா தம்பிராஜா
  • அனிஸ்மா அணில்குமார்
ஒளிப்பதிவுமாதேஷ் மாணிக்கம்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்செவன் சிகிரீன் ஸ்டுடியோ
வெளியீடு25 டிசம்பர் 2025 (2025-12-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிறை என்பது 2025-ல் வெளியான ஒரு தமிழ் குற்றப் பின்னணி திரைப்படம் ஆகும். இக்கதையை எழுதிய 'தமிழ்' என்பவருடன் இணைந்து, அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக எஸ். எஸ். லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் விக்ரம் பிரபு, எல்.கே. அக்சய் குமார் (அறிமுக நாயகன்) மற்றும் அனிஷ்மா அனில்குமார் (தமிழில் அறிமுக நடிகை) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் தமிழின் முதல் படத்திற்குப் பிறகு, விக்ரம் பிரபுவும் அவரும் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும்.

இப்படம் 2025 டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலிலும் பெரும் வெற்றி அடைந்தது.[1]

கதைச் சுருக்கம்

[தொகு]

கதிரவன் (விக்ரம் பிரபு) தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றும் நேர்மையான காவலர். அவரது மனைவி மரியமும் (ஆனந்தா தம்பிராஜா) காவல்துறையில் பணிபுரிகிறார். கதிரவனின் பணி விசாரணைக் கைதிகளை பொதுப் போக்குவரத்து வசதிகளில் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறைக்கு அழைத்து வருவது.

2003ஆம் ஆண்டு, ஒரு முறை கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது, அந்தக் கைதி தப்பி ஓட முயற்சி செய்ய, கதிரவன் துப்பாக்கியால் சுட நேரிடுகிறது. அதில் அந்தக் கைதி இறந்துபோக, கதிரவன் மீது துப்பாக்கியை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாக விசாரணை தொடங்குகிறது.

இந்நிலையில், கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக ஐந்து ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் அப்துல் ராவூஃப் (எல்.கே. அக்ஷய் குமார்) என்ற இளைஞரை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொறுப்பு கதிரவனுக்கு வழங்கப்படுகிறது. கதிரவன் மற்றும் இரு காவலர்கள் (ஹரிசங்கர் நாராயணன் மற்றும் ரகு இசக்கி) அப்துலை அழைத்துச் செல்ல அரசுப் பேருந்தில் புறப்படுகின்றனர்.

பயணத்தின்போது, கதிரவனுக்கும் அப்துலுக்கும் இடையே உரையாடல்கள் நடைபெறுகின்றன. வழியில் ஒரு கிராமத்தில் நடைபெறும் எதிர்பாராத பிரச்சினையில் காவலர்கள் சிக்கிக்கொள்கின்றனர். இந்நிலையில் காவலரின் துப்பாக்கியுடன் அப்துல் ராவூஃப் தப்பி ஓடிவிடுகிறார்.

அப்துல் யார்? அவர் ஏன் சிறையில் இருக்கிறார்? அவரது பின்னணி என்ன? ஏன் தப்பி ஓடினார்? கதிரவன் அவரைக் கண்டுபிடிப்பாரா? அப்துலைத் தேடிச் செல்லும் கதிரவன், அவரது வாழ்க்கையைப் பற்றிய பல உண்மைகளை அறிகிறார். இருவரின் மனவோட்டங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் படத்தின் மீதிக் கதையை நகர்த்துகின்றன.

படம் ஆயுதப்படை காவலர்களின் பணிச்சுமை மற்றும் சவால்களையும், விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் இருப்போரின் நிலையையும், காவல்துறையின் அமைப்பு முறைகளையும், சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சமூக அநீதிகளையும் உணர்வுபூர்வமான பரபரப்பு பாணியில் சித்தரிக்கிறது. ஒரு நேர்மையான காவலர் தனது கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையே சிக்கும் போராட்டமும், நீதிக்கான அவரது முயற்சியும் படத்தின் மையக்கருவாக அமைகிறது.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மன்னிச்சுரு"  சத்ய பிரகாஷ், ஆனந்தி ஜோஷி  
2. "மின்னு வட்டாம் பூச்சி"  யுவன் சங்கர் ராஜா, பத்மஜா சீனிவாசன்  
3. "நீலோத்தி"  சூரஜ் சந்தோஷ், சின்மயி  

தயாரிப்பு

[தொகு]

இது விக்ரம் பிரபுவும் இயக்குநர் தமிழும் டாணாக்காரன் படத்திற்கு பிறகு இணையும் இரண்டாவது படம். டாணாக்காரன் படத்தில் இயக்குநராக இருந்த தமிழ் இப்படத்திற்கு கதையை சுரேஷ் இராஜ்குமாரியுடன் இணைந்து எழுதினார். இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் இராஜ்குமாரி இதற்கு முன் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.[2]

விமர்சனங்கள்

[தொகு]

அனைத்து விமர்சனங்களிலும், காவலர் வாழ்க்கை பற்றிய யதார்த்தமான பதிவு, அதிகாரத்தின் மூலம் எளியவர்களுக்கு உதவுவது அகிய காரணங்களால் படத்தை பாராட்டினர். மேலும் தயாரிப்பாளர், லலித் குமாரின் மகன் எல். கே. அக்சைய குமார் முதல் படத்திலேயே நன்றாக நடித்துள்ளார் என்று கூறினர்.

தினமணி நாளிதழில் வந்த விமர்சனத்தில், "உண்மையான சம்பவம் என்பதால் படம் முடிவடையும்போது விக்ரம் பிரபு போன்ற காவலர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என எண்ண வைத்துவிடுவதே சிறையின் வெற்றி" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[3] தினமலர் நாளிதழில் வந்த விமர்சனத்தில், "எளியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதிபதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் காண்பித்து இருப்பது சபாஷ். கதை, திரைக்கதை, நடிப்பு, சொல்லும் விஷயம் என எல்லாற்றிலும் நிறைவாக இருக்கிறது 'சிறை'... ஒருவழியாக நல்ல தரமான சினிமாவுடன் விடை பெறுகிறது 2025" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[4]

ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "பரபரப்பு, எமோஷன் என இரண்டையும் கச்சிதமாகக் கொண்டுவந்து, திரையனுபவமாகவும், சமூக கருத்தாகவும் கவர்ந்து, நம் மனதைச் சிறைபிடிக்கிறது இந்த 'சிறை'" என்று எழுதினர்.[5] தினத்தந்தியில் வந்த விமர்சனத்தில், "டைரக்டர் தமிழ் எழுதிய இந்த கதையில் பரபரப்பும், விறுவிறுப்பும் கூட்டியதுடன், காவல்துறையில் நிலவும் அரசியலையும் ‘நறுக்' என்று சொல்லி குட்டு வைத்திருக்கிறார், இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி" என்று எழுதினர்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Johnson (2025-10-10). "சிறை படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! | Seven Screen Studio | Vikram Prabhu | LK Akshay Kumar". Puthiyathalaimurai. Archived from the original on 2025-10-12. Retrieved 2025-10-11.
  2. செய்திப்பிரிவு (2025-12-24). "'சிறை' இயக்குநருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு". Hindu Tamil Thisai. Retrieved 2025-12-28.
  3. சிவசங்கர் (2025-12-25). "காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்". Dinamani. Retrieved 2025-12-28.
  4. "சிறை - விமர்சனம் {3.5/5} : சிறை - ஒருவழியாக நல்ல தரமான சினிமாவுடன் விடை பெறுகிறது 2025 - Sirai". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2025-12-28.
  5. டீம், விகடன் (2025-12-25). "சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!". vikatan.com. Retrieved 2025-12-28.
  6. தினத்தந்தி (2025-12-26). "விக்ரம் பிரபுவின் "சிறை" படம் எப்படி இருக்கிறது?- விமர்சனம்". dailythanthi.com. Retrieved 2025-12-28.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறை_(2025_திரைப்படம்)&oldid=4561198" இலிருந்து மீள்விக்கப்பட்டது