சிறுநீர்க்குழல் உள்நோக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுநீர்க்குழல் உள்நோக்கல் (Ureteroscopy) என்பது சிறுநீர்க்குழலின் மேல் பகுதியைப் பற்றிய ஒரு பரிசோதனையாகும். சிறுநீர்க்குழல் உள்நோக்கி கருவியைக் கொண்டு இப்பரிசோதனை செய்யப்படுகிறது. சிறுநீர் வடிகுழாய் அல்லது சிறுநீர்ப் புறவழி மற்றும் சிறுநீர்ப்பை வழியாக நேரடியாக சிறுநீர்க்குழலுக்குள் இக்கருவி செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.[1] சிறுநீரக கற்கள் மற்றும் மேல் சிறுநீர் பாதையில் சிறுநீரகப் புற்றுநோய் போன்ற கோளாறுகளை கண்டறிந்து சிகிச்சையளிக்க இந்த செயல்முறை பயனுள்ளதாக இருக்கும்.[1] சிறுநீர்ப்பை அல்லது கீழ் சிறுநீர்க்குழாயில் உள்ள சிறிய கற்களை ஒரே துண்டாக அகற்றலாம். அதே நேரத்தில் பெரிய சிறுநீரகக் கற்களை சிறிய சிறிய துண்டுகளாக உடைத்த பின்னரே அகற்ற முடியும்.

நோயாளியை மயக்கநிலைக்கு கொண்டு சென்ற பிறகே சிறுநீர்க்குழல் உள்நோக்கல் பரிசோதனையை மேற்கொள்வார்கள். மயக்கநிலையில் உள்ள நோயாளிக்கு ஒரு நெகிழ்வான, அரை-கடினமான அல்லது கடினமான கருவியைக் கொண்டு இப்பரிசோதனை நடைபெறுகிறது. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பரிசோதனைக்குப் பிறகு உடனடியாக நோயாளி வீட்டிற்குச் செல்ல முடியும்.[2]

சிறுநீரகக்குழி உள்நோக்கலுக்கான சிறுநீர்க்குழல் உள்நோக்கி சிறுநீரக இடுப்புக்குழியின் அனைத்து வழிகளையும் நோக்கும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் சிறுநீரகத்தின் முழு வடிகால் அமைப்பையும் காட்சிப்படுத்தவும் முடியும்.[3] சிறுநீர்க்குழல் உள்நோக்கி கருவியில் சிறப்பு வடிவமைப்பாக அமைக்கப்பட்டுள்ள குமிழ்வழியில் லேசர் இழைகளைச் செலுத்தி சிறுநீரகக் கற்களை துண்டுகளாக உடைக்க முடியும். உடைக்கப்பட்ட கற்கள் பின்னர் மைக்ரோ அல்லது நுண்கூடைகள் மூலமாக நீக்கப்படுகின்றன.[3] 2 செ.மீ அளவுள்ள சிறுநீரக கற்களை சிறுநீரகக்குழி உள்நோக்கல் மூலம் அகற்றி சிகிச்சையளிக்க முடியும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]