சிறுகுளத்தூர் உடையான் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுகுளத்தூர் உடையான் கல்வெட்டு, என்பது இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரத்தில் கிடைத்த ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். சோழர்காலக் கல்வெட்டான இதில் அரசனின் மெய்க்கீர்த்தியோ ஆட்சியாண்டோ இல்லை. இக்கல்வெட்டில், சிறுகுளத்தூர் உடையான் என்பவன் திருவிராமீஸ்வரம் என்னும் கோயிலுக்கு வழங்கிய கொடைகளைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. தூணொன்றின் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டின் 29 வரிகள் மட்டுமே கிடைத்துள்ளன. மிகுதிப் பகுதி எழுதப்பட்டிருந்த தூணின் பகுதி அகப்படவில்லை. இது தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளது.[1]

காலம்[தொகு]

இக்கல்வெட்டில் மெய்க்கீர்த்தியும் நேரடியாக அரசன் பெயரும் இடம்பெறாவிட்டாலும், இக்கல்வெட்டுக் குறிக்கும் தானத்தை ஏற்படுத்தியவனான சிறுகுளத்தூர் உடையானை, "உடையார் சிறீ இராசேந்திர சோழதேவர் பெருந்தனத்துப் பணிமகன்" என்ற குறிப்புக் காணப்படுவதால்,[2] குறித்த கொடையாளி இராசேந்திர சோழன் காலத்தவன் என்பதும், கல்வெட்டு அக்காலத்தில் எழுதப்பட்டது என்பதும் வெளிப்படை.

உள்ளடக்கம்[தொகு]

இக்கல்வெட்டுக் குறிப்பிடும் தானம், மாதோட்டத்துத் திருவிராமீஸ்வரம் கோயிலில் சந்தி விளக்கு எரிப்பதற்கானது. இத்தானம் வேண்டிய பொருட்களைக் கோயிலுக்கு வழங்க வணிகர்களிடம் தனித்தனியாகக் கையளிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. எண்ணெய் வணிகரான சங்கரபாடியர் இரண்டு காசுகளையும், வெற்றிலை வணிகர் ஒரு காசையும், வாழைக்காய் வணிகர் ஒரு காசையும் பொறுப்பேற்றனர்.[3] இவ்வணிகர்கள் மாதோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கட்வெட்டிலிருந்து தெரியவருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பத்மநாதன், செ., 2006. பக். 70.
  2. பத்மநாதன், செ., 2006. பக். 70, 71.
  3. பத்மநாதன், செ., 2006. பக். 71.

உசாத்துணைகள்[தொகு]

  • பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]