சிறீபதி சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறீபதி சந்திரசேகர் (Sripati Chandrasekhar, நவம்பர் 12, 1918-- சூன் 14, 2001) என்பவர் கல்வியாளர், நூலாசிரியர், இந்திய நடுவணரசு அமைச்சர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். மக்கள்தொகையியலில் முனைந்தவரும் செயல்பாட்டாளரும் ஆவார்.

கல்வி[தொகு]

சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முது அறிவியல் பட்டமும் 1944 ஆம் ஆண்டில் நியூயார்க்கு பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் மக்கள் தொகை சிக்கல்கள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

பணிகள்[தொகு]

பென்சில்வேனியா பல்கலைக் கழகம் கலிபோர்னியா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணி செய்தார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொருளியல் பேராசிரியராகவும் பின்னர் அங்கேயே துணைவேந்தராகவும் பணி செய்தார். மக்கள் தொகை குறித்து ஆய்வு நடத்த ஒரு நிறுவனத்தை நடத்தியும் ஓர் இதழை ( Population Review) வெளியிட்டும் வந்தார். மக்கள் தொகையியல் என்னும் பொருண்மையில் பல பேருரைகள் நிகழ்த்தியவர். கருத்தடை, கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகிய கருத்துகளைப் பரப்புவதே அவருடைய முகாமையான செயல்பாடுகளாக இருந்தன. மாட்டுக் கறி சாப்பிடுதல் நல்லது என்னும் கருத்தை வலியுறுத்தினார். 1964 ஆம் ஆண்டில் மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார் 1967 இல் இந்திரா காந்தி தலைமையில் இந்திய நடுவணரசு அமைச்சரவையில் இடம்பெற்று சுகாதார, குடும்பக் கட்டுப்பாடு துறைக்கு அமைச்சர் ஆனார். இந்திய அரசில் அமைச்சராக இருந்தபோது பெரியார் ஈ.வெ.இராமசாமியைச் சந்திரசேகர் பேட்டி கண்டார். அவ்வுரையாடல் சென்னை வானொலியில் 1970 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 8 ஆம் பக்கலில் ஒலிப்பரப்பானது. "எல்லாவற்றிலும் ஆணுக்கு 50 விழுக்காடு, பெண்ணுக்கு 50 விழுக்காடு எனப் பங்களித்தால் ஆண் பெண் வேறுபாடு மறையும்" என்று பெரியார் அப்பேட்டியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் முனைவர் சந்திரசேகர் சான் டீ கோ நகரில் காலமானார்.

எழுதிய முக்கிய நூல்கள்[தொகு]

  • Population and Planned Parenthood in India
  • Hungry People and Empty Hands (1953)
  • Red China Today (1963)
  • American Aid and India's Economic Development (1965)

சான்றுகள்[தொகு]

  • Sripati Chandrasekhar, Indian Demographer, Dies at 83, தி நியூயார்க் டைம்சு, நாள்: ஜூன் 23, 2001
  • Dr. S. Chandrasekhar passes away, நாளிதழ்: தி இந்து, நாள்: ஜூன் 17, 2001
  • பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், பக்கம் 3007, பதிப்பாசிரியர்:வே.ஆனைமுத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீபதி_சந்திரசேகர்&oldid=3157941" இலிருந்து மீள்விக்கப்பட்டது